Friday, September 19, 2014

சிவனும் சித்தர்களும் வாழும் சதுரகிரி



நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாவல் மரம், பலா மரம்,நெல்லி மரம், ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையான மூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள், ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம்.

சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில் குடிகொண்டுவிடுகிறார்.

மகாலிங்கரைத் தரிசிக்க நடையாகத்தான் மலையேறிச் சென்றாக வேண்டும். வேறு வழியில்லை. காரோ, கட்டை வண்டியோ,அவ்வளவு ஏன், ஹெலிகாப்டரில்கூட சென்று இறங்க முடியாது.

சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி என்கிறார்கள்.எண்ணற்ற சித்தர்கள் பலர் சதுரகிரி மலையில் கூடி ஆன்மீக விவாதங்கள் நடத்துவது உண்டாம்.இதற்கென அவர்கள் பயன்படுத்தும் குகைகள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகின்றன.சித்தர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. சித்தர்கள் வசித்த குகைகளில் மனிதர்களால் செல்ல இன்றளவும் இயலாத ஒன்றாகவே உள்ளது.

மனித நேயம் அறிந்த மனிதனே மகான்/சித்தன் ஆகிறான்.பின்னாளில் சிவம்/தெய்வமும் ஆகின்றான்.

வான்மீகி, கோரக்கர், கமலமுனி, சட்டைமுனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச்சித்தர்,கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர், இராமதேவர், இடைக்காட்டுச்சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச்சித்தர், காலாங்கிநாதர், மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர். 18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே. வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விஷேச பூசை நடைபெறும். சித்தர் சட்டநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்கு காணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து மிகஅருகில் அமைந்திருக்கிறது இந்த குகை. சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள் சமர்பித்து சந்தன மகாலிங்கத்தை வழிபடலாம். மகாசிவராத்திரியின் போது இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கலாம். சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிசந்நிதி உண்டு.

தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக்குவதில்லை மகாலிங்க ஸ்வாமிகள். மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா." என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும். பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன. நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன.

அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு புனிதமான இடம்.

No comments:

Post a Comment