Thursday, September 4, 2014

அன்னை ஸ்ரீ காளிகாம்பாள்




அன்னை காளிதேவியே பரப்பிரம்ம சொரூபிணி ஆவாள். ஆதிசக்தி என்பவள் இவளே. எண்ணற்ற அண்டங்களைத் தோற்றுவித்து அவற்றைக் காப்பவளும், பின் அவற்றின் இயல்பு நிலையில் ஒடுக்குபவளும் காளியே. சிவத்துடன் என்றும் கலந்திருக்கும் அன்னையின் அருள் அளப்பரியது. அவள் கோவில்கொண்டிருக்கும் ஆலயங்களும் அத்தகையவையே. அவ்வாறு, உலகத் தாயான அந்த தேவி கோவில்கொண்டிருக்கும் சிறப்பு வாய்ந்த தலங்களி லொன்று- சென்னை பாரிமுனையில், தம்புச்செட்டி தெருவில் அமைந்திருக்கும் ஸ்ரீ காளிகாம்பாள்- கமடேஸ்வரர் ஆலய மாகும்.
கல்வி, செல்வம், வீரம் என அனைத்தையும் வழங்கும் இந்த காளிகாம்பாளை வணங்கிப் பேறு பெற்றோர் பலர். அந்நிய அரசுக்கெதிராக கிளர்ந்தெழுந்து வாகை சூடிய மராட்டிய மன்னன் சத்ரபதி சிவாஜியும் அவர்களில் ஒருவர்.
சத்ரபதி சிவாஜி சென்னை ஸ்ரீ காளிகாம்பாள் உடனுறை கமடேஸ்வரர் ஆலயத்துக்கு வந்து அம்பாளை வழிபட்டார் என்பது வரலாறு.
வீர சிவாஜி 6-4-1627-ல் பிறந்தவர். சிவாஜியின் தந்தை ஷாஜி போன்ஸ்லே, பீஜப்பூர் சுல்தானிடம் ராணுவ அலுவலராகப் பணிபுரிந்தார். தாய் ஜீஜாபாய் சிறுவன் சிவாஜிக்கு அக்கால இந்து வீரர்களின் கதைகளைக் கூறி னார். அந்த வீர வரலாறுகள் சிவாஜியின் மனதில் ஆழப்பதிந்தன. அதுவே பிற்காலத்தில் அவர் மாவீரனாக விளங்குவதற்கு அடித்தளம் அமைத்தது.
சிவாஜி மகாராஷ்டிரர்களிடம் தேசிய உணர்வை உண்டாக்கினார். மொகலாயர் வசமிருந்த கோட்டைகளைக் கைப்பற்றி வெற்றி வாகை சூடி, மகாராஷ்டிர அரசை நிறுவினார். மாவீரன் சிவாஜி 3-4-1680-ல் மறைந்தார். அவர் மறைந்தாலும் அவருடைய வீர வரலாறு இன்றைக்கும் பேசப்படுகிறது.
சிவாஜி அரச சபையில் ஒருநாள், ""வீரர்களே! நம் சுதந்திர நாட்டைக் காண பல அக்கிரமங்களையும், அநியாயங்களையும், தியாகங்களையும் அம்பாள் பவானி ஆணையால் நான் செய்திருப்பேன். நான் தெரிந்தும் தெரியாமலும் செய்யும் பிழையும் பாவமே. அதனை ஒழிக்க கருநாடகத்திற்குப் புறப்படுகின்றேன். அங்குள்ள திருப்பாச்சூர், திருவாசூர், இராம்கூர் (இராமேஸ்வரம்) முதலிய புண்ணியத் தலங்களுக்குச் சென்று சிவபெருமானை வழிபடப் போகிறேன். நான் சுமக்கும் பாவ மூட்டை அன்றே தொலையும்'' என்றார். அதன்படி சிவாஜி தென்னகத்திற்கு வருகை தந்தார். 1677-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3-ஆம் தேதி அருள்மிகு காளிகாம்பாள் திருக்கோவிலுக்கு வந்து, காளிகாம்பாளை வழிபட்டார்.
சிவாஜி தேவி உபசாகர். அம்பாள் பவானியே அவரை ஆட்கொண்டு வழிநடத்தினாள். அவர் சிவசக்தியை நம்பியே எதையும் செய்தார். சிவாஜி ஒரு யோகியே. அவர் இந்து சாம்ராஜ்ஜியத்தை தேவியின் அருளாலும் பக்தியாலும் ஸ்தாபித்தார் என்ற உண்மை வெறும் புகழ்ச்சியில்லை.
சென்னை அரண்மனைக்காரத் தெருவில் முகாமிட்டு, காளிகாம்பாளை தரிசனம் செய்து சென்றபிறகுதான் வெற்றிவாகை சூடி மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியாக முடிசூட்டிக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்னை ஸ்ரீ காளிகாம்பாள் முதலில் தோன்றி அருள்பாலித்துக்கொண்டிருந்த இடம் சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையாகும். விஸ்வகர்மா சமூகத்தவர் இவ்வன்னையை வழிபட்டு வந்தனர்.
கிழக்கிந்திய கம்பெனியார் சென்னைப் பகுதியிலிருந்து மூன்று குப்பங்களை (சென்னைக் குப்பம், மதராஸ் குப்பம், வடவாறு குப்பம்) 1639-ஆம் ஆண்டு விலைக்கு வாங்கினர்.
பண்டக சாலை கட்டட வேலை 1640-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இக்கட்டடத்தின் ஒரு பகுதியை ஏப்ரல் 23-ஆம் தேதி செயின்ட் ஜார்ஜ் என்பவர் கட்டிமுடித்ததால், இதற்கு "செயின்ட் ஜார்ஜ் கோட்டை' என்று பெயரிட்டனர். அதாவது மதராஸ் குப்பத்தில்தான் ஆங்கிலேயர்கள் கோட்டையைக் கட்டிக்கொண்டனர். இப்பகுதியை அவர்கள் வெள்ளையர் பட்டினம் என்று அழைத்தனர். சுதேசிகள் வாழ்ந்த சென்னைக் குப்பத்தை கறுப்பர் பட்டினம் என்றழைத்தனர்.
கோட்டைப் பகுதிகள் இராணுவப் பாதுகாப்பு வளையத்துக்குள் இருந்ததால், மக்கள் வழிபடுவதற்கு சிரமமாக இருந்தது. இதனை உணர்ந்த ஆங்கிலேயர்கள் தாமாகவே முன்வந்து விஸ்வகர்மாக்களிடம், ""உங்கள் கடவுள்களை எங்கு வைத்து வழிபட விரும்புகிறீர்களோ, அங்கு வைத்துக் கொள்ளலாம். அதற்குத் தக்க வசதி செய்து தரப்படும்'' என்று கூறினர்.
அதன்படி விஸ்வர்மாக்கள் தாம் வணங்கிய ஸ்ரீ காளிகாம்பாளை, சென்னை தம்புச்செட்டித் தெருவில் நிர்மாணித்து திருக்கோவில் எழுப்பினர் என்பது வரலாறு.
இவ்வாலயமானது விஸ்வகர்மா சமூகத்தினரால் நிர்மாணிக்கப்பட்டு, அவர்களாலே பரிபாலனம் செய்யப்பட்டு வருகின்றது.
அருணையும் காஞ்சியும் சேர்ந்த மகிமைமிகுந்த தலம்; இந்திரன், குபேரன், விராட் புருஷனான ஸ்ரீ விஸ்வகர்மா ஆகியோர் வழிபட்ட தலம்; சிவசக்தி தலம்; இரண்டு பூதங்கள் இணைந்த தலம்; இஷ்டகாம்யார்த்த சித்திகளை சீக்கிரத்தில் அளிக்கும் தலம் என பல சிறப்புகளைப் பெற்றது காளிகாம்பாள் இலங்கும் இத்திருத்தலம். மகாலட்சுமியும், மகா சரஸ்வதியும் தம் இரு கண்களாக அமையப்பெற்றவள் ஸ்ரீ காளிகாம்பாள். எனவே செல்வமும் கல்வியும் குவிந்துள்ள திருநகரமாக சென்னை விளங்குகின்றது.
அன்னையின் சந்நிதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கிழக்கு (பூர்வாபி முகம்) நோக்கிய சந்நிதிக்கு எத்தனை சிறப்புகள் உண்டோ, அதனைக் காட்டிலும் கூடுதலான சிறப்பு மேற்கு நோக்கிய (பச்சிமாபி முகம்) சந்நிதிக்கு உண்டு.
காசி விஸ்வேஸ்வரர், திருக்காளத்தி காளத்திநாதர், சென்னை ஸ்ரீகாளிகாம்பாள், திருமயிலை கபாலீஸ்வரர், திருவான்மியூர் வான்மீகிநாதர் (மருந்தீஸ்வரர்), திருக்காஞ்சி வரதராஜப் பெருமாள், திருவானைக்கா ஜலகண்டேஸ்வரர், திருச்சி தாயுமானவர், பழனி முருகப்பெருமான் உள்ளிட்ட பல சிறப்பு வாய்ந்த ஆலயங்கள் மேற்கு நோக்கிய சந்நிதிகள் கொண்டவையே.
தொண்டை மண்டலத்தில், காஞ்சி மாநகரத்தில் அமர்ந்துள்ள ஸ்ரீ காமாட்சி, தனது இச்சா மந்திரத்தால் பன்னிரண்டு திருத்தலங்களில் காட்சி தந்து கருணை புரிகின்றாள். அவற்றில் ஒன்றாக விளங்குவது ஸ்ரீ காளிகாம்பாள் அமர்ந்துள்ள பாரதபுரி என்றழைக்கப்படும் இத்தலமாகும்.
கர்ப்பகிரகத்தினுள் அன்னை ஸ்ரீகாளி காம்பாள் அர்த்த பத்மாசனத்தில், பாசாங்கு சத்தைக் கையிலேந்தி, கமலத்தில் புன்னகை செய்கிறாள்.
அன்னையின் திருவடியில் ஸ்ரீ ஆதிசங்கரரால் நிறுவப்பட்ட அர்த்தமேரு அமைந்துள்ளது.
மூலவரின் உட்பிராகாரத்திற்கு மேற்கில் உற்சவர் மண்டபம் அமைந்துள்ளது. இங்கு உற்சவ அம்பாள் பெரிய நாயகி, மகாலட்சுமியும் மகா சரஸ்வதியும் இரு பக்கங்களிலும் எழுந்தருள அற்புதக் காட்சி தருகிறாள்.
உலக நடைமுறையில் செல்வமும் கல்வியும் சேர்ந்திருப்பதைக் காண்பது அரிது. ஆனால் அம்பாளின் அருளுக்குப் பாத்திரமாகிறவர்களிடம் கல்வியும் செல்வமும் சேர்ந்தே அமையும் என்பது உறுதி.
வாஸ்து முறைப்படி அமைக்கப் பட்ட ஆலயம் இது. முதற் பிராகார வலம் வரும்போது அக்னி மூலையில் மடப்பள்ளி. அடுத்து உற்சவர் வீதியுலா புறப்படுமுன் கண்ணாடி சேவை தென் சுவரில். அடுத்து சத்ரபதி சிவாஜி அம்பாளை வழிபடும் சுதை சிற்பக் காட்சி. அருகில் பாரதியார் நிற்கிறார். அடுத்து காமாட்சியை ஆதிசங்கராச்சாரியார் வழிபடும் காட்சி. மேல் வரிசையில் தென்மேற்கு மூலையில் சித்தி விநாயகர் கம்பீரமாக அமர்ந்து காட்சி தருகிறார்.
வடமேற்குப் பகுதியில் துணைவிகள் சமேதராக இருக்கும் அபூர்வ சித்தி- புத்தி விநாயகரும், அருகிலிருக்கும் அகோர வீரபத்திர சுவாமி, மாகாளியும் மகிமை நிறைந்தவர்கள். பௌர்ணமி நாளன்று அகோர வீரபத்திர சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றினால் பில்லி, சூன்யம், பேய், பிசாசு போன்ற எது பற்றியிருந்தாலும் உடனே விலகி விடும்.
ஸ்ரீவள்ளி, தேவசேனையுடன் வடகதிர்காம முருகப்பெருமான் அருள்புரிகின்றார். சஷ்டி உற்சவம் சிறப்பாக நடைபெறுகிறது. இங்கு அமர்ந்துதான் "உள்ளம் உருகுதய்யா' என்ற பாடலை அன்னை ஸ்ரீ ஆண்டவன் பிச்சி என்பவர் 1952-ல் பாடியுள்ளார் என்பது கல்வெட்டுச் செய்தி யாகும். அப்பாடலை பிரபல திரைப்படப் பின்னணிப் பாடகர் டி.எம். சௌந்தரராஜன் பாடியுள்ளார்.
அடுத்து கோ மடம், நாகேந்திரர் சந்நிதி, ஸ்ரீவிராட் விஸ்வ பரப்பிரம்மம் சந்நிதி அமைந்துள்ளன. அதன் எதிரில் ஸ்ரீ காயத்ரி தேவி சந்நிதியும் ஸ்ரீதுர்க்கை சந்நிதியும் அமைந்துள்ளன. துர்க்கை சந்நிதியில் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் பக்தர்கள் எலுமிச்சம் பழ விளக்கேற்றியும், நெய் விளக்கேற்றியும் வழிபாடு செய்வது கண்கொள்ளாக் காட்சியாகும். மேலும் பல தெய்வங்களின் சந்நிதிகள் உள்ளன.
"நாளெல்லாம் திருநாளே' என்று சொல்லத்தக்க வகையில், சித்திரை மாதம் முதல் பங்குனி மாதம் வரை 365 நாட்களும் விழாக்கள் நடந்த வண்ணம் இருக்கின்றன. தமிழகம் தவிர மலேசியா, சிங்கப்பூர், கொழும்பு, மொரீஷியஸ் நாட்டு அன்பர்களும் இங்கு வந்து அம்பாளை தரிசிக்கின்றனர். சித்திரை- வைகாசியில் இங்கு பிரம்மோற்சவம் பத்து நாட்கள் வெகுவிமரிசையாக நடைபெறுகின்றது. ஆடிப் பெருவிழா, பத்து ஞாயிற்றுக்கிழமைகளில் அபிஷேக அலங்காரங்களுடன் மிகச் சிறப்புடன் நடைபெறுகின்றது.
ஒரு ஆலயம் எழுப்புவதற்கு முன்பு, அவ்விடத்தில் அதன் மூல வழிபாடு ஒரு மரத்தின் கீழிருந்துதான் தொடங்கப்படுகிறது. எந்த மரத்தின் கீழிருந்து அவ்வழிபாடு தொடங்கப்பெற்றதோ அம்மரம் அந்த க்ஷேத்திரத்தின் தல விருட்சமாகி சிறப்பு பெறுகின்றது. அத்தல விருட்சத்திற்கு ஒரு தனி வழிபாடு செய்தல் நமது இறைபக்தியின் சின்னமாகும். அவ்வாறு இங்கு அமைந்த தல விருட்சம் மாமரமாகும்.
இத்திருக்கோவிலின் தீர்த்தம் கடல்நீர்; தீர்த்தத்துக்குரிய பரிவார தேவதை கடற்கன்னி என்பனவாகும்.
எல்லாம் தரும் அன்னை காளிகாம்பாளை தரிசித்தால், கிட்டாதது எதுவுமில்லை; வெல்ல முடியாத பகையுமில்லை.

No comments:

Post a Comment