தமிழ்நாட்டில் சித்ரகுப்தருக்கு என்று அமைந்துள்ள ஒரே கோவில் காஞ்சீபுரத்தில் தான் உள்ளது. இந்த தலத்தில் செல்வ விநாயகர் சன்னதி, இராமலிங்க அடிகள் சன்னதி, ஐயப்பன் சன்னதி, விஷ்ணு துர்க்கை சன்னதி, நவக்கிரகங்களின் தனிச்சன்னதி ஆகிய சன்னதிகள் கோவிலினுள் அமைந்துள்ளன.
காஞ்சீபுரம் பேருந்து நிலையத்திற்கு வடக்கில், நெல்லுக்காரத் தெருவின் மையத்தில் மெயின் ரோட்டோரத்திலேயே இத்தலம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்திலிருந்து 5 நிமிட நடைப்பயணத்தில் நடந்தே வந்தடைந்து விடலாம். மூலவர் சித்ரகுப்தர் தெற்கு பார்த்த வண்ணம் எழுந்தருளியுள்ளார்.
எமதர்மன் ஒரு சமயம் கயிலாயத்தில் சிவபெருமானைச் சந்தித்து, பிரம்மதேவனால் படைக்கப்படும் உயிர்களின் பாவ புண்ணியங்களை கணக்கிட்டுத் தண்டனை வழங்குவதில் சற்று சிரமமாக இருப்பதாகவும், அதற்கென்று தனக்கு ஒரு உதவியாளர் தேவை என்றும் கூறினார்.
உடனே சிவபெருமான், பிரம்மதேவனை வரச்செய்து எமதர்மனின் கோரிக்கையை நிறைவேற்றித் தருமாறு கட்டளையிட்டார். ஒருநாள் சூரியன் ஆகாய மார்க்கமாகத் தன் பயணத்தை தொடரும்போது, ஒளிக் கதிர்கள் கடல் நீரில் விழுந்து பல வண்ண ஜாலங்களை ஏற்படுத்தின.
அப்போது கடல் நீர்ப்பரப்பில் நீலாதேவி என்னும் பெண் தோன்றி, சூரியனின் மீது ஆசைப்பட்டு சூரிய பகவானைத் தழுவினாள். இதனால் அவளுக்கு ஓர் ஆண்குழந்தைப் பிறந்தது. குழந்தைப் பிறந்தவுடன் நீலாதேவி அந்த கடல் நீர் பரப்பினுள் மறைந்தாள்.
அந்த குழந்தைப்பிறந்த நேரம்-சித்திரை மாதம் பவுணர்மி தினம் (சித்ரா பவுர்ணமி நன்னாள்) சித்திரை நட்சத்திரத்தில் தோன்றிய அக்குழந்தையே சித்திரகுப்தர் ஆவார். இவர் பிறக்கும் போதே அழகாகவும், இடக்கையில் ஓலைச்சுவடிகள், வலக்கையில் எழுத்தாணி கொண்டும் பிறந்தார். இவர் இமயமலை சாரலில் கடும் தவம் புரிந்து பல சக்திகளைப் பெற்றார்.
பிறகு தந்தை சூரியபகவானின் விருப்பப்படி எமனுக்கு உதவியாளராக பணியில் சேர்ந்து பணியாற்றுகிறார் என்று ஆன்மீக அறிஞர்கள் கூறியுள்ளனர். தென் இந்தியாவில் உள்ள ஒரே திருக்கோவில் என்று பெருமையைப் பெறுகிறது இத்திருக்கோவில்.
நவக்கிரகங்களில் கேது பகவானுக்கு உரிய அதிதேவதையாக சித்திரகுப்தர் விளங்குகிறார் என்று ஜோதிட வல்லுனர்கள் கூறுகின்றனர். கேதுவை மோட்சம் அளிக்கும் கிரகம் என்பர். யார் யார் மோட்சம் செல்வர் என்று உயிர்களின் கணக்குகளை கையில் தயாராக வைத்துக்கொண்டிருப்பவர் தான் சித்ரகுப்தர் ஆவார்.
இத்தலம் மிகச்சிறந்த ராகு-கேது பரிகார தலமாக விளங்குகிறது. அந்த பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் தெரியுமா? கொள்ளு, உளுந்து (கொள்ளு-கேது, உளுந்து- ராகு), வண்ணத்துணி (அவரவர் சக்திக்கு ஏற்ப) தட்டில் வைத்து அர்ச்சனை செய்து, துணியை ஆலயத்தில் கொடுத்துவிட வேண்டும்.
அதன்பிறகு கொள்ளு, உளுந்தை பசுவிற்குத் தந்துவிடவேண்டும். இதனால் ராகு, கேது, தோஷம், அகலும். இத்திருக்கோவில் கருணீகர் மரபினர்களால் கணக்குப் பிள்ளைமார்களால் நிர்வகிக்கப்படுகிறது. காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.
No comments:
Post a Comment