ஒவ்வொரு புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மிகவும் புனிதமான அமாவாசை ஆகும். தட்சனாயத்தில் வரும் முதல் அமாவாசையான ஆடி அமாவாசை எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் பெறும் அமாவாசை புரட்டாசி அமாவாசை ஆகும். இந்த அமாவாசை நாள் மகாளய அமாவாசை என அழைக்கப்படுகின்றது.
புரட்டாசி அமாவாசைக்கு முன் பதினான்கு நாட்களாக விரதம் இருந்து அமாவாசை அன்று நம் மூதாதயருக்கு தரும் தர்ப்பணம் நம் குலத் தோன்றல்களுக்கும் எதிர்வரும் சந்ததியர்களுக்கும் செல்வச் செழிப்பையும் நற்பண் புகளையும் தரவல்லது. மகாள பட்ச காலத்தில் நமது பித்ருக்கள் (மூதாதையர்கள்) தங்க ரதத்தில் சூரியனின் ஒளிக்கதிர்களின் வழியாக பித்ரு தேவதைகளின் அனுமதியுடன் பூலோகத்தில் உள்ள தத்தமது சந்ததியர்களை காணவருகின்றார்கள்.
இவ்வாறு அவர்கள் வரும் இக் காலம் மகாளய பட்ச காலமாக போற்றப்படுகின்றது. (மகா+ஆலயம்=மகாளயம்). எனவே தினம் தினம் ஆலயம் சென்று இறைவனை வழிபட முடியாதவர்களும் இதுவரை பித்ரு பூஜை செய்யாதவர்களும் கூட இந்த மகாளய காலத்தில் பித்ருக்களை நினைத்து வீட்டில் காலம் சென்ற மூதாதயரின் ஒருவரது படமேயாயினும் இருக்குமானால் அதன் முன் இக் காலத்தில் தினம் தினம் ஏதாவது ஒரு சாதம் செய்து படையல் இட்டு வழிபாடு செய்யலாம்.
அல்லது பழவர்க்கங்களில் ஏதாவது ஒன்றினை தினம் படைத்து வீட்டில் உள்ளவர்களுக்கு தரலாம். பிடித்த பலகாரங்களை செய்து அவர்களுக்கு படைத்து எள் எண்ணெய் தீபம் தனியாக போட்டு வழிபாடு செய்ய வேண்டும். நம் முன்னோர்களை நினைத்து வயதானவர் களுக்கும் ஏழை முதியோர்களுக்கும் உணவு அளித்து அவர்களுக்கு துணிமணி தானம் தந்தால் நம் முன்னோர்கள் அதனைக் கண்டு மகிழ்ந்து நம் குலத்தவர்களை வாழ்த்துகின்றனர்.
மூதாதயரை நினைத்து காகத்திற்கு வீட்டின் தென்மேற்கு பாகத்தில் அல்லது தென் கிழக்கு பாகத்தில் சாதம் வைத்து வழிபட்டால் மிக நன்மைகள் கிடைக்கும். மகாளய பட்ச அமாவாசை வரும் 26-ந்தேதியாகும். அன்று காலையில் எழுந்து குளித்து விட்டு ஆற்றங்கரை, குளக்கரை, கடற்கரைகளில் அல்லது வீட்டின் வடகிழக்கு கிணற்றின் அருகில் மூதாதயர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டால், "என்றோ ஒரு பாட்டன் மூலம் இன்று வரை நம்குலம்'' என்ற நிலையில் இருந்த நாம் இனி வரும் காலங்களில் நாம் பாட்டன்களாகவே இருக்கும் நிலையும் சந்ததியர்களின் வளர்ச்சியும் இருக்கும்.
கடவுளுக்கு நாம் செய்யும் பூஜையில் பத்தாயிரத்தில் ஒரு பங்கினைத்தான் நாம் நமது முன்னோர்களுக்கு செய்கின்றோம். கடவுளையே நமக்கு அடையாளம் காட்டிய அந்த அன்பு ஜீவிகள் நாம் செய்யும் பூஜையில் மகிழ்ச்சி அடைந்து நம்மை வாழ்த்துவதில் தெய்வத்திற்கு நிகரான வரம் தருகின்றார்கள். நாம் கடவுளிடம் செலுத்தும் அன்பைப் போல் நமது முன்னோர்களிடமும் செலுத்தினால் கை மேல் பலன் கிட்டும்.
`நமது முன்னோர்கள் தெய்வத்திற்கு சமமானவர்கள். பூமியில் வாழ்ந்து மடியும் நம் மூதாதையர்களின் பூத உடல் தான் மறைகிறது. ஆனால் ஆன்மாவானது தனது சூட்சும உருவில் இருந்து அருளாசி வழங்கி தன் குலத்தை காத்து வருகின்றார்கள். எனவே பித்ரு பூஜை நமது முன்னோர்களால் மிகவும் சிறப்பாக செய்யப்பட்டு வந்துள்ளது. நாமும் நமது மூதாதயரை எண்ணி பித்ரு பூஜையை செய்வதன் மூலம் மூதாதயரின் ஆசியோடு ஆனந்த வாழ்வு அடைவோம் என்கிறார் ஈரோடு மாவட்டம் அவல்பூந்துறையைச் சேர்ந்த விஜய்சுவாமிஜி.
நோயில் இருந்து விடுதலை:
பணம் உள்ளவர்கள் தான் ஆடம்பரத்துக்காக பூஜை செய்கின்றனர். நமக்கு ஏன் இந்த வேலை என யாரும் புறக்கணிக்க வேண்டாம். முடிந்த அளவு இந்த அமாவாசையில் நீங்கள் உங்கள் குல மூதாதையர்களை நினைத்து செய்யும் தான தர்மங்கள் அவர்களை சந்தோஷப்படுத்துவதுடன் நோய்களில் இருந்து விடுவிக்கும்.
பிதுர் தேவதைகள்:
நாம் தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் செய்யும் போது ஐந்து பிதுர் தேவதைகளை வரவேற்கின்றோம்.
1. நம் பித்ருக்கள் (மண்),
2. புரூரவர் (நீர்),
3. விசுவதேவர் (நெருப்பு),
4. அஸீருத்வர் (காற்று),
5. ஆதித்யர் (ஆகாயம்)
என பஞ்ச பூத அம்ஸமாக ஐவரும் ஒரு சேர பூமிக்கு வருவது மகாளய பட்சத்தில் தான் என கருட புராணம் விளக்கமாக கூறுகின்று. திரேதா யுகத்திலும், கிருதாயுகத்திலும் மகாளய பட்ச நாட்களில் மூதாதையர்கள் நேரில் தரிசனம் தந்து உணவு பெற்று வாழ்த்தி சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
ஸ்ரீராமர் தன் தந்தையான தசரதனுக்கும், கிருஷ்ணன் தன் மூதாதயர் அனைவருக்கும் இவ்வாறு தர்பணம் செய்ததாக நமது இதி காசங்கள் கூறுகின்றன. ஆனால் இëக்காலத்திலோ சூரியனின் ஒளியை விட அதிக பிரகாசமாக உலாவரும் அவர்களை நம் கண்களால் காண இயலாத நிலையில் நமது வாழ்வியல் தன்மை அமைந்துள்ளதால் மானசீகமாக பூஜை செய்து, நாம் தரும் திதி நமது முன்னோர்களை மகிழ்விக்கின்றது.
இவ்அமாவாசையில் பால், தயிர், நெய், தேன், பழவர்க்கங்களை நிவேதனமாக வைக்கலாம். பலகாரம், சாதவகைகளையும் படையல் செய்யலாம். வசதி குறைந்துள்ளவர்கள் மூதாதயரை மனதில் நினைத்து அகத்திக் கீரையை பசு மாட்டிற்கு உணவாகத் தந்தாலே போதும் முதியவர்கள் இருவருக்காவது உணவும், ஆதர வற்றவர்களுக்கு துணிமணியும் வயிறார உணவளியுங்கள். வருங்காலத்தில் நீங்கள் வெற்றியாளர்களே!
புனித நீர் ஸ்தலங்கள்:
காசி, கயா, பத்ரிநாத், திருக்கயிலை, மானஷரோவர், சென்னை மத்திய கைலாசம், திருக்கழுக்குன்றம். திருக்கோவரணம் போன்ற இடங்கள் திதி தர ஏற்ற இடங்கள். நம் தமிழகத்தில் ராமேஸ்வரம், பவானி கூடுதுரை, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், பாபநாசம், கும்பகோணம் அருகில் உள்ள செதலபதி ஆதி விநாயகர் ஆலயம், பூம்புகார் சங்கமுகேஸ்வரர் ஆலயம், திருவெண்காடு, உடுமலை திருமூர்த்திமலை அமண லிங்கேஸ்வரர் ஆலயம், மற்றும் ஆற்றங்கரைகளிலும் பித்ருக்களுக்காக நாம் பின்டம் பிடித்து தர்ப்பனம் செய்வது கூடுதல் பலன் தரவல்லது.
காருண்ய பித்ருக்கள்:
சாதாரண அமாவாசையிலும், நினைவு நாட்களிலும் நாம் தரும் திதி சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டும் தருவது. ஆனால் மகாளய பட்சத்தின் வழிபாடும், மகாளய அமாவாசை அன்று நாம் செய்யும் பூஜையும் நம்மீது அக்கறை கொண்டு உதவியவர்கள், நண்பர்கள், ஆசிரியர்கள், குருமார்கள், இப்பூவுலகில் சாஸ்திர உணர்வு பெற, வாழ்வியல் தெளிவு பெற நமக்கு உதவிய அத்துனை ஆன்மாக்களையும் மகிழ்ச்சி அடையச் செய்கிறது. எனவே அத்தனை பித்ருக்களும் ஆசி வழங்குவது இந்த மகாளய பட்ச விரத நாட்களில் தான்.
இவர்கள் "காருண்ய பித்ருக்கள் என்று அழைக்கப்படுகின்றார்கள்''. எனவே மறைந்த நண்பர்கள், தாய் வழி, தந்தை வழி உறவினர்கள் சித்தப்பா, பெரியப்பா முதல் தங்கள் குடும்பத்திற்கு உதவிய அத்தனை ஆன்மாக்களுக்கும் என வேண்டி மகாளய அமாவாசை அன்று குறைந்தது ஒரு ஜோடி ஆண்-பெண் முதியவர்களுக்கும், ஊனமுற்றவர்களுக்கும் நீங்கள் வஸ்திர தானம் செய்து உணவளித்து செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து உதவுங்கள் உங்கள் வாழ்வும், வம்சமும் சிறக்கும்.
பலன்கள்:
நீண்ட நாள் கடனாளியா நீங்கள்? இப் பூஜையால் தீராத கடன் ஒழியும். தீர்க்க முடியாத வியாதிகள் குறையும். நோய் நொடிகள் அகலும், நீண்ட ஆயுளும், நிறைந்த செல்வமும், மங்காத புகழும் அமையும். யார் விட்ட சாபமோ என அஞ்சிய வாழ்க்கை அகலும். உத்தி யோகம் கிடைக்கும். உத்யோக உயர்வுகள் உண்டாகும். தடையாக இருந்த திருமண வாழ்வு சுகமாக தொடரும். திருமணத் தடை அகலும்.
இல்லறம் இனிக்கும் குழந்தைகள் கல்வியில் உயர்வு பெறுவர். வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி வரும். குழந்தை பாக்யம் கிட்டும், வியாபார அபிவிருத்தி உண்டாகும். குடும்ப சாபம் அகலும், செவ்வினைகள் அன்டாது. கால்நடை பெருக்கம், விவசாய அபிவிருத்தி ஏற்படும்.
சீரான மழை கிடைக்கும். அரசு பதவி கிடைக்கும். அரசாங்க ஆதரவு கிடைக்கும். புகழ் பரவும். புன்னகை தங்கும், பொன்நகை அதிகரித்து கிடைக்கும், குடும்ப ஒற்றுமையாக செயல்பட்டு சாதனை படைப்பீர்கள். நிம்மதி நிலைக்கும்
No comments:
Post a Comment