தர்மங்கள் மூவகை :
1. உலக அல்லது சமூக தர்மம் (Rules, regulations and laws) -இது தன்னலத்தை மையமாகக் கொண்ட தர்மமாகும். இன மத பேதமின்றி எல்லோருக்கும் எல்லா இடத்திலும் எல்லாக் காலத்திலும் பொருந்தக்கூடிய தர்மம் இது. இதை வர்ணாசிரம தர்மம் என்று சைவம் கூறும். பலர் நினைத்துக்கொண்டிருப்பதுபோல இது பிறப்பு ரீதியான சாதி பேதங்களைக் குறிப்பதல்ல. வர்ண தர்மம் என்பது அந்தணர் என்னும் புத்திஜீவிகள், க்ஷத்திரியர் என்னும் அரசு மற்றும் படை சார்ந்தோர், வைசியர்என்னும் வியாபாரிகள், உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகள், சூத்திரர் என்னும் பல்வேறு வகையான தொழிலாளர்கள் ஆகிய சமூகத்தின் நான்கு பெரும் பிரிவுகளைச் சார்ந்த மக்களுக்குரிய அடிப்படை கடமைகளையும், தர்மங்களையும் கூறுகின்றது.
உலகில் எந்த நாட்டை அல்லது சமூகத்தை எடுத்துக்கொண்டாலும் இந்த நான்கு பிரிவுகளையும் நீங்கள் அங்கு காணலாம். இது பிறப்பினால் மட்டும் வருவதும் இல்லை. இவற்றுக்குள் ஏற்றத்தாழ்வு காண்பது தவறு. சமூகம் என்னும் வண்டி இயங்குவதற்கு இந்த நான்கு சக்கரங்களும் அவசியம். இவற்றில் எந்த ஒரு பகுதியினரையும் புறக்கணித்தோ அல்லது அழித்தோ எந்த ஒரு சமூகமும் வாழ முடியாது. நாம் விரும்பி முயன்று சமூகத்திலுள்ள எல்லோரையும் புத்திஜீவிகளாகவோ அல்லது அரசாட்சியாளர்களாகவோ அல்லது உற்பத்தியாளர்களாகவோ ஆக்க முயன்றாலும் அதுவும் முடியாத காரியமே. இன்றைய மேற்கத்திய நாடுகளும் இவற்றை அடிப்படையாகக்கொண்டே அரசியல் தஞ்சம் கோருபவர்கள், படித்தவர்கள், முதலீட்டாளர்கள், மற்றும் தொழிற்திறன் வாய்ந்தவர்கள் என்ற பிரிவுகளிலேயே புதிதாக குடி பெயர்பவர்களை தெரிவு செய்கிறார்கள்.
ஆசிரம தர்மம் என்பது ஒவ்வொரு தனிமனிதனுடைய வாழ்க்கையிலும் வருகின்ற பிரமசரியம் என்னும் மாணவப்பருவம், கிருஹஸ்தம் என்னும் குடும்ப வாழ்க்கை, வானப்பிரஸ்தம் என்னும் ஓய்வு வாழ்க்கை, சந்நியாசம் என்னும் ஆன்மீக வாழ்க்கை ஆகிய நான்கு பகுதிகளுக்கும் உரிய அடிப்படைக் கடமைகளையும், தர்மங்களையும் கூறுகின்றது.
- ஒருவர் கல்வி கற்கும் மாணவப்பருவத்தில் அவருடைய உணவு, உடை, உறையுள், கல்வித்தேவைகளை அவரது பெற்றோரும், குடும்பமும், சமூகமும் வழங்குகின்றது. இக்காலத்தில் தனது வாழ்வாதாரத்துக்கான அடிப்படைக்கல்வியை முறையாகக் கற்றுத்தேறுவது பிரமசரியம் என்னும் மாணவப்பருவத்தினரின் கடமையும் தர்மமுமாகும். இவ்வாறில்லாமல் தான் மற்றவரில் தங்கியிருந்துகொண்டு, தனது கல்வியிலும், பயிற்சியிலும் கவனம் செலுத்தாதவர்களும், தனது தனிப்பட்ட இன்ப நுகர்ச்சிகளிலும் வசதிகளிலும் மூழ்கி இருப்பவரும் சமூகத்திலும் குடும்பத்திலும் உறிஞ்சி வாழுகின்ற ஒட்டுண்ணியாகவே கருதப்படுவார். இவ்வாறு தானே மற்றவரில் தங்கியிருக்கும் மாணவப்பருவத்தில் காதல் என்றும், குடும்பம் என்றும், பிள்ளைகள் என்றும் வந்தால் இவர் அவர்களைக் காப்பாற்றுவது எப்படி? ஆனபடியால்தான் பிரமசரியத்தை அவர்களது தர்மமாக வைத்தது வர்ணாசிரம தர்மம்.
- இதே போல இல்லறத்தார் தமது மனைவி பிள்ளைகளைக் காப்பாற்றவேண்டும் இது அவர்களுக்குரிய அடிப்படைகிருஹஸ்த ஆசிரம தர்மம்.
- இவ்வாறே வானபிரஸ்தத்தில் இளைப்பாறி தனது பொறுப்புகளிலும் கடமைகளிலும் இருந்து விலகி மற்றவர்களுக்கு சந்தரப்பம் கொடுத்து தான் தனது உடல் மற்றும் ஆன்மீக நலங்களில் கவனம் செலுத்தல் வேண்டும்.
- தனது குடும்ப உறவுகளை முற்றாக விடுத்து ஆன்மீக சாதனைகளிலும், பயிற்சிகளிலும், ஆராய்சியிலும் முழுநேரப் பணியாக ஈடுபடுதல் சந்நியாச தர்மமாகும்.
இந்த நான்கு வகையான சமூக தர்மங்களும், நான்கு வகையான தனிமனித தர்மங்களும் தம்மையே மையமாகக்கொண்ட அடிப்படை தர்மங்களாகும். எந்த ஒரு சமூகத்திலும், எந்த ஒரு தனி மனிதனிடத்திலும் இந்த நான்கு பிரிவுகள்தான் உள்ளன. சிந்தித்துப் பார்த்தால் இவற்றிலே நாம் புதிதாக ஒன்றைச் சேர்க்கவும் முடியாது; உள்ளதில் ஒன்றைக் குறைக்கவும் முடியாது. ஆகவேதான் நாம் வர்ணாசிரம தர்மத்தை நாம் உலக தர்மம் என்று கூறுகின்றோம். இவற்றைப்பற்றிய தெளிவு இல்லாதபோது தனிமனித வாழ்க்கையிலும், சமூகத்திலும் குழப்பங்கள் விளைகின்றன.
2. வைதிக தர்மம் (Ethics and Morals)-
"அறம் செய விரும்பு" என்று இவற்றையே ஔவையார் கூறினார். இங்கு ஔவையார் சொன்ன அறம் வேறு, பெருநூல் சொன்ன அறம் வேறு. ஔவையாரின் அறம் இவ்வுலக இன்பங்களான போக அனுபவங்களைத் தரும்; ஆனால் ஆன்ம விடுதலையைத் தராது. இவ்வாறு இவ்விதமான அறங்கள் போகங்களைத் தருவதால்தான் மாணிக்கவாசகர் "அறம் பாவம் என்னும் அருங்கயிற்றால் கட்டி" என்று சிவ புராணத்தில் பாடுகின்றார். இவ்வகையான அறமும் ஒரு கட்டே. இதை பொன் சங்கிலியால் ஆன கட்டு என்றும், பாவ காரியங்களை இரும்புச்சங்கிலியால் ஆன கட்டு என்றும் அறிஞர் ஒப்பிடுவர்.
3. சிவ தர்மம் (Godly Dharma) இதை பெரு நூல் சொன்ன அறம் என்று சிவப்பிரகாசம் கூறும். இங்கு பெருநூல் என்றது ஆகமங்களையே. இந்த ஆகமங்கள் சொல்லும் அறங்களே இறைதர்மமான சிவபுண்ணியங்கள். இவையே ஆன்ம விடுதலைக்கு வழி வகுக்கும் தர்மங்களாகும். இவையாவன:
1. சரியை- இறையை மையமாகக் கொண்டு, உடல் ரீதியாகச் செய்யும் தொண்டு சரியை எனப்படும்.
2. கிரியை –. இறையை மையமாகக் கொண்டு,உடலினாலும் மனத்தினாலும் செய்யும் தொண்டு கிரியை எனப்படும்.
3. யோகம்- இறையை மையப்படுத்தி மனத்தைக் கருவியாகக்கொண்டு செய்யும் தொண்டு யோகம் எனப்படும் இது எட்டு நிலைகளை உடைய அட்டாங்க யோகம் எனப்படும். இந்த எட்டு நிலைகளாவன இயமம், நியமம், பிராணாயாமம், ஆசனம்,பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி என்பனவாம். யோகத்தின் இறுதிநிலை சமாதி.
4. ஞானம்- இது இரண்டு வகை.
1. அபர ஞானம்- இது ஆகம நூலறிவாகும். இது
a) கேட்டல்
b) சிந்தித்தல்
என்னும் இரு பகுதிகளை உடையது.
a) ஞான நூல்தனை ஓதல்
b) ஓதுவித்தல்
c) நல்பொருளைத் தான் கேட்டல்
d) கேட்பித்தல்
e) ஈனம்இலா அதன் பொருளைச் சிந்தித்தல்
இவை ஐந்தும் இறைவன் அடி அடைவிக்கும் எழில் ஞான பூசை என்று இவற்றை ஐந்தாக விரித்து சிறப்பாக ஞான பூசை என்று சிவஞான சித்தியார் கூறும்.
மேற்கூறிய சிவ புண்ணியங்களான சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பவை எமது புத்திக்குத் தெரியாமல் நாம் வேறொன்று செய்யப்போய் அது சிவ புண்ணியமாய் முடியலாம். இவ்வாறு தனது புத்திக்குத் தெரியாமல் தான் செய்யும் சிவ புண்ணியங்கள் அபுத்தி பூர்வமான (unintensional) சிவ புண்ணியங்கள் எனப்படுகின்றன.
ஒருவன் தான் புத்தி பூர்வமாக உணர்ந்து செய்யும் சரியை, கிரியை, யோகம் ,ஞானம் போன்றவை புத்தி பூரவமான (intensional) சிவ புண்ணியங்கள் ஆகும்.
இவ்வாறு புத்தி பூர்வமாகச் செய்யும் சிவ புண்ணியத்திலும் பெயர், புகழ் விரும்பிச் செய்யும் சிவ புண்ணியங்கள் உபாயச் சரியை, உபாயக்கிரியை, உபாய யோகம், உபாய ஞானம் எனக் கூறப்படுகின்றன. இங்கு இவர்கள் மற்றவர்களின் பாராட்டுக்காகவும் பெயர், புகழுக்காகவும் இச்சிவ புண்ணியங்களைச்செய்கிறார்கள்.
புத்தி பூர்வமாகச்செய்யும் சிவ புண்ணியங்களை பெயர், புகழ் கருதாமல் சிவப்பேறு ஒன்றையே கருதிச்சிவனுக்காகச் செய்யும்போது அவை உண்மைச்சரியை, உண்மைக்கிரியை, உண்மை யோகம், உண்மை ஞானம் எனக்கூறப்படுகின்றன. இவை ஒவ்வொன்றும் ஒன்றன் பின் ஒன்றாகத் தோன்றி ஆன்மாவின் மலங்களை அகற்ற பர ஞானம் என்னும் சிவபோக அனுபூதி ஞானம் கூடும்.
2. பரஞானம் - இதுவே அனுபவத்தால் வரும் அனுபூதி ஞானமாகும். இது
a) தெளிதல்
b) நிட்டை கூடல்
என்று இரு பகுதிகளை உடையது. இது வரை சொன்ன அறங்கள் யாவும் நமது சுய முயற்சியினால் வருவன. ஆனால் இந்த ஞானத்தின் இறுதிப் படிநிலைகளான தெளிதலும் நிட்டை கூடலும் இறையினால் வருவது. இவற்றை நாம் எமது சுய முயற்சியினால் அடைய முடியாது. பக்குவ நிலை அடைந்த ஆன்மாக்களுக்கு இறைவனே மானிட உருவில் ஞான குருவாக வரும்பொழுது சத்திநிபாதம், இருவினையொப்பு நிலைகளினூடாக இவை கைகூடும். ஞானத்தின் இறுதி நிலை நிட்டை கூடலாகும். எமக்கு அறிவைப் பெறுவதற்காக தரப்பட்ட முப்பத்தாறு தத்துவங்களும் இறையை அறிவதற்கு வரம்பாகவும், தடையாகவும் உள்ள நிலையில் இம் முப்பத்தாறு தத்துவங்களையும் தொடர்பறுத்து, இறையை இறையின் அருளாலேயே அறிந்து அனுபவிப்பதே நிட்டை ஆகும். இது இரவிலே எந்த விளக்கினாலும் காண முடியாத சூரியனைப் பகலிலே அதன் ஒளியைக்கொண்டே கண்டு அறிவது போலாம். நிட்டை கூடல் கைகூடாமல் ஞான உபதேசம் செய்யக்கூடாது என்பது மரபு.
பதின்மூன்றாம் நூற்றாண்டில் இரண்டு வயதுப்பிள்ளையாக இருந்த மெய்கண்டாருக்கு வான் வழியாக வந்த பரஞ்சோதி முனிவர் ஞான தீக்கை கொடுத்து, பரமகஞ்ச சன்னியாசம் என்னும் உத்தமமான சன்னியாசமும் கொடுத்து,இரௌரவ ஆகமத்தின் பாச விமோசனப்படலத்திலுள்ள பன்னிரண்டு சிவஞானபோதச் சூத்திரங்களையும் உபதேசித்தார். இதன் பின்னர் மெய்கண்டார் பொல்லாப்பிள்ளையார் கோவிலில் பதினேழு நாட்கள் நிட்டை கூடினார் என்பது வரலாறு. இயேசு கிறிஸ்து நாதருக்கு ஞானஸ்நான யோவான் ஞானஸ்நானம் கொடுத்த பின்னர் அவருக்கு சத்திநிபாதம் என்னும் பரிசுத்த ஆவி இறங்குதல் நிகழ்ந்தது. இதன் பின்னர் அவர் நாற்பது நாட்கள் நிட்டை கூடினார் என்று புனித விவிலிய நூலிலே பார்க்கின்றோம். இவ்வாறே முகம்மது நபிகளும் மலைக்குகையில் தனித்திருந்து நிட்டை கூடிய பின்னரே அவருக்கு திருக்குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்று அறிகின்றோம். ஆகவே இந்த தர்மங்கள் இந்து சமயத்திலேயே விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் இவை யாவும் சமயங் கடந்து, கால தேச வர்த்தமானங்களைக் கடந்து, அனைத்து எல்லா மதங்களுக்கும், அனைத்து ஆன்மீக சம்பிரதாயங்களுக்கும் உரிய சத்தியமான உண்மைகளேயாகும். ஆதலால்தான் நாம் "மேன்மைகொள் சைவநீதி" என்று கூறி இவை "விளங்குக உலகமெல்லாம்" என்று கூறுகின்றோம்.
இந்த தர்மங்கள் யாவும் ஒன்றனுக்கு மற்றொன்று உயர்வாகும். உலக தர்மத்தை விட வைதிக தர்மம் சிறந்தது. வைதிக தர்மத்தை விட சிவ தர்மம் சிறந்தது. சிவ தர்மத்திலேயும் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்பன ஒன்றனுக்கொன்று உயர்ந்தன. எமது வாழ்க்கையில் இவற்றுக்குள் முரண்பாடுகள் வரும்போது நாம் உயர்வான தர்மத்துக்காக கீழான தர்மத்தை மீறலாம். இவற்றையே நாம் பெரிய புராணத்திலுள்ள அறுபத்து மூன்று அடியார்களின் வரலாற்றிலே காண்கின்றோம்.
அபுத்தியால் புத்தி தன்னால் அகச்சரியாதி நான்கால்
சுபுத்தியோ(டு) அந்த நான்கால் தோன்றுமே சிவதன்மங்கள்
உபத்திர மின்றிப் பத்தும் ஒன்றன்பின் ஒன்று தோன்றும்
சுபத்தினான் மலங்க ளெல்லாம் துடைத்துயிர் தோன்று மன்றே
- சுவாமிநாத தேசிகரின் தசகாரியம், பாடல் 6-
No comments:
Post a Comment