Friday, September 19, 2014

சனி பகவான்





இவர் பெயரை கேட்டாலே அண்ட சராசரமே ஆடிப்போகும்.  சாதாரண மனிதர் முதல்,  சகல சம்பத்துகளும் பெற்ற தேவர்கள் வரை நடுங்குவார்கள்.  நீதிமான். நியாயவாதி. அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார். 

கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர்.  ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர்.  சூரியபகவானின் இரண்டாவது புதல்வர். 

அப்போ முதல் புத்திரர்.....

அது யமன்.  பின்னவர் ஆயுளை வளர்த்தால்,  முன்னவர் ஆயுளை பறிக்கும் தொழிலை செய்பவர்.  சகோதரி யமுனை.  காக்கையை வாகனமாக கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். 

புரட்டாசி மாதம், சனிக்கிழமை, ரோகினி நச்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில், தகப்பனார் ஸூரியபகவானுக்கும்,  தாயார் சாயாதேவிக்கும் பூர்வ புண்ணிய பொங்கு சோபன புத்திரன் சனீஸ்வரன் என்ற சனிபகவான் ஜனனமானார். 

அவர் பிறந்தநாளைதான் புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனி கிழமையும் விரதம் இருந்து அனுஷ்டிக்கிறோம். 

எதற்கு?

நீடித்த ஆயுளை பெற, சனிபகவானின் அருளை பெற.  இது கோவிந்தனுக்கும் உரிய நாள் என்பது உண்மைதான்.  எள்தான் இவரது தானியம்.  அந்த எள் விஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இங்கே குறிப்பிட்டாக வேண்டிய ஒரு விஷயம் இது.   மற்ற கிரகங்கள் என்னதான் யோக நிலையில் இருந்தாலும் சனிபகவானின் சம்மதம் இல்லாவிட்டால்  யூகத்தை பெறுவதற்கு சான்ஸ் இல்லை.

அதே சமயம் சனி கொடுக்க துணிந்து விட்டால்,  சும்மா அதிரும்முள்ள என்று சொல்கிற மாதிரிதான் இருக்கும்.  எதுக்குடா வம்பு என்று மற்ற கிரகங்கள் விலகி கொள்ளும்.  புரியுதா.

சனி கர்ம வினை கிரகம்.  கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார்.  அதனால் எந்த ராசியில் நின்றாலும்  தப்பு செய்தால் அவருக்கு பிடிக்காது.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி வரும்போது செயற்குழு, பொதுக்குழு, காரிய கமிட்டி கூட்டமெல்லாம்  போடா மாட்டார்.  நேரடியாக ஆகஷன்தான். 

என்னதான் காசு பணம், சொத்து சுகம்  இருந்தாலும் அனுபவிக்க முடியாது.  நோயை கொடுத்து பாயில் படுக்க வைத்து விடுவார்.  விபத்து கண்டங்களை உருவாக்கி ஒரே இடத்தில் முடக்கி போடுவார்.

இல்லா விட்டால் ஒரே நாளில் ஓட்டாண்டியாக்கி நொந்து நுலாக அலைய விடுவார்.  அப்படியும் இல்லையா..... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது மாதிரி நம்பிக்கை மோசடிக்கு யாராவது நம்மை தேடி வருவார்கள்.

அட அதுவும் முடியலையா?  இருக்கவே இருக்கு அரசாங்க அறை.  அதாங்க... ஜெயில்.  இருட்டிப்பு செய்து இருக்கும் இடம் தெரியாமல் செய்வது போல், கொஞ்ச நாளைக்கு கம்பி எண்ணுடா தங்கம்னு அனுப்பி வைக்க பார்பார்.

உங்களுக்கு ஏழரை சனியா?  அஷ்டம சனியா? இந்த மத்திரத்தை சொல்லுங்க.  சனி பகவானின் கருணை உங்களுக்கு கிடைக்கும்.  அந்த மந்திரம் இதுதான்.

" நீலாஞ்சனச மாபாஷம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட சம்புதம்
தம் நவாமி சனைசரம் ".

No comments:

Post a Comment