Thursday, August 28, 2014

மூஞ்சுறு விநாயகப் பெருமானின் வாகனம் ஆனது எங்ஙனம்?


                                            

க்ரெளஞ்சன் என்ற இசைக் கடவுள் ஒருமுறை இந்திரனின் சபையில், வாமதேவ முனிவரின் பாதங்களை தெரியாமல் மிதித்து விட்டார். ஆத்திரமடைந்த வாமதேவ முனிவர், க்ரெளஞ்சனை மூஷிகம் (எலி) ஆகும்படி சபித்து விட்டார். க்ரெளஞ்சன் சாபத்தினால் மலையளவு பெரிய எலியாக மாறிவிட்டார். இதனால், அவர் செல்லும் இடங்களில் எல்லாம் பெரிய பாதிப்புகளும், அழிவுகளும் ஏற்பட்டன.
ஒருமுறை க்ரெளஞ்சன் பரசுராம முனிவரின் ஆசிரமத்துள் நுழைந்து அழிவினை ஏற்படுத்த, அங்கு பரசுராம முனிவருடன் இருந்த விநாயகப் பெருமான், க்ரெளஞ்சனுக்கு பாடம் புகட்ட எண்ணினார். தனது கயிற்றினை க்ரெளஞ்சனை நோக்கி வீச, க்ரெளஞ்சன் விநாயகப் பெருமானின் காலடியில் வீழ்ந்து மன்னிப்பு கேட்டார். அதற்கு விநாயகப் பெருமான், " நீ செய்த தீவினைகட்கு நிச்சயம் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். எனினும், நீ மன்னிப்பு கேட்ட காரணத்தால், நான் உன்னை மன்னித்து என் வாகனமாக ஏற்றுக் கொள்கிறேன்" என்றார். விநாயகப் பெருமான் க்ரெளஞ்சன் மீதேறி அமர, அவரது பாரம் தாங்காமல் தடுமாறி, பெருமானை இறைஞ்ச, அவரது வேண்டுகோளின்படி, பாரம் குறைந்து, அன்று முதல் க்ரெளஞ்சனை தன் வாகனமாக ஏற்றுக் கொண்டார்.
மூஞ்சுறு வாகனத்தின் தத்துவம் என்னவெனில், நமது அறியாமை, ஆசைகள், சோம்பல் இவற்றின் உருவமாகவே, மூஞ்சுறு கொள்ளப்படுகிறது. நமது அறியாமை, ஆசைகளை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பதையே இது உணர்த்துகிறது.
பெரிய சாரீரம் கொண்ட யானைமுகனை தாங்கும் வாகனம் சிறிய எலி ஆகும். எலி நசுங்கி விடாதோ என்றெண்ணி நாம் அஞ்சலாம். ஆனால், அதன் தத்துவம் என்னவெனில், சிறிய எலி தாங்கக்கூடிய அளவிற்கு விநாயகப் பெருமான் இலேசானவர். அவரைத் தாங்கும் சக்தியை தந்தருள்வார். எவரும் எளிதில் வணங்கக் கூடிய தெய்வம் அவர். அவரை சாணத்திலும் பிடித்து வைத்து வணங்கலாம். மஞ்சள், அரிசி மாவு, கல், களிமண் என்று எதைக் கொண்டும் நினைத்த நேரத்தில் அவரை பிடித்து வழிபடலாம்.

இதுவே விநாயகப் பெருமானின் மூஞ்சுறு வாகனத்தின் தத்துவம் ஆகும்.

No comments:

Post a Comment