நாம் செய்யும் எல்லாச் செயல்களையும் ஒரு தவமாகச் செய்ய முடியும். ஏனெனில், சித்தம் சிவமானால் செய்யும் செயலனைத்தும் தவமாகவே இருக்கும்.
ஆன்மாவில் வாழும் வாழ்க்கை, இறைவனுடன் வாழும் வாழ்க்கை, மனமும் அறிவும் பக்குவப்பட்ட நிலை, இடைவிடாத ஆன்மிக முயற்சி என்று இப்படி, ‘தவம்’ என்பதற்கு எத்தனையோ விளக்கங்கள் உண்டு.
இறைவனிடம் பூரணமாகச் சரண் புகுவதே பெருந்தவம்.
மனத்தின் அழுக்குகளைப் போக்கி, ஞானத்தை ஒளிரச் செய்யும் செயல்கள் அனைத்தும் தவமாகும்.
மனம் தூய்மை பெறுவதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சி எதுவாக இருந்தாலும் - அது தவமாகும்.
"தவத்தினால் விரும்பிய பயன்களை விரும்பியபடியே அடைய முடியும். எனவே தவத்தைச் செய்வதற்கு உரிய முயற்சியை மேற்கொள்ளுங்கள்" என்பதை திருவள்ளுவர்,
"வேண்டிய வேண்டியாங்கு எய்தலால் செய்தவம்
ஈண்டு முயலப் படும்." (குறள் - 265)
ஈண்டு முயலப் படும்." (குறள் - 265)
என்று கூறுகிறார்."
தவம் மூன்று வகைப்படும். 1. வாக்கினால் செய்யும் தவம், 2. மனத்தால் செய்யும் தவம், 3. செயலால் செய்யும் தவம்" என்று, பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத்கீதையில் கூறுகிறார்.
இவற்றில், ‘வாக்கினால் செய்யும் தவம்’ என்று, எவற்றை பகவத்கீதை கூறுகிறது என்பதை முதலில் பார்க்கலாம்.
"1. கடுமை இல்லாத பேச்சு பேச வேண்டும் (அதாவது, நாம் பிறர் மனத்தைப் புண்படுத்தும் வகையில் பேசக் கூடாது),
2. நாம் பேசும் பேச்சில் உண்மை இருக்க வேண்டும்,
3. நாம் பேசும் பேச்சு இனிமையும் நன்மையும் அளிக்கக்கூடிய பேச்சாக இருக்க வேண்டும், 4. வேத சாஸ்திரங்கள் எனப்படும் அருள் நூல்களைப் படிக்கவும் படிக்கச் செய்யவும் வேண்டும், (இதில் இறைவன் நாம சங்கீர்த்தனம் - இறைவன் நாமஜபம் செய்தல் ஆகியவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்)" இவற்றை ‘வாக்கினால் செய்யும் தவம்’ என்று பகவத்கீதையில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறியிருக்கிறார்.
மேலும் அவர் பகவத்கீதையில் மனத்தால் செய்யும் தவங்கள் பற்றியும் இவ்விதம் கூறுகிறார்:
"1. அமைதியில் இருக்கும் தெளிந்த மனம்,
2. அனைவருக்கும் அருள் புரியும் அன்புள்ளம்,
3.பகவானை இடைவிடாமல் சிந்திப்பதால் ஏற்படும் மௌனம்,
4. அடங்கிய மனம், 5. நல்ல தூய்மையான நோக்கம் ஆகியவை எல்லாம் மனத்தால் செய்யக்கூடிய தவம் என்று சொல்லப்படுகிறது."
ஸ்ரீ கிருஷ்ணன் ‘செயலால் செய்யும் தவம்’ பற்றிச் சொல்லும் போது,
"1. தெய்வங்களைப் பூஜித்தல்,
2. சான்றோரைப் பூஜித்தல்,
3. குரு நிலையில் இருப்பவர்களைப் பூஜித்தல்,
4. ஞானிகளைப் பூஜித்தல்,
5. தூய்மை,
6. நேர்மை
7. பிரம்மசரியம் எனப்படும் புலனடக்கம்,
8. அகிம்சை ஆகியவை,
என்று கூறுகிறார்.
இருட்டை விரட்டுவதற்கு வெளிச்சம் உதவுகிறது. அதுபோல், இனிய பேச்சு ஒருவனிடம் இருக்கும் பாவத்தை விலக்கி, அறம் பெருகச் செய்கிறது.
நெறி கடந்து தீயவர் பேசும் கடுஞ்சொற்களைப் பொறுத்துக்கொள்வதும், ஒரு பெருந் தவத்துடன் ஒப்பிடக்கூடிய செயலாகும்.
நன்றாக வேயப்பட்ட கூரைக்குள் மழைநீர் புகாது. அதுபோல், தவத்தாலும் புலனடக்கத்தாலும், பண்பட்டுவிட்ட உள்ளத்தில் தீமைகள் நுழையாது.
‘தொண்டு புரிவதால் மனிதவாழ்வு நிறைவு பெறுகிறது’ என்று ஒரு கருத்து உண்டு. மற்றொரு விதத்தில் பார்த்தால், தொண்டு புரிவதுகூட வாழ்க்கையின் முதல் அத்தியாயமே தவிர, முடிவான இலட்சியமல்ல. ஏனென்றால், இந்திய ஆன்மிகத்தின் முடிவான லட்சியம் ஜீவன்முக்தி நிலையைப் பெறுவதே ஆகும்.
எனவே ஞானமும் மோனமும் பூண்டு, தனித்திருந்து தவம் செய்பவர்களே மிகப் பெரும் பாக்கியசாலிகள்.
நமது சொல், செயல், சிந்தனைகளை இறைவழிபாட்டில் ஈடுபடுத்தி, பெம்மான் அவனுக்கே பித்தனாகும் பாக்கியம் நமக்கெல்லாம் கிடைக்க வேண்டும்.
பணத்தையோ, அதிகாரத்தையோ இறைவன் உயர்வாக மதிக்கவில்லை.
வசிஷ்ட மகரிஷி இவ்விதம் கூறியிருக்கிறார்:
"இந்த உலகில் பொருளைச் சேர்ப்பதைவிட, தவத்தைச் சேர்ப்பதுதான் சிறந்தது, உயர்ந்தது மிகமிக மேலானது, உத்தமமானது, தலையாயது."
தவம் செய்வதற்கு முதலில் தேவைப்படுவது, தவம் செய்வதற்கேற்ற நல்ல மனம்தான். அத்தகைய ‘மனம்’ இருந்தால் மார்க்கமும் உண்டு.
மண்வளம் பயிரின் வளர்ச்சிக்குக் காரணமாவது போல், மனவளம் ஆன்மிக வளர்ச்சிக்குக் காரணமாகிறது.
பலர் விஷயத்தில் (முன்வினை காரணமாக) தவ முயற்சி போதிய அளவுக்கு இருப்பதில்லை.
தவ வாழ்க்கை, இறையனுபூதி பெறுவதற்கு நமக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்துகிறது. தவ வாழ்க்கை என்பது இல்லாவிட்டால், அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பும்கூட நமக்கு இல்லாமல் போய்விடும்.
"தவத்தின் மூலம் ஆன்மிகவலிமை பெற்றவர்களுக்கு, யமனை வெற்றி கொள்வதும் கைகூடும்" என்பதை திருவள்ளுவர்,
"கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின்
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" (குறள் - 269)
ஆற்றல் தலைப்பட் டவர்க்கு" (குறள் - 269)
என்று குறிப்பிடுகிறார். எல்லாவற்றுக்கும் மேலாக, பண்ணிய தவம் பலிக்கவும் பரமனருள் வேண்டும்.
No comments:
Post a Comment