Tuesday, September 2, 2014

குருநாதரைப் பற்றி நமக்கு அருணகிரிநாதர் இப்படிச் சொல்கிறார்.




அருணகிரிநாதர் சொல்லும் ஆசார்ய மகிமை
உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அதே சமயம், செல்வம் சுலபமாக அதாவது கஷ்டப்படாமல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இது நடக்கக்கூடிய காரியமா?
அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான 'ஞானத்தை' நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்?
குருவால் மட்டும்தான் முடியும். எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' என்றே ஒரு திருநாமமும் உண்டு.
இப்படிப்பட்ட குருநாதரைப் பற்றி நமக்கு அருணகிரிநாதர் சொல்கிறார். அவருடைய முதல் பாடல் 'முத்தைத்தரு' எனும் பாடல். அப்பாடலில்,
முத்தைத்தரு பத்தித்திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக்குருபர எனவோதும்
முக்கட்பர மர்க்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து.............
என்கிறார்.
அருணகிரிநாதரின் வாக்குப்படி இவ்வார்த்தைகள் சிவபெருமானால் சொல்லப்பட்டவை. அதாவது, "முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்ததைப் போன்ற பற்கள் சற்றே தெரியும் படியாகப் புன்முறுவல் பூக்கும் தெய்வானையின் கணவனே! சக்திச் சரவணா! முக்திக்கு ஆதாரமாக இருப்பவனே" என்றெல்லாம் சொல்லி அழைத்து, சிவபெருமான் உபதேசம் கேட்கிறார். மூன்று கண்கள் உடைய அவருக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து அதன் காரணமாகத் தகப்பன் ஸ்வாமி என்ற திருநாமத்தைப் பெற்றவர் - முருகப்பெருமான்.
முதல் பாடலிலேயே இவ்வாறு அரனுக்கும் ஆசார்ய புருஷராக இருந்த தகவலைச் சொல்லி, ஆறுமுகனைத் துதிக்கத் தொடங்கிய அருணகிரிநாதர், 'குடிவாழ்க்கை அன்னை' எனும் திருப்புகழில், "முருகா! நல்ல குடிப்பிறப்பு, நல்ல பெற்றோர்கள், நல்ல மனைவி, நல்ல பிள்ளை, ஏராளமான செல்வம் என எல்லாம் இருந்தும், குரு உபதேசமோ அவர் அருளோ இல்லாவிட்டால் என்ன பயன்? ஆகையால், சுடுகாட்டில் கொண்டு போய் என்னைச் சுட்டுக் கொளுத்து முன், குருவருளை நான் பெறவேண்டும். அதற்கு அருள் செய் ஆறுமுக வள்ளலே!" என முருகப் பெருமானிடம் வேண்டுகிறார்.
இப்பாடல், ஜகத்குருவான ஆதிசங்கரரின்,'சரீரம் சுரூபம்' என்னும் பாடலில் எதிரொலி போலத் தோன்றுகிறது.
"அழகான உடல், உயர்ந்த உறவுகள், அளவிலாத செல்வம், பெரும் புகழ் என எல்லாம் இருந்தாலும், மனதானது குருவின் பாத கமலங்களில் பற்று வைக்காவிட்டால், அவற்றால் என்ன பயன்?" என நான்கு முறைகள் கேட்டிருக்கிறார் ஆதிசங்கரர்.
சரீரம் சுரூபம் ததாவா களத்ரம்
யசச்சாரு சித்ரம் தனம் மேரு துல்யம்
மனஸ்சேன்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்
(ஆதிசங்கரர்)
இந்த அருள்வாக்கை அப்படியே சொல்லி, ஆறுமுகனிடம் வேண்டுகிறார் அருண்கிரிநாதர். அவர் ஏன் வேண்ட வேண்டும்? நமக்கு அறிவுறுத்துவதற்காகத்தான்.
திருப்புகழின் முதல் பாடல் முதல் வரியிலேயே, குரு உபதேசத்தைச் சொல்லி, அதன்பிறகும் அதையே வலியுறுத்தி மற்றொரு திருப்புகழும் பாடி, அப்படியும், 'இது போதாது' என்று நினைத்து ஓர் உயிலும் எழுதி வைத்திருக்கிறார். கடைசிகாலத்தில் எழுதி வைக்கப்படுவது தானே உயில்! அந்த முறைப்படி அருணகிரிநாதர் கடைசியில் பாடி (எழுதி)யது கந்தர் அனுபூதி. அதிலும் கடைசிப் பாடல்,
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்! அருள்வாய்! குகனே!
(கந்தர் அனுபூதி)
இப்பாடலின் கடைசி வரி 'குருவாய் வருவாய் அருவாய் குகனே' என்பது. இதன் விளக்கம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இப்பாடலுக்கு உண்டான பொருளைப் பார்க்கும் போது, வழக்கப்படிப் பார்க்கக் கூடாது. பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் - குருவாய் வருவாய் அருவாய் குகனே! என்பதுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
உருவாய் - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
அருவாய் - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
என்பதைப் போல, ஒவ்வொரு வார்த்தைக்கும் பார்க்கவேண்டும். அருணகிரிநாதர் நினைத்துச் சொல்லியிருக்கும் குருநாதரின் மகிமை புரியும்.
ஆரம்பத்தில் குருவைச் சொல்லி, நடுவிலும் குருவைச் சொல்லி, கடைசியிலும் குருவைச் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது, அருணகிரிநாதரின் குருபக்தி மகிமை நமக்குப் புரிகிறது.
முதல் பாடலின் முதல்வரியும் குரு; கடைசிப் பாடலின் கடைசிவரியும் குரு - என அருணகிரிநாதர் அமைத்திருப்பது, 'குருநாதரைத் தேடு! அவர் திருவடியை நாடு!' என்பதை நமக்கு உணர்த்தவே!


No comments:

Post a Comment