பூஜைக்கு உகந்த மலர்கள் :
புண்ணியம் செய்வார்க்குப் பூவுண்டு, நீருண்டு என்பது திருமுறை வாக்கு. இந்த மண்ணில் மனிதர்களாகப் பிறந்த ஒவ்வொருவரும் இறைவனை நினைத்து தினமும் வழிபாடு செய்வது அவசியமானது. இந்த உலகத்தில் நம்மை பிறக்க வைத்து, உண்பதற்கு உணவும், சுவாசிக்க காற்றும், குடிப்பதற்குத் தண்ணீரும், குளிர்காய்வதற்கும், சமைப்பதற்கும் உதவும் நெருப்பையும் கொடுத்த வள்ளல் இறைவன்.
ஒவ்வொரு நொடியும் நாம் அவன் தந்த இயற்கை சக்திகளைப் பயன்படுத்தி வாழ்வாங்கு வாழ்கிறோம். அதற்கு நன்றிக் கடனாக அவனிடம் அன்பு கொண்டு, வழிபாடு செய்வது நம் கடமை.
இத்தகைய வழிபாடு இரண்டு வகைப்படுகிறது. ஒன்று கோவில்களில் செய்யப்படுவது. அது பரார்த்த வழிபாடு எனப்படும். மற்றொன்று நாமே வீட்டில் இறைவனின் திருவுருவச் சிலைகளை வைத்து வழிபடுவது. இது ஆத்மார்த்த வழிபாடு எனப்படும்.
இந்த இரண்டு வகையான வழிபாட்டிலும் இறைவனின் திருமேனிகளுக்கு அபிஷேகம், அர்ச்சனை ஆகியவை உண்டு.
அபிஷேகத்திற்கு தூய்மையான கிணற்றுநீர், ஆற்றுநீர் ஆகியவை சிறந்தவை.
இறைவனுக்கு உகந்த மலர்களை வைத்து அவனை உள்ளன்போடு பூசிக்க வேண்டும். இறைவனின் திருமுடியில் மலர் இல்லாமல் ஒருபோதும் இருப்பது கூடாது. நாம் அன்றாடம் வழிபடும் விநாயகப் பெருமான், சிவபெருமான், மகாவிஷ்ணு, முருகப்பெருமான், காமாட்சி அம்மன், மகாலட்சுமி போன்ற தெய்வங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள மலர்களை உபயோகிக்கலாம். இவை பொதுவானவை. எந்தெந்த தெய்வத்திற்கு எந்தெந்த மலர்களை உபயோகிக்க வேண்டும் என்பதை பின்னால் விரிவாகத் தெரிந்து கொள்வோம்.
காலை நேரத்தில் தாமரை, புரசம்பூ, துளசி, நவமல்லிகை, நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, சண்பகம், புன்னாகம் ஆகிய பத்துவிதமான மலர்களைக் கொண்டு இறைவனை வழிபட வேண்டும். தாழைமலரை மட்டும் சிவபெருமானுக்கு உபயோகிப்பது கூடாது. நடுப்பகலில் வெண்தாமரை, அரளி, புரசு, துளசி, நெய்தல், வில்வம், சங்குபுஷ்பம், மருதாணி, கோவிதாரம், ஓரிதழ் தாமரை ஆகியன கொண்டு பூஜை செய்தால் நன்மை அடையலாம்.
மாலையில் செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதிமுல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், கஜகர்ணிகை, துளசி, வில்வம் ஆகியன உகந்தன. அறுகு, தும்பை, புன்னாகம், நந்தியாவட்டை, பாதிரி, பிருகதி, அரளி, சண்பகம் ஆகியவை அஷ்ட புஷ்பங்கள் எனப்படும்.
பூக்களுள் சிறந்த பூ
பூக்களுள் சிறந்தது தாமரைப்பூவே. இதனை பூவுக்குத் தாமரையே, பொன்னுக்கு சாம்புநதம் என்கிறது ஒரு பழம்பாடல்.
வேதங்களுக்கு எத்தனை பெருமை உண்டோ அத்தனை பெருமை தாமரை மலருக்கு உண்டு. மகாலட்சுமி தாயாரை நினைக்கும் போது நமக்கு தாமரையின் தோற்றம் நினைவுக்கு வரும். ஏன் என்றால் மகாலட்சுமி மிக விரும்பித் தங்குவது தாமரை மலரில்தான். தெய்வமலர் என்றே தாமரை மலருக்கு ஒரு பெயர் உண்டு. இந்தப் பூக்கள் இறைவனை பூஜை செய்வதற்கு மட்டுமே பயன்படுகிறது. யாரும் தலையில் சூடிக்கொள்வதில்லை. திருமாலுக்கு மிகவும் பிரியமான மலர் தாமரைப்பூ.
இதைப்போலவே சிவபெருமானுக்கு மிகவும் பிடித்தமான பூ நாகலிங்கப்பூ. பௌர்ணமி வழிபாட்டில் சிவனுக்கு அலரி, செவ்வந்தி, தாமரை மலர்களால் கட்டிய மாலைகளை அணிவித்து பூஜை செய்தால் பல பிறவிகளில் செய்த பாபங்கள் அகலும்.
முருகப்பெருமானுக்கு பிடித்தமான மலர் கடம்பமலர். கடம்பமலர், காண்டள் பூக்கள், குறிஞ்சிப்பூ, செவ்வலரி ஆகிய பூக்கள் வேலனுக்கு மிகவும் விருப்பமானவை என்று சங்க இலக்கியங்கள் தெரிவிக்கின்றன.
பூக்களின் குணங்கள்
வெண்மையான பூக்கள் சாத்வீக குணம் கொண்ட பூக்கள். இவற்றை வைத்து இறைவனை பூஜை செய்தால் முக்தி கிடைக்கும். சிவப்பு வர்ணப் பூக்கள் இராஜச குணம் கொண்ட பூக்கள். இவற்றைக் கொண்டு அர்ச்சனை செய்தால் இகலோக இன்பங்களைத்தரும். பொன்மயமான மஞ்சள் வண்ணப் பூக்கள் கொண்டு பூஜை செய்து வந்தால் போகத்தையும், மோட்சத்தையும் தரும். மேலும் எல்லாக் காரியங்களிலும் சித்தி அடைய அவை உதவும். நம் பரம்பரை விருத்தி அடைய வைக்கும்.
கறுப்பு நிறம் கொண்ட பூக்கள் தாமச குணம் கொண்டவை. ஆகவே பொதுவாக இவற்றை உபயோகித்து பூஜை செய்வது கூடாது. எல்லா நிறங்களையும் உடைய பூக்களை பூஜைக்கு உபயோகிக்கலாம். இவ்வாறு செய்வது உத்தமமான பூஜை.
எத்தனை நாட்களுக்குள் பயன்படுத்தலாம்?
தற்போது எல்லார் வீட்டிலும் குளிர்சாதனப் பெட்டி இருக்கிறது. ஆகவே மலர்களை வாங்கி குளிர்ச்சியான சூழலில் வைத்திருந்து பயன்படுத்துவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. இருந்தாலும் அவ்வப்போது பறித்த மலர்களைக் கொண்டு இறைவனுக்கு பூஜை செய்வது சிறப்பானது. காலையில் பூத்த மலர்களை காலையிலேயே பூஜைக்கு பயன்படுத்துவதால் நறுமணம், இனிமை, புதுமை, இளமை ஆகியவை கூடுதலாக இருக்கும்.
தாமரை மலரை பறித்த ஐந்து நாள்களுக்குள் உபயோகிக்கலாம். அரளிப்பூக்களை மூன்று நாள்களுக்குள்ளும், வில்வ இலையை பறித்து ஆறுமாதங்கள் வரையிலும், உபயோகிக்கலாம். இவ்வாறே துளசி இலைகளை மூன்று மாதங்களுக்குள்ளும், சிவனைத் தவிர மற்ற தெய்வங்களுக்கு உபயோகப்படும் தாழம்பூக்களை ஐந்து நாள்களுக்குள்ளும், சண்பகம் ஒரே நாளுக்குள்ளும், விஷ்ணுகிரந்தியை மூன்று நாள்களுக்குள்ளும் பயன்படுத்தலாம்.
பூஜைக்கு ஆகாத பூக்கள்
அசுத்தமான கைகளினால் தொட்டு பறிக்கப்பட்டது, கொண்டுவரப்பட்டது, தானாக விழுந்தது, காய்ந்தது, மற்றவர்களினால் முகர்ந்து பார்க்கப்பட்டது, அசுத்தமான இடங்களில் மலர்ந்தது, அசுத்தமான கூடையில் வைத்து கொண்டுவரப்பட்டது போன்ற புஷ்பங்களை பகவானுக்கு அர்ப்பணிக்கக்கூடாது.
பறித்த பிறகு மலர்ந்த பூக்கள், வாடிப்போன பூக்கள் பழைய பூக்கள், ஆமணக்கு இலையில் கட்டிவைத்த பூக்கள், உடல் உறுப்புகளில் பட்ட பூக்கள், கட்டிய ஆடையிலும், கையிலும் வைத்த பூக்கள், பூச்சிகள் கடித்த பூக்கள், சிலந்தி இழை சுற்றிய பூக்கள், பறவைகள் எச்சமிட்ட பூக்கள், முடிக்கற்றை பட்ட பூக்கள், இரவு நேரத்தில் பறித்த பூக்கள், தண்ணீரில் முழுகிய பூக்கள், ஆகியவை பூஜைக்கு ஆகாத பூக்கள்.
தற்போது பலர் கைகளில் மலர்களை எடுத்து அவற்றை துண்டு துண்டாக்கி கைகளினால் கிள்ளி பூஜை செய்கின்றனர். இது மிகவும் தவறானது. பூக்களை முழுதாகப் பயன்படுத்த வேண்டுமே தவிர, கிள்ளி பொடிப்பொடியாக்கி வழிபாடு செய்தல் கூடாது. வில்வ இலை, துளசி இலை ஆகியவற்றை தளமாகச் சாத்த வேண்டும்.
தெய்வங்களுக்கு ஆகாத மலர்கள்
அட்சதை வெள்ளெருக்கு, ஊமத்தை ஆகியன விஷ்ணுவுக்கு ஆகாதவை. செம்பரத்தை, தாழம்பூ குந்தம், கேசரம், குடஜமம், ஜபாபுஷ்பம் ஆகியவை சிவபெருமானுக்கு ஆகாதவை. அறுகு வெள்ளெருக்கு மந்தாரம் இவை அம்மனுக்கு ஆகாதவை. வில்வம் சூரியனுக்கு ஆகாது. துளசி விநாயகருக்குக் கூடாது. பவழமல்லியால் சரஸ்வதியை அர்ச்சனை செய்வது கூடாது.
விஷ்ணு சம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே துளசி தளத்தினால் அர்ச்சனை செய்யலாம். அது போல சிவசம்பந்தமான தெய்வங்களுக்கு மட்டுமே வில்வ தளத்தினால் அர்ச்சனை செய்யலாம்.
துலுக்க சாமந்திப்பூவை கண்டிப்பாக பூஜைக்கு உபயோகிக்கக் கூடாது. அன்று மலர்ந்த மலர்களை அன்றைக்கே உபயோகப்படுத்துவது நல்லது. ஒருமுறை இறைவனின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்ட மலர்களை மறுபடியும் எடுத்து மீண்டும் அர்ச்சனை செய்வது கூடாது. வில்வம் துளசி ஆகியவற்றை மட்டுமே மறுபடியும் உபயோகிக்கலாம்.
சம்பகமொட்டு தவிர வேறு மலர்களின் மொட்டுகள் பூஜைக்கு உகந்தவை அல்ல. முல்லை, கிளுவை, நொச்சி, வில்வம், விளா இவை பஞ்ச வில்வம் எனப்படும். இவை சிவபூஜைக்கு மிகவும் உகந்தவை. துளசி, மகிழம், சண்பகம், தாமரை, வில்வம், செங்கழுநீர், மருக்கொழுந்து, மருதாணி, நாயுருவி, விஷ்ணுகிரந்தி, நெல்லி ஆகியவற்றின் இலைகள் பூஜைக்கு உகந்தவை.
கடம்பம், ஊமத்தை, ஜாதி ஆகிய பூக்களை இரவில் மட்டுமே உபயோகிக்க வேண்டும். இதுபோலவே தாழம்பூவை அர்த்த ராத்திரி பூஜைகளில் மட்டுமே உபயோகிக்கலாம். பகல் காலங்களில் விலக்க வேண்டும். குருக்கத்தி, ஆனந்ததிகா, மதயந்திகை, வாகை, ஆச்சா, உச்சித்திலகம், ஆமல், மாதுளை, தென்னை, நீர்த்திப்பிலி, பருத்தி, குமிழம், இலவு, பூசனி, மலைஆல், பொன்னாங்கண்ணி, விளா புளி ஆகியவற்றின் பூக்கள் பூஜைக்கு ஆகாதவை.
விலக்கப்பட்ட பூக்களை அலங்காரம் செய்வதற்கு உபயோகித்துக் கொள்ளலாம்.
கண்மலரால் கிடைத்த சக்கராயுதம்
ஜலந்திராசுரன் மரணம் அடைந்த பிறகு அவனுடைய பிள்ளைகள் தேவர்களுக்குத் தொல்லைகள் தர ஆரம்பித்தனர். எனவே தங்களைப் பாதுகாக்கச் சொல்லி தேவர்கள் திருமாலிடம் சென்று முறையிட்டனர்.
தேவர்களே சிறிது காலம் பொறுத்திருங்கள், நான் சிவபெருமானைக் குறித்து தவம் செய்து ஜலந்திரனைக் கொன்ற சக்கராயுதத்தைப் பெறவேண்டும் என்றார் திருமால். இவ்வாறே திருமால் ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து அதனை தினமும் ஆயிரத்தெட்டு தாமரை மலர்களைக் கொண்டு பூஜித்து வந்தார். இவ்வாறு செய்து வரும் நாளில் ஒரு நாள் ஒரு மலரை மட்டும் ஈசன் மறைத்து விட்டார். உடனே ஹரி தன் கண்மலரை எடுத்து ஈசனின் திருநாமத்தைக் கூறி அர்ச்சனையை செய்து முடித்தார். அவருடைய பக்திக்கு மெச்சி எதிரே தோன்றி தரிசனம் அளித்த ஈசன் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
தேவர்களை மறுபடியும் அசுரர்கள் துன்புறுத்தி வருகிறார்கள். ஆகவே ஜலந்திரனை அழித்த சக்கராயுதத்தை எனக்கு தரவேண்டும். அதன் மூலமாக அசுரர்களை அழிக்கும் வலிமையை எனக்குத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார். ஈசனும் அவ்விதமே திருமாலுக்கு சக்கராயுதத்தை அளித்ததோடு, தனக்காக ஹரி அர்ப்பணித்த கண்மலரையும் திரும்ப அளித்தார்.
இந்த நிகழ்ச்சியின் மூலமாக பூஜைக்கு மலர்கள் எத்தனை அவசியம் என்பதையும், அவற்றைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலமாக நாம் நம் அன்பையும், பக்தியையும் சரியான முறையில் வெளிப்படுத்த முடியும் என்பதையும் அறிந்து கொள்ளலாம். மலர்களுக்கு பதிலாக தன்னுடைய கண் மலரை சமர்ப்பித்ததன் மூலமாக திருமாலுக்கு ஈசனின் தரிசனம் கிடைத்ததோடு, சக்கராயுதமும் கிடைத்தது. எனவே மலர்களைக் கொண்டு நாம் நினைத்த காரியங்களை சாதிக்க முடியும் என்பதை இதன் மூலமாக அறிய முடிகிறது.
காலத்திற்கு ஏற்ற பூக்களும் பயன்களும்
நீலோற்பலமலர் எல்லா பூக்களைவிடவும் சிறந்தது என்பதை எல்லா ஆகமங்களும் தெரிவிக்கின்றன. சில ஆகமத்தில் அலரி சிறந்தது என்றும், வேறு சில ஆகமங்கள் கொக்குமந்தாரை சிறந்தது என்றும், இவ்வாறே மலைப்பூ, தாமரைப்பூ என்ற பலவிதமான பூக்களை ஒவ்வொரு ஆகமமும் சிறந்ததாகக் கூறுகிறது.
வசந்த ருதுவாகிய சித்திரை வைகாசி மாதங்களில் செங்கழுநீர், கடம்பமலர், புன்னாகமம், தருப்பை, கண்டங்கத்திரி என்றும் இவ்வகையான பூக்களால் சிவபெருமானை பூஜித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் உண்டாகும்.
பாடலி புஷ்பம், நூறு இதழ்களை உடைய தாமரைப்பூ மல்லிகைப் பூக்கள் ஆகியவற்றால் கிரீஷ்ம ருதுவாகிய ஆனி, மற்றும் ஆடி மாதங்களில் சிவபெருமானை அருச்சிக்க அக்கினிஷ்டோமம் செய்த பலன் ஏற்படும்.
வருஷ ருதுவாகிய ஆவணி, புரட்டாசி மாதங்களில் தாமரை, மல்லிகை ஆகிய பூக்களால் அர்ச்சனை செய்தால் அசுவமேத யாகம் செய்த பலன்களைப் பெறலாம்.
சரத் ருதுவாகிய ஐப்பசி, கார்த்திகை, மாதங்களில் ஊமத்தை, செங்கழுநீர், சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் புஷ்பங்களினால் சிவபெருமானை பூஜித்தால் சந்திர யாகம் செய்த பலன் கிடைக்கும்.
அலரி, சுஜாதம், நீலோற்பலம் ஆகியவற்றின் பூக்களினால் ஹேமந்தருதுவான மார்கழி, மற்றும் தை மாதங்களில் பூஜை செய்தால் நூறு யாகங்கள் செய்த பலன்களை அடையலாம்.
சிசிர ருதுவாகிய மாசி, பங்குனி மாதங்களில் சிவபெருமானை கர்ணிகாரப் புஷ்பத்தினால் அர்ச்சனை செய்தால் எல்லா யாகங்களையும் ஒரு சேரச் செய்தால் எத்தனை பலன் கிடைக்குமோ அத்தனை பலன்களையும் தடையில்லாமல் பெறலாம் என்று ஆகமங்களில் சொல்லப்பட்டுள்ளது.
உடம்பை பெற்றதன் பயன் என்ன?
இறைவனுக்கு ஆட்பட்டு இருப்பது அல்லவா நாம் இந்த உடலைப் பெற்றதன் உண்மையான பயன். ஆகவே பூக்களைக் கையில் கொண்டு, உள்ளன்போடு இறைவன் திருவடிகளை பூஜை செய்யாத இந்த உடம்பால் ஒரு பயனும் இல்லை. வழிபாடு செய்யாத யாக்கை வற்றிப்போன தோல்பையே என்பது முன்னோர் கருத்து. இதனை
ஆக்கையால் பயன் என்? -அரன்
கோவில் வலம்வந்து
பூக்கையால் அட்டிப்போற்றி என்னாத இவ்
ஆக்கையால் பயன் என்?
என்று கேட்கிறார் அப்பர் சுவாமிகள்.
இரைதேடி அலமந்து கழியச் செய்து பிறகு காக்கைக்கே இரையாகும் இந்த யாக்கையை பெற்றதன் உண்மையான பயனை அடைவதற்கு மலர்களை எடுத்து இந்தத்திருநாளில் அவன் திருப்பாதங்களில் அர்ச்சனை செய்வோம். பிறவி பெற்றதன் பயனை அடைவோம், மகிழ்வோம்.
No comments:
Post a Comment