“அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே”
-திருமந்திரம் 270-
இறைவன் அருள் வடிவானவன் என்று கூறுவதே நிறைவானது. இறைவன் அன்பு வடிவானவன் என்று கூறுவது குன்றக்கூறல் என்ற வழுவுடையது. இ து இறைவனைக் குறைத்துச் சொல்வதாய் முடிவதால் அபசாரம் ஆகின்றது.
அன்பே சிவம் என்று பலரும் பல இடங்களில் சொல்கிறோம். இந்தப் பெயரில் ஒரு திரைப்படம் கூட வந்திருக்கின்றது. பல சமயப் பிரசாரகர்களும்கூட அன்பே சிவம் என்று பேசியும், எழுதியும் வருவதையும் பார்க்கிறோம். இந்த வரி மேற்சொன்ன திருமந்திரப் பாடலில் வருகின்றது. இதை கடவுள் அன்பு வடிவானவர் என்ற பொருளிலேயே புரிந்து கொண்டிருக்கிறோம்; இவ்வாறே சொல்லியும் வருகின்றோம். நமது பத்தாம் திருமுறையான திருமந்திரத்தில் இவ்வாறு சொல்லியிருப்பது பற்றி நமக்கு சற்றுப் பெருமையும் கூட. மனித நேயம் பேசும் நவீன உலகில் அன்பே சிவம் என்று நமது சைவத்தில் கூறியிருக்கின்றது என்று கூறி நம்மையும் இந்த மனித நேயவாதிகளுடன் சேர்த்து அடையாளம் காட்டப் பிரயத்தனம் பண்ணுகிறோம்.
கிறிஸ்தவம் கடவுள் அன்பு வடிவானவர் என்று சொல்கின்றது. இஸ்லாம் அளவற்ற அன்பாளன் என்று இறைவனைச் சொல்லுகின்றது. ஆயினும் சைவத்தில் கடவுள் அன்புள்ளவர்; அன்பே வடிவானவர் என்று சொன்னால் உண்மையில் அது கடவுளுக்கு ஒரு குறையாகவே கருதப்படும்.
ஒருவர் இன்னொருவர் மாட்டு ஒரு எதிர்பார்ப்புடன் செலுத்தப்படுவதே அன்பு. நாம் சகமனிதர்கள் மேல் காட்டுவது அன்பு. பக்தர்கள் இறைவன் மாட்டுச் செலுத்துவது அன்பு. இவை எல்லாம் வெளிப்படையாகவோ அல்லது உட்கிடையாகவோ ஒரு எதிர்பார்ப்பை அடிப்படையாகக் கொண்டதாகும். கணவன் மனைவியிடம் அன்பு செலுத்துகிறான் என்றால் அவளின் அன்பையும், கவனிப்பையும் அதற்கு பிரதிபலனாக எதிர்பார்க்கிறான். தாய் தனது பிள்ளையிடம் அன்பு செலுத்துகிறாள் என்றால் பிள்ளையின் பாசத்தையும், சந்தோசத்தையும் பிரதிபலனாக எதிர்பார்க்கிறாள். இதேபோல நாம் இறைவனிடம் காட்டுகிற அன்பு அவனின் அருளையும், கவனிப்பையும் வேண்டி நிற்பதால் இதுவும் ஒரு எதிர்ப்பாரப்பைக் கொண்டதாகும்.
இறைவன் நம்மாட்டு செலுத்துவது அல்லது காட்டுவது அன்பு அல்ல; அது அருள் ஆகும். அருள் எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாதது. மேலான ஒருவரால் கீழான நிலையில் உள்ளவரிடத்துக் காட்டப்படுவது அருள். அது இறைவனுக்கு மட்டுமே உரியது. இறைவன் அருள் வடிவானவன் என்று கூறுவதே நிறைவானது. இறைவன் அன்பு வடிவானவன் என்று கூறுவது குன்றக்கூறல் என்ற வழுவுடையதாய் இறைவனைக் குறைத்துச் சொல்வதாய் முடிவதால் அபசாரம் ஆகும். இறையுடன் ஒன்றிய மெய்யடியார்களுக்கும் இறையினுடைய இயல்புகள் பொருந்தி வருவதால் இல்லறத்தாருக்கு அன்பை வலியுறுத்திய திருவள்ளுவர், துறவிகளுக்கே அருளை வலியுறுத்துகிறார்.
அப்படியானால் மேற்சொன்ன திருமந்திரப் பாடலுக்கு என்ன பொருள் என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அங்கு அன்பு என்பது அன்பு செலுத்தும் அடியார்களைக் குறிக்கின்றது. இதை ஆகு பெயர் என்று இலக்கணத்தில் சொல்லுவர். கீரை விற்பவளை கீரை என்று அழைப்பது போல இறைவனிடம் அன்பு செலுத்தும் அடியார்களை அன்பு என்று குறிக்கின்றது இப் பாடல். இப்போது இந்தப் பாடலின் பொருளைப் பார்ப்போம்.
அன்பும் சிவமும் இரண்டென்பர் அறிவிலார் - மெய்யடியார்களும் இறைவனும் வேறு வேறு என்று பிரித்துப் பார்ப்பவர்கள் அறிவில்லாதவர்கள்..
அன்பே சிவம் ஆவது யாரும் அறிகிலார் - மெய்யடியார்கள் சிவமாக ஆவதை யாரும் அறிவதில்லை.
இதையே மாணிக்கவாசகர் " சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனையாண்ட" என்று திருவாசகத்தில் பாடுகின்றார். இதையே"அவனேதானே ஆகிய அந்நெறி ஏகன் ஆகி"என்று சிவஞானபோதம் பத்தாம் சூத்திரம் சொல்லுகின்றது. " தன்னையடைந்தார் தம்மைத் தானாக்கித் தலைவன்" என்று சிவஞான சித்தியார் இதனைக் கூறுகின்றது."தன்னிலைமை மன்னுயிர்கள் சாரத்தருஞ் சத்தி" என்று இதனை திருவருட் பயன் கூறுகின்றது. இது சைவ சித்தாந்தம் கூறும் ஆன்மா சிவமாகி இருந்து அனுபவிக்கும் சுத்த அத்துவித முத்தி நிலையைக் குறிப்பதாகும்.
இதையே திருமூலர் திருமந்திரத்தின்இன்னொரு பாடலிலே பின்வருமாறு கூறுகின்றார்.
ஒன்றும் இரண்டும் இலதுமாய் ஒன்றாக
நின்று சமய நிராதாரம் நீங்கியே
நின்று பராபரை நேயத்தைப் பாதத்தாற்
சென்று சிவமாதல் சித்தாந்த முத்தியே
-திருமந்திரம் 1437-
இதுவே வேத உபநிடத மகாவாக்கியங்களின் பொருளுமாகும்.
அஹம் பிரம்மாஸ்மி - நான் பிரம்மம் என்பதல்ல, நான் பிரம்மமாய் இருக்கிறேன் என்பதே இதன் பொருள். அஸ்மி- இருக்கிறேன்.
தத்துவ மஸி - நீயே அது என்பதல்ல, நீயே அதுவாக ஆகிறாய் என்பதே பொருள். அஸி- ஆகுதல்.
அன்பே சிவமாவது - அன்பே சிவம் அல்ல, அன்பை சிவம் ஆவது என்று பொருள். அன்பு - அன்பு செய்கின்ற மெய்யடியார். .
அன்பே சிவமாவது ஆரும் அறிந்த பின் - மெய்யடியார்கள் இறுதியில் சிவமாகவே ஆகும் ஏகநிலையில் இறையுடன் கலப்பர் என்ற உண்மையை அறிந்த பின்னர்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே - தாமும் அந்த ஏகபோகநிலையில் சிவமாய் ஆகி அமர்ந்நதிருப்பர்.
இந்த பாடலில் எல்லா இடத்திலும் அன்பு என்று சுட்டப்படும் அடியார்கள் சிவமாவது பற்றியும், சிவமாய் அமர்வது பற்றியும் கூறப்படுகின்றது. இதை அன்பே சிவம் என்று பொருள் கொண்டால் அது சங்கரர் கூறும் அத்துவித நிலை ஆகும். ஆயினும் இங்கு "சிவம் ஆவது", "சிவமாய்"என்ற சொற்களுக்குப் பொருள் கூறுவதில் இடர் ஏற்படுகின்றது. இதுவே சங்கரர் கூறும் அத்துவித நிலைக்கும் சைவ சித்தாந்தம் கூறும் அத்துவித நிலைக்கும் உள்ள நுட்பமான வேறுபாடு. முன்னதைக் கேவலாத்துவிதம் என்றும் பின்னதைச் சுத்தாத்துவிதம் என்றும் கூறுவர்.
எவ்விதமாய்ப் பார்த்தாலும் இங்கு அன்பு என்பது அடியவர்களைக் குறிக்கின்றதே அன்றி இறைவன் அன்பு வடிவானவர் என்று அபசாரமாகக் குறிக்கப்படவில்லை.
No comments:
Post a Comment