Tuesday, September 2, 2014

குருவருளின்றி திருவருள் இல்லை!




நீங்கள் செய்யும் தொண்டு மனபாண்மையும் சேவையும் குரு தான் .
எவ்வளவு பெரிய புண்ணியம் என்பது தெரியுமா? இருவினை தீர்க்கும் குருவின் பெருமை கேட்பது படிப்பது.

அதென்ன இருவினை ?

‘முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள், பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்’ என்கிற இந்த ஒரு வரி போதும் குருவின் பெருமையை உணர்த்துவதற்கு. நமது முன்ஜென்ம வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள். பின்னால் வரக்கூடிய வினையை மாற்றிடுவார்கள். இது குருவருளாலே மட்டும் தான் முடியும்.
குருவின் பெருமையையும் குரு பக்தியின் சிறப்பையும் விவரிக்கும் . . மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கும் வாக்கியம் சாதாரண வாக்கியம் அல்ல. எண்ணற்ற அர்த்தங்கள் கொண்டது. பல நீதிகளை சொல்வது.
தீமைகள் மலிந்து கிடக்கும் கலியுகத்தில் கலியின் தீமை நம்மை அண்டாது இருக்கவேண்டுமெனில் குரு அருள் அவசியம் தேவை.
மகா குரு ஸ்ரீ ராகவேந்திரர், நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவர், பாம்பன் ஸ்வாமிகள், திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், மகாவதார் பாபாஜி, ஷீரடி சாய்பாபா, வள்ளி மாலை ஸ்வாமிகள், இராமலிங்க அடிகளார் இவர்களை போன்ற மகான்களில் எவரேனும் ஒருவரை குருவாக ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டு அவர்கள் காட்டிய நெறிமுறைப்படி வாழ்ந்து வரவேண்டும்.
இது ஒன்றே கலியுகத்தின் தீமைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ளும் வழி. இறைவனின் அருளைப் பெறவும் வழி.
குரு என்ன இறைவனை விட உயர்ந்தவரா? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கக்கூடும். குருவருளின்றி திருவருள் இல்லை.
மும்மூர்த்திகளின் அம்சமாக அனுசூயா தேவிக்கு பிறந்த ஸ்ரீ தத்தாத்ரேயரின் மகிமைகளை விளக்கும் குரு சரித்திரத்தில் வரும் கீழ்கண்ட வரலாற்றை படியுங்கள்… உங்கள் சந்தேகம் தீரும்.
குருவருளின்றி திருவருள் இல்லை!
கோதாவரி நதிக்கரையில் அங்கரீச மகரிஷி ஆசிரமம் இருந்தது. அங்கு நல்லோர்கள், தவம் செய்பவர்கள், விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் பைலமுனி என்பவரின் புதல்வர் வேததர்மன் என்பவர் இருந்தார். அவருக்கு அனேக சீடர்கள் இருந்தார்கள். வேததர்மன் தன சீடர்களின் குரு பக்தியின் சிரத்தையை தெரிந்து கொள்ள நினைத்து அவர்களை அழைத்து, “என் முற்பிறவியில் செய்த பாவங்களினால் பெற்ற கர்மாவை இந்தப் பிறவியில் என் தவத்தினால் கொஞ்சம் போக்கினேன். மீதமுள்ள கர்மாவை போக்குவதற்கு மற்றுமொரு பிறவி எடுத்து தவம் செய்ய வேண்டும். எனக்கு மீண்டும் ஒரு பிறவியில் விருப்பமில்லை. எனவே அதை நாம் இப்பிறவில் அனுபவிக்க வேண்டுமென்று எண்ணி அதற்காக எல்லா பாவங்களையும் போக்கும் காசிக்கு சென்று அங்கு 21 வருடம் ‘தொழுநோய் பெற்று குருடனாகவும், முடவனாகவும் வாழ்ந்து என் பாவங்களை போக்கிக் கொண்டு முக்தி அடைய திட்டமிட்டுள்ளேன். ஆகையால் அங்கு எனக்கு பணிவிடைகள் செய்து துணையாக இருக்க யார் உங்களில் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
தொழு நோயாளிக்கு சேவை செய்யவேண்டுமா என இதைக் கேட்ட பலர் தயங்கினர். மேலும் சிலர் குரு சேவையில் குறை நேர்ந்தால் என்ன நடக்குமோ என்று பயந்து மௌனமாய் இருந்தார்கள். ஆனால் தீபகன் என்ற சீடன் மட்டும் முன் வந்து, சுவாமி, “நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்களுக்குப் பதிலாக நான் 21 வருடங்கள் குருடனாகவும், முடவனாகவும், மாறி தொழுநோய் பெற்று அந்த கர்மாவை அனுபவிப்பேன்” என்று வேண்டினான். இதைக் கேட்ட குரு “எவனொருவன் பாவம் செய்கிறானோ அவனே அந்த பாவ கர்மாவை அனுபவித்தாக வேண்டுமே தவிர, வேறொருவர் அனுபவித்தால் அந்த கர்மா தீராது. ஆகையால் நானே அதை அனுபவிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சேவை செய்வது மிகக் கடினமானது. அதற்கு சம்மதமானால் நீ என்னுடன் வரலாம்” என்றார். தீபகன் சம்மதித்து குருவுடன் காசிக்குச் சென்றான்.
அங்கு வேததர்மன் மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி விஸ்வநாதரை வணங்கி அருகிலுள்ள கன்பலாஸ்வரத்தில் தன் சீடன் தீபகன் கட்டிய குடீரத்தில் வாழ ஆரம்பித்தார்.
உடனே அவர் கண் பார்வை இழந்து, முடவனாகி, தொழுநோய் உடலில் ஏற்பட்டது. உடலில் புண்கள் ஏற்பட்டு சீழ், புழுக்களுடன் துர்நாற்றம் வரத் தொடங்கியது. மேலும் அவர் மனநிலையும் பிறழ்ந்தது.
இந்நிலையில் தீபகன் தன் குருவுக்கு செய்யும் சேவையை காசி விஸ்வநாதருக்கு செய்யும் சேவையைப் போல் பாவித்து தினமும் குருவுக்கு நீராட்டி, புண்களைத் துடைத்து, பாத பூஜை செய்து பிச்சை எடுத்து சோறூற்றி வந்தார். ஆனால் குருவோ தனக்கு சேவைகள் சரியாக செய்யவில்லை என்றும், புண்களை சரியாக துடைத்து விடாததால் ஈக்கள் என்னைக் கடிக்கின்றன அவற்றை விரட்டு என்றும் கோபிப்பார். அப்பொழுது தீபகன் உடலை சுத்தம் செய்ய முற்பட்டால் கோபித்து எனக்கு பசியாக இருக்கிறது சீக்கிரமாக சாப்பாடு கொண்டுவா என்பார். அவன் நல்ல சாப்பாடு கொண்டு வந்தால் அது நன்றாக இல்லை என்று தூக்கி எறிவார். சில நேரங்களில் நீ நன்றாக சேவை செய்கிறாய் என்று பாராட்டுவார். உடனே கோபித்து “நீ என்னை மிகவும் துன்புறுத்துகிறாரய் . நீ இங்கிருந்து செல்” என்பார். ஆனால் தீபகனோ இவை எதனையும் பொருட்படுத்தாமல், பாவம் அதிகமாக உள்ளவர்களுக்கு துன்பங்களுடன் கொடூரமும் இருக்குமென்று நினைத்து குருவை பக்தியுடன் சேவிக்கலாணன். குருவே சகல தேவதா ரூபமென்று நினைத்து காசி ஷேத்திர யாத்திரையும் செய்யாமல் அங்கு தேவதைகளையும் சேவிக்காமல் குரு சேவையில் மூழ்கினான்.
மந்த்ராலயத்தில் ஸ்ரீ சுயதீந்த்ர தீர்த்தர் ஸ்ரீ ராகவேந்திரரின் பாதுகைக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி
ஒரு நாள் காசி விஸ்வநாதர் தீபகனின் குரு பக்திக்கு உவந்து தரிசனம் தந்து “என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். அவன் குருவின் அனுமதி இல்லாமல் எந்த வரமும் கேட்க முடியாது என்று கூறி, தன் குருவிடம் சென்று இந்த விஷயத்தை கூறி “உங்கள் வியாதி போகும்படி நான் வரம் கேட்கலாமா?” என்றான்.
அப்போது அவர், “என்னடா எனக்கு சேவை செய்வது உனக்கு கடினமாக உள்ளதா? என் பாவத்தை தீர்க்க என் கர்மாவை நானே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆகையால் நீ எந்த வரமும் கேட்க வேண்டாம்” எண்டு கோபித்துக் கொண்டார்.
தீபகன் காசி விஸ்வநாதரை பார்த்து “ஸ்வாமி, எனக்கு என் குருவே சகலமும். என் குருவிற்கு விருப்பமில்லாதது எனக்கு வேண்டாம். ஆகையால் நீங்கள் செல்லலாம்” என்றான்.
காசி விஸ்வநாதர் இதைக் கேட்டு மிக்க ஆச்சிரியப்பட்டு உடனே வைகுண்டதிற்குச் சென்று விஷ்ணுவிடம் தீபகனின் குரு பக்தி பற்றி தெரிவித்தார். இதைக் ஆச்சரியப்பட்ட விஷ்ணு தீபகனின் குரு பக்தியால் ஆனந்தப்பட்டு அப்படிப்பட்ட சீடனைப் பார்க்க்க வேண்டுமே என்று தீபகனிடம் சென்று அவனிடம் “பாலகா உன்னுடைய குரு பக்திக்கு நான் பெரும் சந்தோஷப்பட்டேன் உனக்கு என்ன வரங்கள் வேண்டுமோ கேள். அவற்றை நான் தருகிறேன்” என்றார்.
தீபகன் விஷ்ணுவை வணங்கி “தேவா…. வரங்களைப் பெற உங்களுக்க தவம் செய்பவர்களை விட்டு விட்டு உங்களை என்றும் வணங்காத எனக்கு தரிசன தந்தீர்களே ஏன்?” என்று கேட்டார்
விஷ்ணு “அப்பனே குருவை பக்தியுடன் சேவித்தால் என்னை சேவிப்பது போல் ஆகும். அப்படிப்பட்ட உத்தமனான சீடனுக்கு நான் வசமாகிறேன். தாய், தந்தையர்களை, வித்வான்களை, பிராமணர்களை, யதுகளை, யோகிகளை, தவம் புரிபவர்கள், திருநீறு பூசியவர்களை, கணவனே கண்கண்ட தெய்வம் போல் நினைத்து அவர்களை சேவிக்கும் உத்தமிகள், எல்லோரும் என்னை சேவிப்பவர்கள் ஆவார்கள். ஆகையால் என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார்.
தீபகன் விஷ்ணுவை வணங்கி “குருவே சகல தேவதா ஸ்வரூபம், சகல தீர்த்த சொரூபம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நீங்கள் கொடுக்கும் வரங்கள் குரு அவர்கள் கொடுக்க முடியுமல்லவா?” என்றான். ஸ்ரீமன் நாராயணன் “நாங்கள் இருவரும் ஒன்று ஆகையால் எங்கள் சந்தோஷத்திற்காக வரம் கேள்” என்றார்.
“சுவாமி அப்படி என்றால் என்றும் என் குரு பக்தி பெருகிக் கொண்டிருக்குமாறு அருள் புரியுங்கள்” என்று வேண்டினான். லக்ஷ்மிபதி சந்தோஷமடைந்து “குரு சேவாயால் நீ உயர்ந்து விட்டாய். சகல தேவதைகள் உன் வசமாகி விடுவார்கள். இந்தக் காசி விஸ்வநாதர் என்றும் கண் இமை போல் உன்னைக் காப்பாற்றுவார். எவனொருவன் குருவே பரமார்தமென்றும், சகலமும் அவர் என்றும், மும்மூர்த்திகளின் அவதாரமென்றும் அறிந்து அவரை சேவிக்கிறானோ அவனுக்கு எல்லா வளமும் கிடைத்து சுகமாக வாழ்வான். குருவை சேவிப்பவர்களுக்கு மும்மூர்த்திகள் என்றும் வசமாவார்கள். மும்மூர்த்திகளின் அருளினால் மனிதர்களுக்கு சத்குரு கிடைப்பார்” என்று கூறி மறைந்தார்.
தீபகன் தன குருவான வேத தருமரிடம் சென்று நடந்ததை எல்லாம் சொல்ல குரு மிக்க மகிழ்ச்சியுடன் “மகனே உன் குருபக்திக்கு மிக்க மகிச்சி அடைந்தேன். நீ காசியில் சுகமாக வாழ உனக்கு நவநிதிகள். எல்லா சித்திகளும் வசமாகும். எல்லா கல்விச் செல்வங்கள் உன்னிடம் வந்தடையும். உன் நாமத்தை சொல்வதினால் மனிதர்களின் சகல வியாதிகள், துன்பங்கள் நிவர்த்தியாகும். உன்னை பக்தியுடன் துதிப்பவர்களுக்கு எல்லா வளமும் கிடைக்கும். கலியுகத்தில் அனைவரையும் துன்புறுத்தும் கலியின் தீமை குருபக்தி இருப்பவர்களை மட்டும் அண்டாது!” என்று ஆசிர்வதித்து பிரகாசமான உடலைப் பெற்றார்.
வேததர்மர் ஒரு சீடன் எப்படி சேவை செய்ய வேண்டும், முக்தி வேண்டுகிறவர்கள் எப்படி தன் பாவ கர்மாவை அனுபவிக்க வேண்டுமென்றும் உலகிற்கு தெரிவிப்பதற்காக இப்படி ஒரு ரூபம் எடுத்தார். நாடகம் நடத்தினார்.
எவனொருவன் மிக்க பக்தியுடன் சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் வாழ்வை கழிக்கவேண்டும்.

No comments:

Post a Comment