Thursday, September 4, 2014

சைவ சமயம் - வினா விடை



திருச்சிற்றம்பலம் முன்னுரை நமச்சிவாய என்பார் உளரேல் அவர் தம் அச்ச நீங்கித் தவநெறி சார்தலால் அமைத்துக் கொண்டதோர் வாழ்க்கையனாகிலும் இமைத்து நிற்பது சால அரியதே.
உய்வார்கள் உய்யும் வகை:
“வாய்த்தது நந்தமக்கு ஈதோர் பிறவி. மதித்திடுமின்!” என்று அறைகூவினர் நாவினுக்கு அரசர். இப்பிறவி பாவமானது அல்ல. இது இறைவன் நமக்குக் கொடுத்த பெருங்கொடை. அரியதாகிய இந்த மனிதப் பிறவியை நாம் பயன்படுத்த முதற்கண் நாம் இதன் நோக்கத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.
இவ்வுலக வாழ்வு காரணம் இன்றி இறைவனால் ஏற்படுத்தப்பட்டதன்று. இங்கு நமக்குக் கிடைக்கும் நல்லனவும் தீயனவும் யாவையும் காரணம் இன்றி ஏற்படுவதன்று. இறைவன் காரணம் இன்றி பலவிதமான துயரங்கள் நிலவும் இவ்வுலகில் நம்மை வைத்திருந்தால் அவரை நாம் எப்படிக் “கருணை வடிவானவர்” என்று அழைக்க முடியும்?
சைவ நன்னெறி இதற்குத் தகுந்த விடை கூறி நம்மை உய்விக்கிறது. ஆன்மாக்களாகிய நாம் யாராலும் படைக்கப்படவில்லை. (இறைவனால் படைத்தார் எனில், அவர் படைக்காமல் இருந்திருந்தால் நாம் துன்பத்திற்கு ஆளாயிருக்க மாட்டோம். எனவே அவர் செய்தது கருணை உடையவராகச் செய்ததாக இருக்க முடியாது.) தொன்று தொட்டே ஆணவம் என்ற மலம் ஒட்டுண்ணி போல அழுத்த அழுந்தி இருந்தோம். எப்போதும் பேரின்ப மயமாக உள்ள இறைவன் இவ்வாறு மலத்தால் துன்புறும் உயிர்களுக்கு இரங்கி அவை அம்மலத்தின் பற்றை விட்டு இன்பமயமான தன்னைப் பற்றுதல் பொருட்டு உடல், கருவிகள், உலகங்கள் மற்றும் போகங்களைப் படைத்தார். இறைவன் எல்லா வல்லமை¨யும் உடையவர் என்றாலும் அவரால் இன்பத்தை ஊட்ட முடியுமே அன்றி அவ்வின்பத்தை நாம் தான் நுகர்ந்து / சுவைத்து அனுபவிக்க வேண்டும். அந்த இன்பத்தைப் பருகுதலுக்கு நாம் நம்மை ஆயத்தப் படுத்திக் கொள்ளவேண்டும். (இனிப்பினைப் பிறர் தர வல்லவர் எனினும் நாமே அதன் சுவையை உணரவேண்டும். அச்சுவை பிறரால் நமக்குத் தரமுடியாதது.) அவ்வாறு நாம் சிறிது சிறிதாகப் பக்குவப் படுதல் பொருட்டே மேற்கூறிய உடல் முதலானவை படைக்கப்பட்டன. இவை நமக்குத் தண்ணீரில் தத்தளிக்கும் எறும்புக்கு நீட்டிய குச்சி போல இன்பக் கரை அடைய இறைவன் நமக்கு அளித்த பெருங்கொடைகள் ஆகும்.
இறைவன் இத்தகு கருணை செய்த போதும் நாம் அதன் பெருமை உணராது, குச்சியில் ஏறிய எறும்பு கரை சேரக் கருதாது ஆடி மீண்டும் நீரில் விழுவது போல், நாம் செல்ல வேண்டிய நெறியைப் பற்றாது, இவ்வுடலே நாமென்று மயங்கி, வேண்டிக் கொண்டுவந்த தோண்டியைக் கூத்தாடிப் போட்டுடைக்கின்றோம். இம்மயக்கத்தில் பலர் சேரவேண்டிய சிவகதிக்கும் முயல்வதில்லை, இவ்வுலக வாழ்வையும் அழியாத இன்பமாக்கிக் கொள்வதில்லை. இவ்வாறு நாம் எண்ணும் எண்ணங்களே, செய்யும் செயல்களே நல்வினை மற்றும் தீவினைகளாக இறைவனால் நமக்கு ஊட்டப்படுகின்றன. இறைவன் நமக்கு இவ்வினைகளை ஊட்டுவதன் காரணம் தண்டிப்பதல்ல, திருத்துவதே. (தவறுகளை எல்லாம் தண்டித்தால் அவர் எப்படி அருள் நிறைந்தவர் என்பது?) எவ்வாறு ஒரு தாய் தவறு செய்யும் குழந்தையைப் பழி வாங்கும் எண்ணமின்றித் திருத்தும் நோக்கத்தில் மட்டுமே கடிந்து கொள்கின்றாளோ அது போன்றே தாயினும் நல்ல சிவபெருமான் நம்முடைய பெரிய வினைக்கூட்டத்திலிருந்து சிறிது நமக்கு ஊட்டுகிறார்.
இதனை உணர்ந்து நமது உடல் மற்றும் நமக்குக் கிடைத்த எல்லாமும் நமது அன்று, சிவபெருமானுடையன என உணர்ந்து, அவர் நம் மேல் பொழிந்துள்ள கருணையை நினைந்து நினைந்து பெருகுகின்ற அன்பு என்னும் ஒட்டுப் பொருளினால் அவரைப் பற்றிக்கொண்டால் – இன்பமே எந்நாளும்; துன்பமில்லை. நாம் செய்ய வேண்டுவன அவ்வளவே.
“இவ்வாறு இறைவனின் கதிரொளி போன்ற, இருள் கடந்த பெருமையினை அறிந்து, இங்கு காணும் எல்லாவற்றையும் உண்மை உணர்ந்த உறுதியுடையவன், இறைவனின் பல நாமங்களைக் (பெருமைகளை) கூறி வணங்குகிறான். அவ்வாறு அறிபவன் அமுதத்தை இங்கேயே பெற்றவன் ஆகின்றான். வேறு வழியேதும் அறியப்படவில்லை.” - யசுர் வேதம்.
இத்தகு பெருமக்கள் எப்போதும் இன்பமே வடிவான இறைவனின் தொடர்பிலேயே உள்ளதால் பிற துன்பங்கள் அவர்களால் நுகரப்படுவதில்லை. இவ்வுலக வாழ்விலே சிவ மயமாக - இன்ப மயமாகத் திகழ்ந்து, பின்னர் அவ்வின்பம் அடையத் தேவைப்பட்ட உடல் முதலியன வேண்டாது இன்பம் நீங்காத சிவகதி அடைகின்றனர்.
கரும்பு தின்னக் கூலியுமா வேண்டும்? சிவபெருமானின் தூல மந்திரமான, “நம:சிவாய” என்ற திருஐந்தெழுத்தை ஓதி அவர் மேல் அன்புற்று இன்புறுவோம்.
தண்பொழில் சூழ் சண்பையர்கோன் தமிழ்ஞான சம்பந்தன் விண்பொலிவெண் பிறைச்சென்னி விகிர்தனுறை வெண்காட்டைப் பண்பொலி செந்தமிழ் மாலை பாடிய பத்திவை வல்லார் மண்பொலிய வாழ்ந்தவர் போய் வான் பொலியப் புகுவாரே.
உலகம் முழுமையும் பரவியிருந்த - காலம் கடந்த சமயம் சைவமே. எல்லாம் கடந்தவரும் நம்மை உய்விக்கும் ஒளி வடிவானவரும் ஆன இறைவன் மேல் நம் அன்பை ஒருமுகப்படுத்தும் பொருட்டு சுடர்க்குறியாக (இலிங்கம்) இயல்பாக இறைவனைத் தந்தது இச்சைவம். இச்சைவத்தின் அடிப்படைக் கூறுகள் பலவாறாக - எடுப்போர் வண்ணத்திற்கேற்பவும், காலத்தால் திரிந்தும் உலகின் பலபல சமயங்களில் உள்ளதை ஆய்ந்து உணரலாம்.
இவ்வாறு முதன்மையானதும் தூய்மையானதுமான சைவத்தில் வழிவழியாக வந்தவர்கள் தங்களுக்குக் கிடைத்தது, தொட்டதெல்லாம் பொன்னாக்கும் மணியென்று உணராது, பழைய கல் என்று மயங்கி, பயன் பெரிதில்லாத கூழாங்கற்கள் பல தேடி அலைகின்றனர். அத்தகு நமக்கு, “மகிழ்தி மட நெஞ்சே! மானிடரில் நீயும் திகழ்தி!! பெருஞ் சேமம் சேர்ந்தாய்!!!” என்று சைவத்தின் பெரியோர்கள் நம்மைக் காலந்தோறும் இறைவனின் திருவருளால் உண்மை உணர்த்தி வழிப்படுத்தி வருகின்றனர். அத்தகு உண்மைகளைத் தொகுத்து அளித்த யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர் அவர்களின் “சைவ வினா விடை”, தருமபுர ஆதீன வெளியீடான “சித்தாந்த சைவ வினா விடை” மற்றும், திருவாவடுதுறை ஆதீன வெளியீடான “சைவ சித்தாந்தத் தடைகளும் விடைகளும்” போன்ற நூல்களைச் சார்ந்து “சைவ சமயம்” பற்றிய வினா விடைகள் இங்கு இடம்பெறுகின்றன
கடவுள் இயல்

உலகத்திற்கு முதலாக இருப்பவர் யார்?

இறைவன்.

இறைவனை எப்பெயர் கொண்டு சிறப்பாக அழைக்கின்றோம்?

சிவபெருமான்.

சிவபெருமான் என்று ஏன் அழைக்கின்றோம்?

சிவம் என்ற சொல்லுக்கு "செம்மை" (பூரணத்துவம்), "மங்களமானது" என்று பொருள். எல்லாவற்றிற்கும் மேலாக, முழுமையாக, தான் மங்களகரமாகவும் தன்னைச் சார்ந்தவர்களை மங்களகரமாக்குபவருமான இனிய இறைவனைச் சிவபெருமான் என்று அழைக்கின்றோம்.

சிவபெருமான் எப்படிப் பட்டவர்?

என்றும் உள்ளவர்; எங்கும் நிறைந்தவர்; எல்லாம் அறிபவர்; எல்லாம் வல்லவர்; தூயவர்; அழிவிலா இன்பம் உடையவர்; அன்பிலாதவர்க்கு ஆட்படாதவர்.

சிவபெருமானை நாம் ஏன் தொழ வேண்டும்?

சிவபெருமானைத் தொழுவதால் சிவபெருமானுக்கு எந்தப் பயனும் இல்லை. ஆனால், அழிவில்லாதவரும் இன்ப மயமானவருமான சிவபெருமான் தம்மைத் தொழுபவர்களுக்கு அந்த அழிவில்லாத இன்பத்தை அடைய அருள் புரிவார். உலகியலில் தோன்றும் இன்பங்கள் நிலையானவைகள் அல்ல. ஆனால் சிவபெருமான் அருளும் இன்பத்தைப் பெற்றவர்கள் என்றென்றும் இன்பத்தைப் பெற்று மகிழ்ந்திருப்பர். அதனால் இந்த உடல் எடுத்ததின் பயன் சிவ வழிபாடு செய்து அந்தப் பேரின்பத்தை அடைவதே.

சிவபெருமான் ஆன்மாக்களுக்காகச் செய்யும் தொழில்கள் யாவை?

படைத்தல், காத்தல், அழித்தல், அருளல், மறைத்தல் என்னும் ஐந்துமாம்.

படைத்தலாவது யாது?

ஆன்மாக்களுக்குத் தனு கரண புவன போகங்களை முதற் காரணத்தினின்றும் தோற்றுவித்தல்.

காத்தலாவது யாது?

தோற்றுவிக்கப்பட்ட தனு கரண புவன போகங்களை நிறுத்தல்.

அழித்தலாவது யாது?

தனு கரண புவன போகங்களை முதற்காரணத்தில் ஒடுக்குதல்.

மறைத்தலாவது யாது?

ஆன்மாக்களை இருவினைப் பயன்களாகிய போக்கியப் பொருள்களில் அமிழ்த்தல்.

அருளலாவது யாது?

ஆன்மாக்களுக்குப் பாசத்தை நீக்கிச் சிவதத்துவத்தை விளக்குதல்.

தனு கரண புவன போகம் என்றது என்ன?

தனு - உடம்பு, கரணம் - மன முதலிய கருவி, புவனம் - உடம்புக்கு ஆதாரமாகிய உலகம், போகம் - அனுபவிக்கப்படும் பொருள்.

சிவபெருமான் இந்த ஐந்து தொழில்களையும் எதைக்கொண்டு செய்கிறார்?

தமது சத்தியைக் கொண்டு செய்கிறார்.

சத்தி என்னும் சொல்லுக்குப் பொருள் யாது?

வல்லமை

சிவபெருமானின் சத்தி யாவர்?

உமாதேவியார்

சிவபெருமான் உயிர்களுக்கு அருள் செய்யும் பொருட்டு உமையோடு எழுந்தருளியுள்ள முதன்மைஇடம் யாது?

திருக்கயிலை மலை.

சிவபெருமான் உயிர்களுக்கு எவ்வெவ்விடங்களில் நின்று அருள் புரிகின்றார்?

சிவலிங்கம் முதலிய திருமேனிகளிடத்தும், சைவாசாரியாரிடத்திலும், சிவனடியாரிடத்திலும் நின்று அருள் செய்வார்.

சிவபெருமானை முழுமுதற் பொருளாக வழிபடும் சமயத்திற்குப் பெயர் யாது?

சைவம்

சைவத்தில் தலையாய நூல்கள் யாவை?

திருமறைகளும், ஆகமங்களும், திருமுறைகளும்.

இவைகளில் விதிக்கப்பட்டன யாவை?

சிவ புண்ணியமும் சீவ (உயிர்) புண்ணியமுமாம்.

சிவ புண்ணியம் யாது?

சிவமே முதல் எனக் கருதிச் செய்யப்படும் அனைத்தும் சிவ புண்ணியமாம்.

உயிர்ப் புண்ணியம் (சீவ நன்மை) யாது?

1. கடவுளை வழிபடல், 2. தாய், தந்தை, ஆசான் இவர்களைப் பேணுதல், 3. உயிர்க்கு இரங்குதல், 4. உண்மை பேசுதல், 5. செய்நன்றி அறிதல் போன்றன.

புண்ணியங்களைச் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

சிவ புண்ணியங்களைச் செய்தவர் சிவ இன்பத்தையும், சீவ ( உயிர் ) புண்ணியங்களைச் செய்தவர் சுவர்க்க இன்பத்தையும் அனுபவிப்பர்.

பாவங்கள் ஆவன யாவை?

கொலை, களவு, கள்ளுக் குடித்தல், ஊண் உண்ணல், பொய் பேசுதல், சூதாடுதல்.

பாவங்கள் செய்தவர் எதனை அனுபவிப்பர்?

நரகத்தில் விழுந்து அத்துன்பத்தை அனுபவிப்பர். 
நாட்கடன் இயல்

நாள் தோறும் முறையாக எந்த நேரத்திலே உறக்கம் நீங்கி எழ வேண்டும்?

சூரியன் உதிக்க ஐந்து நாழிகைக்கு முன்னே உறக்கம் நீங்கி எழ வேண்டும். ( விடியல் 4.00 மணி )

உறங்கி எழுந்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

திருநீறு அணிந்து சிவபெருமானை நினைந்து திருப்பள்ளி எழுச்சி முதலிய திருமுறைப் பாடல்களை ஓத வேண்டும்.

குளித்த பிறகு யாது செய்தல் வேண்டும்?

தூய நீர் கொண்டு அனுட்டானம் செய்து திருவைந்தெழுத்தை எண்ணித் திருமறைகள், திருமுறைகள் ஓத வேண்டும். 
திருநீற்று இயல்

சைவ சமயத்தோர் உடம்பில் அணிய வேண்டிய அடையாளம் யாது?

திருநீறு

திருநீறாவது யாது?

பசுவின் சாணத்தை நெருப்பில் சுடுதலால் உண்டாகிய திருநீறு.

எந்த நிறத் திருநீறு பூசத்தக்கது?

வெள்ளை நிறத் திருநீறு.

திருநீற்றினை எதில் வைத்துக் கொண்டு அணிய வேண்டும்?

பட்டுப் பையிலோ, சம்புடத்திலோ வைத்துக் கொண்டு அணிய வேண்டும்.

திருநீற்றினை எத்திக்கு முகமாக இருந்து அணிதல் வேண்டும்?

வடக்கு முகமாகவே, கிழக்கு முகமாகவே இருந்து அணியலாம்.

திருநீற்றினை எப்படி அணிய வேண்டும்?

நிலத்தில் சிந்தாத வண்ணம் அண்ணாந்து ‘சிவசிவ / நமசிவாய / சிவாயநம' என்று சொல்லி, வலக்கையின் நடு மூன்று விரலினாலும் நெற்றியில் அணிதல் வேண்டும்.

திருநீறு நிலத்தில் சிந்திவிட்டால் என்ன செய்ய வேண்டும்?

சிந்திய திருநீற்றினை உடனே எடுத்து விட்டு, மேலும் அந்த இடத்தில் துடைத்தெடுக்க வேண்டும்.

திருநீற்றினை நடந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ பூசலாமா?

கூடாது.

திருநீற்றினைக் கட்டாயமாக அணிய வேண்டிய நேரங்கள் யாவை?

தூங்கப் போகும் போதும், தூங்கி எழுந்த போதும், பல் துளக்கிய உடனும், குளித்த உடனும், உணவு உண்ணும் முன்னும், உண்ட பின்னும், சூரியன் தோன்றி மறையும் போதும் திருநீறு அணிய வேண்டும்.

ஆசாரியார், சிவனடியார் திருநீறு தந்தால் எப்படி வாங்குதல் வேண்டும்?

விழுந்து வணங்கி எழுந்து கும்பிட்டு இரண்டு கைகளையும் நீட்டி வாங்குதல் வேண்டும்.

கடவுள் முன்னும், குரு முன்னும், அடியார் முன்னும் எப்படி நின்று திருநீறு அணிய வேண்டும்?

முகத்தை திருப்பி நின்று அணிய வேண்டும்.

திருநீறு அணிதல் எத்தனை வகைப்படும்?

இரண்டு வகைப்படும், அவை : 1. நீர் கலவாது பொடியாக (உத்தூளனம்) அணிதல், 2. நீர் கலந்து முக்குறியாக ( திரி புண்டரம் ) அணிதல்.

திரிபுண்டரமாகத் தரிப்பதன் அறிகுறி யென்ன?

ஆணவம், கன்மம், மாயை யென்னும் மூன்று மலங்களையும் நீக்குமென்கிற குறிப்புத்தோன்றத் தரிப்பதாம்.

முக்குறியாக அணியத்தக்க இடங்கள் யாவை?

தலை, நெற்றி, மார்பு, கொப்பூழ், முழந்தாள்கள் இரண்டு, புயங்கள் இரண்டு, முழங்கைகள் இரண்டு, மணிக்கட்டுகள் இரண்டு, விலாப்புறம் இரண்டு, முதுகு, கழுத்து என்னும் பதினாறு இடங்களாம்.

முக்குறியாக அணியும் போது நெற்றியில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

இரண்டு கடைப் புருவ எல்லை வரை அணிய வேண்டும். அதற்குக் கூடாமலும் குறையாமலும் அணிய வேண்டும்.

மார்பிலும், புயங்களிலும் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

அவ்வாறங்குல நீளம் அணிய வேண்டும்.

மற்றைய இடங்களில் எவ்வளவு நீளம் அணிய வேண்டும்?

ஒவ்வோர் அங்குல நீளம் அணிய வேண்டும்.

முக்குறிகளின் இடைவெளி எவ்வளவினதாய் இருத்தல் வேண்டும்?

ஒவ்வோர் அங்குல அளவினதாய் இருத்தல் வேண்டும். ஒன்றை ஒன்று தீண்டலாகாது.

சைவ சமயத்துக்கு விபூதி ருத்திராக்ஷம் முக்கியமானதற்குக் காரணமென்ன?

பரமசிவனுடைய திருமேனியிலும் திருநேத்திரத்திலும் உண்டானமையால் முக்கியமாயின.

அவைக ளுண்டான வகை எப்படி?

பரமசிவனுடைய அக்கினிபோன்ற திருமேனிமேல் இயல்பாகப் பூத்ததுவே அனாதியான விபூதி. பின்பு தேவர் முதலிய சராசரங்களையெல்லாம் இறுதிக்காலத்தில் நீறாக்கித் தம்முடைய திருமேனியில் தரித்தருளினாரே அது ஆதி விபூதி. நெருப்பின்மேல் நீறுபூத்திருப்பதை இப்போதும் திருஷ்டாந்தமாகக் காணலாம்.

அதனை அணிவதனால் பயன் என்ன?

மாபாதகங்களெல்லாம் நீங்குமென்றும் அப்படிக்கொண்ட விபூதியை பசுவின் சாணத்தினால் விளைக்க வேண்டுமென்றும் அப்படி விளைப்பதில் கற்பம், அநுகற்பம், உபகற்பமென மூன்று விதியுண்டென்றும் அவற்றுள் ஒரு விதிப்படி விளைவித்துத் தரித்துகொள்ள வேண்டுமென்றும் ஆகமங்கள் சொல்லுகின்றன.

கற்பவிதி யாவ தெப்படிக்கொத்தது?

பங்குனிமாதத்தில் ஈசானத்தில் மேய்ந்துவந்து நல்லபசுக்களைப் பரிசுத்தமுள்ள தொழுவத்திற் சேர்த்து அவைகளிடுகிற சாணத்தைப் பூமியில் விழவிடாமல் தாமரையிலையி லெடுத்துக் கொண்டு மேலுள்ள வழுவை நீக்கிவிட்டு உண்டையாக்கி முன் விளைத்திருக்கிற சிவாக்கினியிலிட்டுப் பக்குவமாக வெந்த பிற்பாடு எடுத்துப் புதுப்பானையிலிட்டு வேண்டியமட்டில் விபூதிக் கோவிலில் வைத்துக் கொண்டு பூமியில் சிந்தாமல் தரித்துக்கொண்டால் செனன மரணதுக்கம் நீங்கி மோக்ஷமடையலாம். இவ்வாறு விளைவிப்பதுதான் கற்பவிதி. சாணத்தை யேந்தும்போதும் அக்கினியி விடும் போதும் வெந்தபின்பு எடுக்கும்போதும் புதுப்பானையில் வைக்கும்போதும் மந்திரஞ் சொல்லவேண்டும். அதனைச் குருபாலறிக.

அனுகற்பவிதி எப்படி விளைவிப்பது?

காட்டிலுலர்ந்த பசுவின் சாணத்தை யுதிர்த்துக்கோசலம் விட்டுப் பிசைந்து சிவாக்கினியி லிட்டுப் பக்குவப்படுத்துவதாம்.

உபகற்ப விபூதியாவது யாது?

இயல்பாக வெந்த காட்டுச்சாம்பல் சிவாலய மடைப்பள்ளிச் சாம்பல் இவைகளையெடுத்துக் கோசலம்விட்டுப் பிசைந்து உண்டாக்கி சிவாக்கினியிலிட்டுப் பக்குவப்படுத்தி முன்போல் எடுத்து வைத்துக்கொண்டு தரித்துக்கொள்ளுவதாம்.

1 comment: