பாண்டவர்களைப் பழிவாங்க, சகுனியின் ஆலோசனையின் பேரில் துரியோதனன் தருமபுத்திரனை சூதாட அழைத்தான்.
பீஷ்மர், விதுரர் முதலானோர் எவ்வளவோ எடுத்துச் சொல்லியும், சகுனியின் வார்த்தையையே வேதவாக்காகக் கருதி, துரியோதனன் தருமனைச் சூதாட அழைத்தான்.
துரியோதனன் சார்பில் சகுனி காய்களை உருட்டினான். அவன் சொல்கிறபடிதாயம் பேசும். அது அவனது அபாரசக்தி.
தருமன் தன் சார்பில் கிருஷ்ணன் ஆடுவார் என்று சொல்லியிருந்தால் நடந்ததே வேறாக இருந்திருக்கும்.
சூதால் வரும் தீமைகளை நன்கு அறிந்தவன் தான் தருமன். ஆனால் ஆசை அவனை விடவில்லை. "அரசர்கள் சூதாட்டத்தில் பங்கு கொள்வது இயல்பு' என்று சகுனி சொன்ன நியாயத்தை ஏற்றான்.
தான் செய்யும் இத்தகாத செயலுக்கு கண்ணனை சாட்சியாக்க தர்மன் விரும்பவில்லை என்பது ஒரு காரணம். மற்றொரு காரணம், தன் ஆட்டத் திறமையின்மீது அபார நம்பிக்கை வைத்திருந்தான். அதுதான் அவனது பின்னடைவுக்குக் காரணம்.
சூதாட்டத்தால் நாட்டை இழந்தான். தம்பிகளைப் பணயமாக வைத்து இழந்தான். விதி அவன் கண்களை மறைத்தது! மனைவி பாஞ்சாலியையும் இழந்தான்.
பின்னர் பாண்டவர்கள் வனவாசம் சென்றதும், 13 ஆண்டுகள் கழித்து திரும்பி வந்ததும், கண்ணன் தூது சென்றதும், அது தோல்வியில் முடிந்து போர் துவங்கியதும் நாம் அறிந்ததே.
குருக்ஷேத்திரப் போரில் செய்நன்றிக்காக பீஷ்மர், துரோணர், கிருபாச்சாரியார் ஆகிய அறஞ்சார்ந்த பெருமக்கள் மூவரும் துரியோதனன் பக்கமே நின்று போரிட்டனர்.
அர்ஜுனனின் அம்புகளால் பீஷ்மர் விழுந்தார். அம்புப் படுக்கையில் படுத்தவாறு, உத்தராயண புண்ணிய காலத்தை எதிர்நோக்கி தன் உயிரைவிடக் காத்திருந்தார்.
இதுதான் சரியான சமயம் என்று, கண்ணன் பாண்டவர்களை அணுகி, பீஷ்மரை வணங்கி அவரிடம் தர்மோபதேசம் பெறுமாறு ஆலோசனை கூறினார். பாண்டவர்களுடன் பாஞ்சாலியும் உடன் சென்று பீஷ்மரை வணங்கினர்.
அப்போது கண்ணன் சொன்ன வார்த்தைகளை எண்ணி பாஞ்சாலி சிரித்தாள். ""அன்று துரியோதனன் சபையில் நான் மானபங்கப்பட்டு மனம் வருந்தி நின்றபோது, அதைத் தடுக்கவோ, துரியோதனனுக்கு தர்மோபதேசமோ செய்யாது மௌனமாக இருந்துவிட்டு, இப்போது பாண்டவர்களுக்கு தர்மத்தைப் பற்றி கூற முற்படுவது என்ன நியாயம்?'' என்று கேட்டாள்.
பீஷ்மர் பாஞ்சாலியைப் பார்த்து, ""அம்மா!
நீ சொல்வது நியாயம் தான். அன்று தர்ம உபதேசம் செய்யும் தகுதி எனக்கில்லை. துரியோதனன் போட்ட உணவை அருந்திய நான் அவனது தீயகுணங்களால் பாதிக்கப்பட்டேன். அர்ஜுனனின் அம்பால் என் உடலிலிருந்த ரத்தம் வெளியே றியபோது என் பாவகுணங்களும் அறவே நீங்கிவிட்டன. அதனால்தான் நான் இப்போது உங்களுக்கு தர்மத்தைப் பற்றி எடுத்துச் சொல்லும் தகுதி பெற்றேன்'' என்றார்.
உண்மைதான். இதை உணர்த்த ஒரு கதை...
இறை நம்பிக்கையும் இல்லற ஒழுக்கமும் கொண்ட ஒரு தம்பதியர் இருந்தனர். முறைப்படி பூஜை செய்துவிட்டுதான் உணவே உண்பர். இவர்களுடைய பக்தியை மெச்சிய ஒரு மகான் அவர்களை ஆசீர்வதிக்க வந்தார்.
அவரது பாதக் கமலங்களை நீரால் அபிஷேகம் செய்து, உபசாரங்கள் செய்து பக்குவமாக உணவு சமைத்துப் பரிமாற இருந்த சமயம், மனைவி வீட்டுக்கு விலக்காகிவிட்டாள். எனவே மகானுக்கு அவள் சமைத்த உணவைப் பரிமாற முடியவில்லை. எனவே கணவன் பக்கத்து வீட்டுப் பெண்மணியை அழைத்து
சமையல் செய்து படைக்கும்படி கேட்டுக் கொண்டான். அவளும் சமைத்துப் பரிமாறினாள். உணவு உண்டபின் மகான் சற்று ஓய்வெடுத்துக்கொண்டு, பின் பக்தரிடம் விடைபெற்று தன் ஆசிரமத்திற்குச் செல்லும் போது, பக்தரின் வீட்டில் இருந்த வெள்ளிக்கிண்ணத்தை திருடிச் சென்றுவிட்டார்.
பக்தர் இதைப் பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் முற்றும் துறந்த துறவிக்கோ மனவருத்தம். இதுநாள்வரை தம் வாழ்நாளில் ஒரு முறைகூட இம்மாதிரி தவறான நோக்கம் எதுவும் (திருட வேண்டுமென்ற எண்ணம்) தன் மனதில் தோன்றியதில்லை. இப்போது எப்படி அந்தத் தவறைச் செய்ய நேரிட்டது என்று பெரிதும் வருந்தினார்.
பக்தரின் வீட்டுக்கு நேரில் வந்து வெள்ளிப் பாத்திரத்தைத் திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கோரினார்.
""சுவாமி! நீங்கள் என் வீட்டுக்கு வந்தபோது, உங்களை உபசரிக்க நானும் என் மனைவியும் ஏற்பாடு செய்திருந்தோம். ஆனால் தக்கசமயத்தில் அவள் உதவ முடியாமல் போனதால், பக்கத்து வீட்டுப் பெண்மணியை அழைத்துச் சமையல் செய்யச் சொன்னேன்.
அவள் திருட்டு சுபாவம் உள்ளவளாதலால், அவள் சமைத்த உணவை உண்ட உங்களுக்கு அந்த எண்ணம் வந்துவிட்டது'' என்றார் பக்தர்.
ஆகவே பிறருக்கு உணவு படைக்கும்போதும், நாம் சமையல் செய்யும்போதும் தூய சிந்தனையுடன்- இறை உணர்வுடன் செய்தாலேயே அந்த உணவு சுத்தமானதாகும். ஆகவேதான் "பரான்ன போஜனம்- தகாதவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது' என்று சொல்லி வைத்திருக்கிறார்கள்.
பீஷ்மர் துரியோதனனது உணவை உண்டதால்தான் அவரிடமும் அவனது துர்க்குணங்கள் சேர்ந்துவிட்டன. பாஞ்சாலி சிரித்ததில் இந்த உண்மை புலனாகிறது.
No comments:
Post a Comment