வாசியடக்கும் வகை வாசியினால் கெட்டர்களைச் சொல்லியது
காணப்பா மூச்சடக்கிச் செத்தோர் கோடி
கண் தெறித்துச் சூலையிலே மாண்டோர் கோடி
தோணப்பா மெய் மறந்துப் போனார் கோடி
சுற்றெழும்பி கெடத்தோடே விழுந்தோர் கோடி
ஊணப்பா உண்ணாக்கால் அடைப்போர் கோடி
உள்ளடக்கிக் கோழியைப்போல மடிந்தோர் கோடி
சாணப்பா முழம் அப்பா எழுந்தோர் கோடி
தப்பிவிட்டு அற்பர்களாய் இருந்திட்டாரே
பாடலில் சரியான அறிவும் வழிகாட்டலும் இல்லாமல் குண்டலினி யோகத்தை மேற்கொள்பவர்கள் தமது கபாலம் வெடித்து சாவர் என்று கூறிய அகத்தியர் இப்பாடலில் மேலும் பல ஆபத்துக்களைப் பட்டியலிடுகிறார். கோடிக்கோடி மக்கள் இப்பயிற்சிகளினால் (1) தமது மூச்சை அடக்கி மாண்டுள்ளனர், (2) கண்கள் தெறித்து இறந்துள்ளனர், (3) சூலை நோய் எனப்படும் கடுமையான வயிற்றுப் புண்களால் மரணத்தைத் தழுவியுள்ளனர் (வயிற்றில் சூலத்தால் குத்துவதைப் போல வலிப்பதால் இந்த நோய் சூலை என்ற பெயரைப் பெற்றது), (4) தமது உடலுணர்வை இழந்துள்ளனர், தாம் உடல் பெற்றுள்ளோம் என்பதையே அறியாமல் இருக்கின்றனர், (5) (அதிகரித்த சக்தியினால் ) மேலும் கீழும் குதித்து உடலுடன் கீழே விழுகின்றனர், (6) உண்ணாக்கை மறித்து (அமிர்தம் ஏற்பட) கோழியைப் போலக் கொக்கரித்து இறந்துள்ளனர் (7) தமது குண்டலினி சக்தியை ஒரு சாண் அல்லது முழம் மட்டுமே எழுப்ப சக்தி பெற்று அதையும் இழந்துவிட்டு அற்பர்களாக இருக்கின்றனர் என்று அகத்தியர் கூறுகிறார்.
No comments:
Post a Comment