உணவுக்கு ஐந்து வகையாக தோஷங்கள் உண்டாகலாம்.
1. பதார்த்த தோஷம்; உண்ணத்தகாத புலால் போன்ற உணவுகளும், தீய வழியினால் தேடிய சம்பாத்தியத்தால் வரும் உணவுகளும், அவ்வாறான இடத்தில் தானம் பெற்ற உணவுகளும் இவ்வாறு தோஷம் பதார்த்த தோஷம் உள்ளவையாம். வைணவர்களுக்கு பூடு, வெங்காயம் என்பவையும் இவ்வாறு தோஷமுள்ள உணவுகளாம்.
2. பரிசாரக தோஷம்; உணவு சமைப்பவர் நல்லொழுக்கம் உள்ளவராகவும், நற் சிந்தை உள்ளவராகவும், திருப்திகரமான மனம் உடையவராகவும், இறை பக்தி உள்ளவராகவும், யாருக்காக சமைக்கிறாரோ அவர்களிடம் அன்பும், அக்கறையும் உள்ளவராகவும் இருக்க வேண்டும். இவ்வாறு இல்லாமல் மனதாலும், உடலாலும் சுத்தமில்லாமல் இருப்பதும், அங்கலாய்த்த மன நிலையுடன் இருப்பதும், உணவுக்கு பரிசாரக தோஷத்தை உண்டாக்கும். விலைக்கு வாங்கிய உணவு இவ்வாறு பரிசாரக தோஷம் உள்ளது.
என்னுடைய குரு சித்தாந்த இரத்தினம் சிதம்பரம் கிருஷ்ணமூர்த்தி ஐயா அவர்கள் ஒரு முறை நடந்து செல்லும்போது வழமைக்கு மாறாக கட்டடம் பற்றிய சிந்தனைகள் மனதில் திரும்பத் திரும்ப வந்து அவர் வழமையாக நடக்கும்பொழுது சொல்லும் பஞ்சாட்சர செபத்தை ஊடறுத்தது. அவர் வீடு திரும்பியவுடன் சமையல் செய்ய வரும் பெண்ணை உனக்கு என்ன நடந்தது என்று கேட்க அந்தப்பெண் ஓவென்று அழுது தனது மண் குடிசை வீடு முதல்நாள் இடிந்து விழுந்த செய்தியைக் கூறினார். இதிலிருந்து சமையல் செய்பவரின் மனநிலை எவ்வாறு உணவினூடாக ஒருவரைப் பாதிக்கின்றது எனத் தெரிகின்றது.
3. பாத்திர பரிகல தோஷம்; உணவு சமைக்கும் பாத்திரங்களும், பரிமாறும் பாத்திரங்களும் சுத்தமாக இருக்க வேண்டும். இப்பாத்திரங்களின் சுத்தமின்மையாலும், மச்ச மாமிசங்களின் சமையலுக்கு பாவித்த பாத்திரங்களைப் பாவிக்கும்போதும் அது உணவுக்கு பாத்திர பரிகல தோஷத்தை உண்டாக்குகின்றது.
4. உணவு பரிமாறுபவர்; இவர் நல்ல மனதுடன் நல்ல உணர்வுடன் உணவு பரிமாற வேண்டும். பரிமாறுபவரின் மன உடல் அசுத்தங்களினாலும் தோஷம் உண்டாகின்றது.
5. சம பந்தி தோஷம்; உடன் இருந்து உண்பவர்கள் உடல் சுத்தமாகவும், நல்ல மனதுடனும், நல்ல உணர்வுகளுடனும் உணவு உண்ண வேண்டும். அவ்வாறில்லாமல் ஆசூயையுடன் அல்லது அங்கலாய்ப்புடன் இருந்தாலும், அழுக்காக இருந்தாலும், ஆன்மீக உணர்வுகள் அல்லது பழக்கங்கள் அற்றவராக இருந்தாலும் வருவது சம்பந்தி தோஷம்.
இந்த ஐவகை தோஷங்களையும் தவிர்ப்பதற்காக சில ஆத்மீக சாதகர்கள்சுயபாகம் செய்து உண்ணும் வழமையைக் கைக்கொள்ளுகின்றார்கள்.
No comments:
Post a Comment