Monday, September 15, 2014

தீட்சை பற்றிய விளக்கம்

தம் சீடனுடைய ஆன்மாவைச் சார்ந்த அழுக்குகளை நீக்கி, அவனுடைய ஆன்மாவைத் தூய்மைப்படுத்தவும், ஞானம் ஊட்டவும், வேண்டிக் குருவானவர் செய்யும் கிரியை தீட்சை எனப்படும்.தீட்சை என்னும் சொல் அழித்தல், கொடுத்தல் என்ற இரு பொருள் தருவது, ஆன்மாவின் அழுக்குகளை அழிப்பதும், இறைமைத் தன்மையைக் கொடுத்தலும் தீட்சையின் பயன்களாகும். இத் தீட்சை பலவகை, சைவ ஆகமங்கள் ஏழுவகை தீட்சைகளைக் குறிக்கும்.


1. நயன தீட்சை

தன் பார்வையாலேயே சீடனுடைய பாவங்களைப் போக்கி அருள்பாலிப்பது நயன தீட்சை எனப்படும்.’அடிகளார் பார்வைபடுமாறு பார்த்துக்கொள்’ என்று அன்னை அடிக்கடி பக்தர்கட்குக் கூறுவதன் உள்நோக்கம் நயன தீட்சை அளிப்பதற்காகவே, மீனானது தன் சினையைப் பார்த்த அளவில், சினைகள் மீன் வடிவம் பெறுதல் போல, குருவின் பார்வை பட்ட அளவில் சீடனும் தன்போல் சிவமாவான் என்று ஆகமங்கள் கூறும்.

2. பரிச தீட்சை

ஆசாரியன் தன் வலக்கையால் சீடன் தலை மேல் வைப்பது, நெற்றிப் பொட்டில் கை வைத்து அருள்பாலிப்பது, திருவடிகளைத் தலை மேல் வைப்பது ஸ்பரிச தீட்சை. திருவடிகளைச் சீடன் தலை மேல் வைத்து அருள்பாலிப்பது திருவடி தீக்கை என்றே கூறப்படும். கோழி, மூட்டையை அடைகாத்துக் குஞ்சு பொறிப்பது போலச் சீடனை பரிசத்தால் ஞானமயமாக்குவது இது!

3. வாசக தீட்சை

குருவானவர், தம் சீடனுக்குத் தகுந்த மந்திரங்களை உபதேசித்து அவனை ஞானமயமாக்குவது வாசக தீட்சை எனப்படும்.பஞ்சாட்சர மந்திரம், பிரணவ மந்திரம்,ஹீ வித்யை, தத்துவமசி உபதேசம் என்பன வாசக தீட்சையில் அடங்கும்.

4. மானச தீட்சை

சீடன் ஒருவன் எங்கையோ இருந்து கொண்டு தன்னைத் தியானம் செய்யும் போது, அத் தியான சக்தி குருவை ஈர்க்கச் செய்யும். அத்தகைய காலங்களில் குரு தான் இருந்த இடத்திலிருந்து அவனுக்கு மனத்தால் அருள்பாலிப்பது மானச தீட்சை எனப்படும். ஆமையானது எங்கோ இருந்துகொண்டு தான் வைத்த முட்டையைத் தன் எண்ணத்தின் உறைப்பால் சினையாக்கும். அது போன்றது இது!

5. சாஸ்திர தீட்சை

சீடனுடைய சந்தேகங்களை நீக்க வேண்டிச்
சாத்திரங்களை அருளுதல் சாஸ்திர தீட்சை எனப்படும்.
இருபா இருபது, உண்மை விளக்கம் என்ற சைவ சாத்திரங்கள் இதற்கு எடுத்துக் காட்டுகள்!
அருச்சுனன் சந்தேகங்களைத் தீர்க்க வேண்டிக் கண்ணன் அருளிய பகவத் கீதை சாஸ்திர தீட்சைக்கு உதாரணம்.

6. யோக தீட்சை

தன் சீடனுக்கு யோகப் பயிற்சிகளை அளித்து பிராணாயாம நுணுக்கங்களை கற்பித்துக் குண்டலினி சக்தியை எழுப்ப வேண்டித் தீட்சை அளித்தல், சமாதி நிலைக்கு அவன் முன்னேறி வர உதவுதல் யோக தீட்சை எனப்படும்.

7. ஒளத்திரி தீட்சை

சீடனை ஒரு வேள்விக் குண்டத்தின் முன் அமரவைத்து, சக்கரம் வரைந்து அக்கினி வளர்த்து, அவனுக்கு ஞானம் ஊட்டுவது ஒளத்திரி தீட்சை எனப்படும்.

8. ஆசார்ய அபிடேகம்

தன்னைப் போல ஒரு ஆசாரியன் ஆகிற அளவிற்குப் பக்குவம் பெற்ற சீடனுக்கு ஆசாரிய ஸ்தானம் அளிக்க வேண்டிச் செய்யப்படுவது ஆசாரிய அபிடேகம் எனப்படும். இந்த அபிடேகம் முடிந்த பிறகே ஒருவர் ஆசாரிய ஸ்தானத்தைப் பெறுகிறார்.
அடிப்படை தீட்சை சமய தீட்சை
ஒருவர் சைவ நெறியை மேற்கொள்வதாக இருப்பினும், வைணவ நெறியை மேற்கொள்வதாக இருப்பினும், வைதிக நெறியை மேற்கொண்டு ஒழுகுவதாக இருப்பினும், தகுதிவாய்ந்த குருமாரிடம் சென்று தக்க மந்திரத்தை அவரிடம் கேட்டு, அதனையே ஜெபித்துத் தம் இஷ்ட தெய்வத்தை வணங்கி வர வேண்டும், என்பது அடிப்படை விதி, இந்த அடிப்படை அமைய வேண்டியே சமய தீட்சை பெற்றுக் கொண்டு அதன் பிறகு ஆன்மிகப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்பது விதி.

>தீட்சையால் உண்டாகும் மாற்றங்கள்

அருணாசல குரு என்பார் இயற்றிய நிஜானந்த போதம் என்ற நூல்’ தச தீக்கை ‘எனப் பத்துவகைத் தீக்கைகளைக் கூறுகிறது. சீடனுடைய உடம்பிலும், உள்ளத்திலும் தீட்சையால் உண்டாகும் மாற்றங்களையும் கூறுகின்றது.

1. முதல் தீட்சையைல் ரோம துவாரங்கள் வழியாகத் கெட்ட நீர்கள் வியர்வையாய்க் கசியும்.

2. இரண்டாவது தீட்சையில் வாத, பித்தம் சிலேத்துமம் என்ற மூன்று தோஷங்கள் நீங்கும்.

3. மூன்றாவது தீட்சையில் பழைய கெட்ட உதிரங்கள் கசியும்.
4. நான்காவது தீட்சையால் சர்ப்பம் தோலுரிப்பது போலச் சரீரத்தில் தோலுரியும்.

5.ஜந்தாவது தீட்சையால் சட்டை கழன்று தேகம் சிவந்த நிறமாகும். பஞ்ச மூர்த்திகள் கோரியதைத் தருவார்கள்.
6. ஆறாவது தீட்சையில் சட்டை கழன்று சுழுமுனை வாசல் திறந்து தூர திருஷ்டி தெரியும்.

7. ஏழாவது தீட்சையில் சட்டை வெளுப்பாய்க் கழன்று தேகம் தூபம் போலப் பிரகாசிக்கும்.

8. எட்டாவது தீட்சையில் உடம்பை உயரத் தூக்கும். கூடு விட்டுக் கூடு பாயும் வல்லபம் உண்டாகும்.
9. ஒன்பதாவது தீட்சையில் தேகம் சூரியப் பிரகாசம் அடையும். அட்டமா சித்தியும் கைகூடும். தேவர்கள் சீடனுக்கு ஏவல் புரிவர்.

10. பத்தாவது தீட்சையில் தேகம் தீபம் போலப் பிரகாசிக்கும். சொரூப சித்தி கூடும். அண்டத்தில் மெளனம் நரை திரை ,மூப்பு, பிணி ,மரணம் ஏற்படா.

இத் தீட்சைகளால் பக்குவம் பெற்ற சீடன் உடம்பு, மனம், ஆன்மா, மூன்றும் ஞானம் பெறத் தகுதி பெறுகின்றன.

No comments:

Post a Comment