Thursday, September 4, 2014

கருடனிடம் வரம் வாங்கிய திருமால்..!



நான் பறவைகளில் பட்சி ராஜனாக கருடனாயிருக்கிறேன் என் கீதையில் கூறியுள்ளான் கண்ணன். நித்யசூரிகளில் கருடன் இரண்டாமிடத்தை வகிக்கிறார். பொய்கையாழ்வார் கருடனை போற்றுகையில் அனந்தனாகிய ஆதிசேஷனைப் போலவே கருடனும் திருமாலுக்குப் பலவித சேவைகளைச் செய்கிறார் என்று குறிப்பிடுகிறார். அனந்தன், கருடன், விஸ்வக்சேனர் என்ற வரிசையில் அனந்தனான ஆதிசேஷன் இலக்குவனாகவும், பின்னர் ராமானுஜராகவும், பின்பு பெரியஜீயர் மணவாள மாமுனிகளாகவும் அவதரித்தார். விஸ்வக்சேனர் நம்மாழ்வாராக அவதரித்தார் என்பதை அறிவோம். கருட பகவானோ வேத ஸ்வரூபி. ஆளவந்தார் கருடனை வேதாத்மா விஹகேஸ்வரர் என்று போற்றுகிறார். இவரை பெரிய திருவடி என்றும் போற்றுவர்.

ஸ்வாமி தேசிகனுக்கு அவருடைய ஆசார்யர் கருட மந்திரத்தைதான் உபதேசித்தார். அதை ஜெபித்ததால் அவருக்கு ஹயவதனின் அருள் கிடைத்தது. கருடனை கருத்மான் என்றும் அழைப்பார்கள். தீரன் என்பது அதன் பொருளாகும். யாருக்கும் அஞ்சாதவர். இவர் ஒருசமயம் தேவலோகத்திலிருந்து அமிர்தத்தை எடுத்துவந்தாராம். அவரை தேவர்களாலும்- ஏன் தேவேந்திரனாலும் தடுக்கமுடியவில்லை. தன் இறகுகளை வீசி இந்திரனையே மயக்கமடையச் செய்தார். இதைக்கண்ட தேவர்கள் கருடனை ஸுபர்ணன் என்று புகழ்ந்தார்கள். இவரின் வீரத்தில் மகிழ்ச்சி கொண்ட திருமாலே, உனக்கு என்ன வரம் வேண்டும்? என்று கேட்டாராம். அவர் பரமனைப் பார்த்து, நானே உமக்கு வரம் தருகிறேன்; என்ன வரம் வேண்டும்? என்று திருப்பிக்கேட்டாராம்.

புன்னகைத்த திருமால், நான் எப்போதும் உன் தோளுக்குமேல் இருக்கவேண்டும் என்று கேட்டாராம். அவ்வாறே ஆகட்டும் என்றார் கருடன். பிறகு திருமால் கருடனிடம் நீ வரம் ஏதும் கேட்கவில்லையே? என்று வினவ, நான் உமது தலைக்குமேல் இருக்க வேண்டும் என்று கேட்க, திருமாலும் அருளினார். அதனால்தான் நாரணன் அவர் தோள்மீதேறி தம் வாகனமாகக் கொண்டார். கருடனைத் தன் கொடியாக ஏற்று, தன் தலைக்குமேல் பறக்கும் கொடியில் இருக்கச்செய்தார். இதுதான் நாம் திருக்கோவில்களில் பார்க்கும் கொடிமரத்தின் தத்துவம். கொடிமரத்தின்கீழ் கருடன் சன்னிதியும் அமைந்திருக்கும். கருட பகவானைத் துதித்தால் கொடிய நோய்களிலிருந்து நிவாரணம், தொலைந்த பொருள் கிடைத்தல், சர்ப்ப தோஷ நிவர்த்தி உள்ளிட்ட அனைத்து நலன்களும் கிட்டும்.

No comments:

Post a Comment