Monday, August 25, 2014

நமச்சிவாய வாழ்க!

இவ்வாறான இறையாகிய முனைவன் சொல்லுவதே முதனூல். இது வழு அற்றது. கால தேச வரையைறைகளைக் கடந்தது. அண்டசராசரங்கள் எல்லாவற்றுக்கும் பொதுவானது. அழிவற்றது. இதை "சிதைவில என்ப முனைவன் கண்ணே" என்றுதொல்காப்பியம் கூறும்.
இவ்வாறாக சிதைவு, அழிவு, வழு, சார்பு இல்லாத முதனூலாகிய வேதங்கள் நான்கில் முக்கியமானவை மூன்று. அதர்வ வேதம் நான்காவது ஆயினும் அதை விடுத்து வேதங்கள் மூன்று என்று சொல்லும் வழமையும் உள்ளது. இந்த மூன்று வேதங்களுள் மத்தியில் உள்ளது யசுர் வேதம். அதன் ஏழு காண்டங்களில் மத்தியில் உள்ளது நாலாவது காண்டம். அதன் ஒன்பது பிரச்னங்களில் மத்தியில் உள்ளது ஐந்தாவது பிரச்னம். இதுவே ஸ்ரீ ருத்ரம். இதை செபித்து முத்தி பெற்றவரே அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவராகிய உருத்திர பசுபதி நாயனார். இந்த ஸ்ரீ ருத்ரத்தின் மத்தியில் உள்ளது " நமசிவாய"என்னும் ஐந்து எழுத்துக்களைக்கொண்ட பஞ்சாட்சர மந்திரம். இதுவே சைவத்தின் சிரம். இந்த ஐந்து எழுத்து மந்திரத்தின் மத்தியில் உள்ளது " சி "என்னும் அட்சரம் இது சிவத்தைக்குறிக்கும்.
இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை முறையாக ஓம் முதலான பீஜ அட்சரங்களில் ஒன்று அல்லது பலவற்றுடனோ அல்லது பீஜாட்சரம் இல்லாமலோ குரு முகமாகப்பெற்று முறையாக செபித்து உருவேற்றி வர பிரபஞ்ச இரகசியங்கள் புலனாகும்; தேவர்கள் பிரசன்னமாவர்; தெய்வங்கள் தேகத்தில் வந்து குடி கொள்வர்; இருவினை யொப்பு சித்தியாகும்; பக்குவநிலை வந்து ஆன்மீகத் தடைகளாகவுள்ள மலங்கள் இளகும்; இதைமலபரிபாகம் என்பர். அப்போது ஞானகுருவும் வந்து அருளுவார்.
ஞானகுருவைத் தேடி அடைய முடியாது. அவர் தானே தேடி வருவார். இது பல்வேறு பிறவிகளிலும் நாம் செய்த தவப்பயனாலும் அனுபவ முதிர்ச்சியாலும் கூடும். இங்கு தவம் என்றது சரியை, கிரியை யோகங்களையே.
“மூர்த்தி, தலம், தீர்த்தம் முறையாகத் தொடங்கினர்க்கோர்
வார்த்தை சொலச்சற்குருவும் வாழ்க்கும் பாராபரமே”
என்று தாயுமானர் கூறுகின்றார். இவ்வாறு குருவருள் கூட இறையின் அருட்சத்தி சடுதியாகப் பொழிந்து கொட்டத்தொடங்கும். இதை சத்திநிபாதம் அல்லது அருள் வீழ்ச்சி என்பர். இந்நிலையில் தச காரியங்களான தத்துவ ரூபம்,தத்துவ தரிசனம்தத்துவ சுத்திஆன்ம ரூபம்,ஆன்ம தரிசனம்ஆன்ம சுத்திசிவ ரூபம்சிவ தரிசனம்சிவ யோகம் ஆகிய ஒன்பது நிலைகளையும் கடந்த பத்தாவது நிலையாகியசிவபோகம் என்னும் மேலான இறை அனுபூதி சித்திக்கும். இந்த மேலான நிலையிலும் ஐம்புலன்கள் கீழே இழுக்கலாம். இதை மல வாசனை என்பர்.
குருவருளாலும், திருவருளாலும் ஆன்மீகத் தடைகளாகவுள்ள மூன்று மலங்களும் கெட்ட பின்னரும் சீவன் முத்தர்களுக்கும் அவற்றின் சேட்டைகள் சற்று இருக்கத்தான் செய்யும். இந்த மலவாசனையை அடக்குவதற்கு  சீவன்முத்தர்கள்கூடத் தொடர்ந்தும் ஐந்தெழுத்து மந்திரத்தை ஓதி வருவார்கள் ,அடியார்களுடன் கூடியிருப்பாரகள் என்றும், விபூதி உருத்திராக்கங்கள் போன்ற சிவ சின்னங்களைத் தொடர்ந்து தரித்து வருவார்கள் என்றும், ஆலயங்களையும் சிவ வேடம் கொண்ட மயக்கமற்ற அடியார்களையும் அரன் எனவே வழிபட்டு வருவார்கள் என்றும் சிவஞானபோதம் கூறுகின்றது.
“...விதி எண்ணும் அஞ்செழுத்தே..”
                                -சிவஞான போதம் 9ம் சூத்திரம்-
“....மால்அற நேயம் மலிந்தவர் வேடமும்
ஆலயந் தானும் அரன்எனத்தொழுமே”
                                -சிவஞானபோதம் 12ம் சூத்திரம்-.
நமசிவாய என்பது தூல பஞ்சாட்சர மந்திரம். இது உலக போகங்களைத் தரும்.
சிவாயநம என்பது சூக்கும பஞ்சாட்சர மந்திர வடிவம். இது ஆணவ இருளை நீக்கும்.
சி     வா      ய       ந       ம
சி- என்பது சிவத்தைக்குறிக்கும்.
வா- என்பது ஞானத்தைத் தரும் அருட் சத்தியைக்குறிக்கும்.
ய- என்பது எமது ஆன்மாவைக்குறிக்கும்.
ந- என்பது போகத்தைத்தரும் மறைப்புச்சத்தியைக் குறிக்கும்.
ம - என்பது எமது ஆத்மீக அழுக்குகளைக் குறிக்கும்.
போகத்தில் அமிழ்த்தும் மறைப்பு சத்தி எமது ஆன்மாவை மலங்கள் பக்கமாக இழுக்க, ஞானத்தை அருளும் அருட் சத்தி ஆன்மாவை சிவத்தின் பக்கமாக இழுக்கின்றது. இந்த இரண்டு சத்திகளும் ஒரே சத்தியின் வெவ்வேறு பரிணாமங்களே. மறைப்புச் சத்தி மலங்கள் சார்ந்த போக அனுபவங்களினூடாக உலக அனுபவ முதிர்ச்சியைத் தந்து ஆன்மாவைப் பக்குவ நிலைக்கு இட்டுச் செல்ல,  அந்நிலை வந்ததும் அருட்சத்தி தனது செயற்பாட்டால் சிவத்தை நோக்கி ஆன்மாவைச் செலுத்தி சிவபோகத்தில் அழுத்துகின்றது.
சித்தம் ஒருக்கிச் சிவாயநம என்று இருக்கினல்லால்
அத்தன் அருள்பெற லாமோஅறிவிலாப் பேதை நெஞ்சே
என்று திருநாவுக்கரசரும்
திருவாய் பொலியச் சிவாயநம என்று நீறணிந்தேன்
தருவாய் சிவகதி நீ பாதிரிப் புலியூர் அரனே
என்று மாணிக்கவாசகரும் இதை பாடுகிறார்கள். இவ்வாறு வெளிப்படையாக மந்திரத்தைக் கூறுவது திருமுறைகளில் அரிதாகவே காணலாம்.
சிவாயசிவ என்று சொல்லும்போது இது ஆதி பஞ்சாட்சரம்காரண பஞ்சாட்சரம்முத்திப் பஞ்சாட்சரம் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றது.
சிவாயவசி என்று சொல்லும்போது இரு பக்கமும் ஒரே விதமான அட்சரங்களைக் கொண்டிருப்பதால்இருதலை மாணிக்கம் என்று இதை திரு மந்திரம்கூறும்.
சிவா என்கின்ற பொழுது அது அதனினும் நுண்ணிய மந்திரமான மகா காரண பஞ்சாட்சரம் ஆகின்றது.
சி என்ற மந்திரத்தை அட்சரத்தை மட்டும் செபிப்பதை நாயோட்டு மந்திரம் என்று திருமந்திரம் கூறும். இது சிவமும் சத்தியில் ஒடுங்கி இருக்கும் உன்னத மந்திர வடிவாகும்.
இந்த மந்திரம் வேறொரு விதமாகவும் விளக்கப்படுகின்றது.
ஐந்தெழுத்து - சிவாயநம
ஆறெழுத்து - ஓம் நமசிவாய
எட்டெழுத்து - ஓம் ஹாம் ஹௌம் சிவாய
பெரு எழுத்து - சி (சிவம்)
பிஞ்சு எழுத்து = வ ( சத்தி)
பேசா எழுத்து - சி ( முகம்)
பேசும் எழுத்து - வ ( சக்தி)
நடராசரும் பஞ்சாக்கர வடிவமே. "சிவாயநம என்னும் திருஎழுத்து அஞ்சாலே அவாயம் அற நின்று ஆடுவான்" என்று உண்மை விளக்கம்இதைக்கூறும்.
ஆடும் படிகேள்நல் அம்பலத்தான் ஐயனே
நாடும் திருடியிலே நகரம் - கூடும்
கரம் உதரம் வளர்தோள் சிகரம்
பகரும்முகம் வாமுடிப் பார்
என்று மெய்கண்ட சாத்திரங்களில் ஒன்றானஉண்மை விளக்கம் நடராசர் தூல பஞ்சாட்சரத்தின் வடிவாக இருப்பதை விளக்குகின்றது. இதையேதிருமூலரும் பத்தாம் திருமுறையான திருமந்திரத்திலே பின்வருமாறு கூறுகின்றார்.
ஆகின்ற பாதமும் அந்வாய் நின்றிடும்
ஆகின்ற நாபியுள் அங்கே காரமாம்
ஆகின்ற சியிரு தோள்வவ்வாய்க் கண்டபின்
ஆகின்ற வச்சுட ரவ்வில் பாமே
ந- திருவடி
ம- உதரம்
சி- தோள்
வா- முகம்
ய- முடி
இதையே அருணகிரிநாதர்
கரமிரு பாத மாகி கரவயி றாகி மார்பு
நடுசிகர மாகி வாய் கரமாகி
நதிமுடி கார மாகி உதயதிரு மேனி யாகி
நமசிவாய மாமை யாகி எழுதான
என்று திருப்புகழில் பாடுகின்றார்.
இதை சித்தர் சிவவாக்கியர்
வ்விரண்டு காலதாய் நவின்றவ் வயிறதாய்ச்
சிவ்விரண்டு தோளதாய்ச் சிறந்வ்வுவாயதாய்
வ்விரண்டு கண்ணதாய் எழுந்து நின்ற நேர்மையிற்
செவ்வை யொத்து நின்றதே சிவாயமஞ் செழுத்துமே என்று பாடுகின்றார்.
இதேபோல ஆனால் வேறு விதமாக சூக்கும பஞ்சாட்சரமும் நடராசர் வடிவாக இருப்பதைஉண்மை விளக்கத்தின் அடுத்த செய்யுள் கூறுகின்றது.
சேர்க்கும் துடிசிகரம் சிற்கனவா வீசுகரம்
ஆர்க்கும்கரம் அபயகரம் - பார்க்கில் இறைக்கு
அங்கி கரம் அடிக்கீழ் முயலகனார்
தங்கும் கரம்அது தான்
சி- உடுக்கை ஏந்திய கரம்
வா- வீசிய கரம்
ய- அபய கரம்
ந- அக்கினி ஏந்திய கரம்
ம- முயலகனை அழுத்தும் திருவடி
ஒவ்வொருவரும் தத்தமது பக்குவ நிலைக்கு ஏற்ப தமது குரு அளித்த மந்திரத்தையே செபிக்க வேண்டும். இங்கு இந்த அஞ்செழுத்து மந்திரத்தின் ஒவ்வொரு அட்சரங்களுமே தனி மந்திரங்களாகவும் அமைந்து பலன் கொடுக்க வல்லன. இதனால்தான்
துஞ்சலும் துஞ்சல் இல்லாத போழ்தினும்
என்று தொடங்கும் சம்பந்தரின் பஞ்சாக்கரப் பதிகத்தின் பாடல்கள் ஒருமைப் பயனிலையில் முடியாமல்
அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே
ஆன கெடுப்பன அஞ்செழுத்துமே
அல்லல் கெடுப்பன அஞ்செழுத்துமே
ஆடி உகப்பன அஞ்செழுத்துமே
அண்டம் அளிப்பன அஞ்செழுத்துமே
ஆர்வணம் ஆவன அஞ்செழுத்துமே
அத்திரம் ஆவன அஞ்செழுத்துமே
என்று பன்மைப் பயனிலையில் முடிகின்றன.
பஞ்சாட்சர மந்திரமே மகா மந்திரம். இதற்கு மேலான மந்திரமே இல்லை. இந்த பஞ்சாட்சர மந்திரம் காயத்திரி மந்திரத்திலும் மேலானது என்று பிராமண உத்தமரான திருஞானசம்பந்தரேதம்முடைய பூணூல் சடங்கின்போது காயத்திர மந்திர உபதேசம் பெற்றபின் அங்கு வந்திருந்த அந்தணர்களுக்கு
செந்தழல் ஓம்பிய செம்மை வேதியர்க்கு
அந்தியுள் மந்திரம் அஞ்செழுத்துமே
என்று மேற்கூறிய  பஞ்சாக்கரப் பதிகம் மூலமாக அறிவுறுத்தியுள்ளார். அந்தணர்களுக்கு வைதிக நெறியில் உபநயனச்சடங்கில் காயத்திரி மந்தர செபம் கொடுக்கப்பட்டாலும் ஆன்ம விடுதலைக்கு அவர்கள் சிவதீட்சையினூடாக மகா மந்திரமான பஞ்சாட்சர மந்திரத்தைப்பெற்று அதை காயத்திரிக்கு மேலாக ஓதி வருதல் வேண்டும். இதனால்தான் சிவதீட்சை இல்லாத வெறும் வைதிகப் பிராமணர்களிடம் இருந்து திருநீறு பெறுவதை ஆறுமுக நாவலர் எதிர்த்து எழுதினார்.
இவற்றாக மகாமந்திரமான இந்த அஞ்செழுத்து- பஞ்சாட்சர மந்திரம் ஆன்மீக சாதகர்களுக்கு எவ்வளவு அத்தாயாவசியமானது என்று தெரிகின்றது. ஆத்ம சாதனை சித்தி எய்துவதற்கும் இது தேவை; ஆத்ம சித்தியின பின்னர் அதிலிருந்து வழுவாமல் இருப்பதற்கும் இது அத்தியாவசியம். இது புரியாமலும் புரிந்தும் அதைக் கடைப்பிடியாமலும்தான் மேலான நிலை அடைந்த குருமார்கூட புலன்களினால் இழுக்கப்பட்டு கீழே விழுந்து அழிந்தொழிவதை இன்றும் கண்கூடாகவும், ஊடகங்களினூடாகவும் காண்கிறோம்.
நாதன் நாமம் நமச்சிவாயவே என்று சம்பந்தர்"காதலாகி" என்று தொடங்கும் பதிகத்தில் பாடுகின்றார்.
நற்றுணையாவது நமச்சிவாயவே என்று அப்பர் சுவாமிகள் "சொற்றுணை வேதியன்" என்று தொடங்கும் பதிகத்தில் பாடுகின்றார்.
நற்றவா உனை நான் மறக்கினும் சொல்லு நாநமச்சிவாயவே என்று சுந்தரர் "மற்றுப்பற் றெனக் கின்றி" என்று தொடங்கும் பதிகத்தில் பாடுகின்றார்.
நமச்சிவாய வா அழ்க” என்று மாணிக்கவாசகர்திருவாசகத்தில் பாடுகின்றார்.
இங்கெல்லாம் நமச்சிவாய என்பது மந்திரமாக அல்லாமல் இறைவனின் ஒரு ஒப்பற்ற நாமமாக விதந்தோதப்படுகின்றது. மச்ச மாமிசம் உண்பவர்கள் கூட இவ்வாறு பீஜ மந்திரம் இல்லாத நமச்சிவாய நாமத்தை செபிக்கலாம் என்றுஆறுமுக நாவலர் அவர்கள் சைவ வினாவிடையிலே கூறியுள்ளார்.
சைவம் கூறும் இந்த நாமத்தை உச்சரிப்பதற்கும் செபிப்பதற்கும் எந்தவிதமான ஆசாரங்களோ, கட்டுப்பாடுகளோ இல்லை. யாரும் எப்பொழுதும் எந்நிலையில் இருந்தும் இந்த நாமத்தை செபிக்கலாம். இதனால் அல்லல்கள் விலகும்; இடர்கள் தொலையும்; பாறை போன்ற எமது சுமைகளும் பஞ்சு போல இலேசாகும; நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும் நமச்சிவாய என்னும் நாமத்தை மீண்டும் மீண்டும் சொல்லிவர இப்பலன்களை நாங்கள் அனுபவத்தில் காணலாம். இது சத்தியமான அனுபவ உண்மை. இவ்வாறு எப்போதும் நாமத்தைச் சொல்ல முடியாவிட்டாலும் வாகனங்களில் பயணிக்கும்போதும், போக்குவரத்துக்காக காத்திருக்கும் வேளையிலும், அலுவலகங்களில் காத்திருக்கும் காலங்களிலும் மனதுக்குள்ளாகவோ, அல்லது தனக்கு மட்டும் கேட்டக்கூடியதாக மென்மையாகவோ இந்த நமச்சிவாய நாமத்தை ஓதி வரலாம். இதுவும் முடியாதவர்கள் காலை 108 தடவையும் மாலை 108 தடவையும் நமச்சிவாய நாமத்தை ஓதி வரலாம். ஒரு நாளுக்கு மனிதராகிய நாம் விடும் சுவாசங்களின் எண்ணிக்கை 21, 600. இவ்வாறு காலையும் மாலையும் குறைந்தது 108 தடவைகள் நமச்சிவாய மந்திரத்தை சொல்லிவருவதனால் எமது சுவாசத்தில் நூற்றில் ஒரு பங்கை நாம் இறை நாமத்துடன் உள்ளெடுக்கிறோம்.
நமச்சிவாய என்பது நாமமாக இருப்பதால் இதை தனித்தனி அட்சரங்களாக அல்லாமல் முற்றாக முழுமையாகச் சொல்லும்போதுதான் அதன் பயன் கிடைக்கின்றது. ஆகவேதான் இந்த நாமத்தைப் பாடும் பாடல்கள் எல்லாம் ஒருமைப் பயனிலையில் முடிகின்றன.
நாதன் நாமம் நமச்சிவாயவே
நம்பன் நாமம் நமச்சிவாயவே
நக்கன் நாமம் நமச்சிவாயவே
நயனன் நாமம் நமச்சிவாயவே
நல்லார் நாமம் நமச்சிவாயவே
நந்தி நாமம் நமச்சிவாயவே
வரதன் நாமம் நமச்சிவாயவே
நலங்கொள் நாமம் நமச்சிவாயவே
ஓதும் நாமம் நமச்சிவாயவே
நஞ்சுஉண் கண்டன் நமச்சி வாயவே
என்று சம்பந்தரும்
“....நற்றுணையாவது நமச்சி வாயவே...”
“.....நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே”
“...பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
     நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே”
“.....நாம் உற்ற நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சி வாயவே”
“....நங்களுக்கு அருங்கலம் நமச்சி வாயவே”
“.....நலமிகக் கொடுப்பது நமச்சி வாயவே”
“.....நாடினேன் நாடிற்று நமச்சி வாயவே”
“.....நல்லக விளக்கது நமச்சி வாயவே”
“......நன்னெறி யாவது நமச்சி வாயவே”
என்று அப்பர் சுவாமிகளும் பாடிய பாடல்கள் எல்லாம் ஒருமைப் பயனிலையில் முடிவதைக் காணலாம்.
ஆகவே சைவர்களாகிய நாம் எல்லோரும் பஞ்சாட்சரத்தை எப்போதும் நாமமாக ஓதியும், எம்முள் சிவ தீட்சை பெற்றவர்கள் குரு விதித்த படி மந்திரமாக ஓதியும் இம்மை மறுமை இன்பங்களைப் பெற்று உய்வோமாக.

No comments:

Post a Comment