கஜானனம் பூதகணாதி சேவிதம்
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம்
உமா சுதம் சோக விநாச காரணம்
நமாமி விக்னேஷ்வர பாத பங்கஜம்
இந்த சுலோகம் மிகவும் எளிமையான சுலோகம் தான்.
கஜானனம் = கஜ + ஆனனம் - யானைமுகத்தான்
பூத கண ஆதி சேவிதம் - பூத கணங்கள் முதற்கொண்டு அனைவராலும் வணங்கப்படுபவன்.
கபித்த ஜம்பூ பல சார பக்ஷிதம் - விளாம்பழம், நாவற்பழம் எனும் இரு பழங்களின் சாற்றை அருந்துபவன்.
உமா சுதம் - உமையின் மகன்.
சோக விநாச காரணம் - கவலைகள் தீர்வதற்கான காரணன்.
விக்னேஷ்வர - தடைகளுக்குத் தலைவன்.
பாத பங்கஜம் நமாமி - திருவடி தாமரைகளுக்கு போற்றி!
யானை முகத்தானும், பூத கணங்கள் முதல் அனைவராலும் போற்றப்படுபவனும், விளாம்பழம் நாவற்பழம் முதலிய பழங்களின் சாற்றை விரும்பி அருந்துபவனும், உமையின் மைந்தனும், கவலைகளை நீக்குபவனும் ஆன விக்னேஷ்வரனின் திருவடித் தாமரைகளை வணங்குகிறேன்!
இனி மேல் இந்த சுலோகத்தின் பொருள் மறக்காது என்று நம்புகிறேன்! ஸுமுகசைகதந்தச்ச கபிலோ கஜகர்ணக
லம்போதரச்ச விகடோ விக்னராஜோ விநாயக:
தூமகேதுர் கணாத்யக்ஷ பாலசந்த்ரோ கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ
ஐந்து கரத்தானின் பதினாறு திருநாமங்களைக் கூறும் சுலோகம் இது. இதனை நாமாவளியாகச் சொல்லும் போது
ஓம் ஸுமுகாய நம:
ஓம் ஏகதந்தாய நம:
ஓம் கபிலாய நம:
ஓம் கஜகர்ணகாய நம:
ஓம் லம்போதராய நம:
ஓம் விகடாய நம:
ஓம் விக்னராஜாய நம:
ஓம் விநாயகாய நம:
ஓம் தூம்ரகேதவே நம:
ஓம் கணாத்யக்ஷாய நம:
ஓம் பாலசந்த்ராய நம:
ஓம் கஜானனாய நம:
ஓம் வக்ரதுண்டாய நம:
ஓம் சூர்ப்பகர்ணாய நம:
ஓம் ஹேரம்பாய நம:
ஓம் ஸ்கந்தபூர்வஜாய நம:
என்று சொல்லிப் போற்றுவோம்.
சுலோகத்தைப் பொருளுக்காகப் பிரித்தால்
ஸுமுக ச ஏகதந்த ச கபில: கஜகர்ணக
லம்போதர ச விகட: விக்னராஜ: விநாயக:
தூமகேது: கணாத்யக்ஷ பாலசந்த்ர: கஜானன
வக்ரதுண்ட சூர்ப்பகர்ண ஹேரம்ப ஸ்கந்தபூர்வஜ
என்று அமையும்.
ஸுமுக (sumukha) - அழகான, ஆனந்தமான, அன்பான திருமுகத்தை உடையவன்
ஏகதந்த (Ekadhantha)- ஒற்றைக் கொம்பன்
கபில (kapila) - சிவந்த, மஞ்சளும் பழுப்பும் கலந்த நிறத்தை உடையவன்
கஜகர்ணக (ghajakarNaka) - யானைக்காதன்
லம்போதர (lambOdhara)- பெரும்வயிற்றன்
விகட: (vikata) - ஆனந்தத்தைத் தருபவன்
விக்னராஜ: (vignaraaja) - தடைகளுக்கு அரசன்
விநாயக: (vinaayaka) - தனக்கு மிக்கவர் இல்லாதவன்
தூமகேது: (duumakEtu)- தடைகளைக் குறிப்பால் உணர்த்துபவன்
கணாத்யக்ஷ: (ganaathyaksha) - (கணங்களின் முதல்வன் - கணபதி)
பாலசந்த்ர (paalachandra) - நிலவைப் போன்ற நெற்றியை உடையவன்
கஜானன (gajaanana) - யானைமுகன்
வக்ரதுண்ட (vakrathunda) - வளைந்த துதிக்கையன்
சூர்ப்பகர்ண (suurpakarNa) - முறக்காதன்
ஹேரம்ப (hEramba) - அம்பிகையின் அன்பிற்குரிய மகன்
ஸ்கந்தபூர்வஜ (skandhapuurvaja) - கந்தனுக்கு மூத்தவன்
இப்பதினாறு திருநாமங்களைச் சொல்லி வணங்க ஆனைமுகன் பிரசன்ன வதனனாய் மிக்க மகிழ்ந்து அருள் புரிவான்
No comments:
Post a Comment