Monday, September 15, 2014

அகஸ்தியரின் மகிமைகள்


அகத்தியர் தோற்றம் பற்றி பல விதமாகக் கூறப்படுகிறது. தாரகன் முதலிய அரக்கர்கள் உலகை வருத்த, அவர்களை அழிக்க இந்திரன், வாயு, அக்கினி ஆகியோர் பூமிக்கு வந்தனர். இவர்களைக் கண்ட அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்தார்கள். இந்திரனின் யோசனைப்படி அக்கினி வாயுவுடன் கூடி பூமியில் விழுந்து மிர்திரர் குடத்திலிட்ட வீரியத்திலிருந்து அகத்தியராய் அவதரித்தார் என்றும், வருணன் தண்ணீரிலிட்ட வீரியத்திலிருந்து வசிஷ்டரும் அவதரித்தனர் என்றும், குடத்திலிருந்து தோன்றியமையால் அகத்தியர் குடமுனி, கும்பயோகி என்னும் பெயர்களைப் பெற்றார் என்றும் கருத்துகள் நிலவுகின்றன.
முன்பு தேவர்களை வருத்திய அசுரர் இப்போதும் வருத்த ஆரம்பித்தனர். இந்திரன் அவர்களை அழிக்க வரும்போது அசுரர்கள் கடலுக்குள் ஒளிந்து கொண்டனர். தேவேந்திரன் வேண்டுகோளுக்கிணங்க அகத்தியர் சமுத்திர நீர் முழுவதையும் குடித்து விட, இந்திரன் அசுரர்களை அழித்தார். அதன்பின் நீரை மீண்டும் கடலுள் விடுவித்தார் அகத்தியர்.
அகத்தியர் நீரின் மேல் படுத்தபடியே பன்னிரெண்டாண்டுகள் கடுந்தவமியற்றி அரிய சக்திகளை பெற்றார். கயிலையில் நடந்த சிவபெருமான் திருமணத்தின் போது வடதிசை தாழ்ந்து தென்திசை உயர்ந்தது. அதனால் அகத்தியரை தென் திசைக்கு செல்லுமாறு சிவபெருமான் கட்டளையிட்டார்.
மேருமலைக்கு செல்ல வழிவிடாமல் நின்ற விந்தியமலை, அகத்தியரைக் கண்டதும் பணிந்து தாழ்ந்து நின்றது. தான் தென் திசை சென்று வரும் வரையில் பணிந்து இருப்பாயாக என்று கூறிச் சென்ற அகத்தியர் மீண்டும் வடதிசை செல்லாததால் விந்திய மலையும் உயரவில்லை.
இராமபிரானுக்கு சிவகீதையை போதித்துள்ளார் அகத்தியர்.
சுவேதன் என்பவன் பிணந்தின்னுமாறு பெற்றிருந்த சாபத்தை போக்கினார். தமக்கு வழிபாடு செய்யாது யோகத்தில் அமர்ந்திருந்த இந்திரத்துய்மன் என்பவனை யானையாகுமாறு சபித்தார்.
அகத்தியர் தம் முன்னோர்களுக்காக விதர்ப்ப நாட்டை அடைந்து அவ்வரசன் மகள் உலோபமுத்திரையை மணந்து தென்புலத்தார் கடனை தீர்த்தார்.
தென் திசைக்கு வந்த அகத்தியர் பொதிகை மலையில் தங்கி முருகக் கடவுளின் ஆணைப்படிஅகத்தியம்என்னும் நூலை இயற்றினார்.
அகத்தியர் இந்திரன் சபைக்கு சென்றபோது இந்திரன் ஊர்வசியை நடனமாட செய்தான். ஊர்வசி இந்திரன் மகன் சயந்தனிடம் கொண்ட காதலால் தன்னிலை மறந்தாள். அதனால் அகத்தியர் சயந்தனையும் ஊர்வசியையும் பூமியில் பிறக்கும்படி சபித்தார்.
வாதாபி, வில்வளவன் என்னும் அரக்கர் இருவரில் வில்வளவன் வேதியர் உருக்கொண்டு வழியில் செல்லும் வேதியர், முனிவர் முதலானோரை விருந்திற்கு அழைத்து வாதாபியைக் கறி சமைத்து படைத்து வாதாபியை திரும்ப அழைக்க; அவன் அவர்கள் வயிற்றைக் கிழித்து வெளியே வருவதால் அவர்கள் இறந்து போவார்கள். முனிவர் இதனை அகத்தியரிடம் முறையிட்டனர். அகத்தியர் அவர்களிடம் விருந்து உண்ண சென்றார். வில்வளவன் உணவு படைத்துவிட்டு அகத்தியர் வயிற்றிலிருக்கும் வாதாபியை கூப்பிட அகத்தியர்வாதாபே ஜீர்ணோ பவஎன்று வயிற்றைத் தடவ வாதாபி இறந்தான். நிலமையை அறிந்த வில்வளவன் அகத்தியரிடம் மன்னிப்பு கோரினான்.
சிவ பூசை செய்வதற்காக கமண்டலத்தில் அகத்தியர் கொண்டு வந்த கங்கை நீரை விநாயகர்காக உருகொண்டு சாய்த்துவிட கமண்டலத்திலிருந்து வழிந்து ஓடிய நீரே காவிரி ஆறு ஆனது.
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர்.
தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார்.
புதுச்சேரிக்கு அருகிலுள்ளஉழவர் கரையில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதிஅகத்தீஸ்வரம்என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது.
அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர்.
அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்தியர் பெருமானின் பூசை முறைகள்
பதினாறு போற்றிகள்:
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2.
சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3.
தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4.
விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5.
கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6.
சித்த வைத்திய சிகரமே போற்றி!
7.
சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8.
இசைஞான ஜோதியே போற்றி!
9.
உலோப முத்திரையின் பதியே போற்றி!
10.
காவேரி தந்த கருணையே போற்றி!
11.
அகத்தியம் தந்த அருளே போற்றி!
12.
இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13.
அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14.
அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15.
இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16.
இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
நிவேதனம்
பஞ்சாமிர்தம், பழங்கள், சக்கரைப்பொங்கல், இளநீர் போன்றவற்றுடன் இளம் பச்சை நிற வஸ்திரம் அணிவித்து புதன்கிழமை பூசை செய்யவும். நிறைவாக “16 போற்றி!” சொல்லி ஆராதனை செய்ய வேண்டும்.
அகத்திய முனிவரின் பூசா பலன்கள்
1. இசையிலும் கவிதையிலும் மேன்மையுண்டாகும்.
2.
கல்வித்தடை நீங்கும்.
3.
புதன் பகவானால் உண்டான தோஷம் நீங்கும்.
4.
முன்வினை பாவங்கள் அகலும்.
5.
பித்ருசாபம் நீங்கி அவர்களின் ஆசி கிடைக்கும்.
6.
பேரும், புகழும், மதிப்பும் தேடி வரும்.
7.
பூர்விக சொத்துக்கள் கிடைக்கும்.
8.
சகலவிதமான நோய்களும் தீரும்.
9.
குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும்


1 comment: