Thursday, January 29, 2015

தைப்பூசத்திருநாளின் சிறப்பு



தைப்பூசமென்பது தை மாதத்துப் பூசத்திருநாள் எனப்படும். தை என்பதற்குப் பல பொருள்கள் உள. அவையாவன தைக்கத் தக்கவை. தையென்னேவல், தாளக்குறிப்பினொன்று, மகர ராசி, பூசநாள் என்பனவாகும். தைப்பூசத் திருநாள் சிறப்புப் பற்றிய பாவலர் பெருமான், தைப்பூசம் வியாழக்கிழமையோடு கூடும் சித்தயோக தினம் வர, அன்று மத்தியானத்திலே, ஆயிர முகத்தையுடைய பானு கம்பர் ஆயிரஞ்சங்கூத, ஆயிரந் தோணுடைய வாணாசுரன் குடாமுழா ஒலிப்பிக்க, பஞ்ச துந்துபி ஒலியும் வேத ஒலியும் கந்தர்வருடைய கீதஒலியும் மிக்கெழ ஞானசபையிலே சிவபெருமான் உமாதேவியாரோடு நின்று ஆனந்த நிருத்தஞ் செய்தருளினார். 

வியாக்கிரபாத முனிவர் பதஞ்சலி முனிவர் என்னும் இருவரும், பிரம்மா விஷ்ணு முதலிய தேவர்களும், திருவுடையந்தணர் மூவாயிரவரும், பிறரும் சிவபெருமானுடைய திருவருளினிலே, ஞானக் கண்ணைப் பெற்று, அவருடைய ஆனந்தத் தாண்டவத்தைத் தரிசித்து, உரோமஞ் சிலிர்ப்ப, நெஞ்சு நெக்குருக, கண்ணீர் பொழியச் சிவானந்தக் கடலில் மூழ்கினார்கள். 

பதஞ்சலி முனிவர் எம்பெருமானே, இந்த ஞான சபையிலே உமாதேவியாரோடு இன்று முதல் எக்காலமும் ஆன்மாக்களுக்கு ஆனந்த நிருத்தத்தைப் புலப்படுத்தி யருளும் என்று வேண்டிக் கொண்டார். அதற்குச் சிவபெருமான் உடன்பட்டருளினார். சிவபெருமான் பணித்தருளியபடியே தேவர்கள் அந்த நிருத்தஸ்தானத்தை வளைத்து உயர்ந்த பொன்னினாலே ஒரு மகாசபை செய்தார்கள். சிவபெருமான் அன்று தொடங்கித் தேவர்களும் வியாக்கிரபாத முனிவர், பதஞ்சலி முனிவர் முதலாயினோரும் வணங்கச் சிவகாமியம்மையாரோடும் கனகசபையிலே எக்காலமுந் திருநிருத்தத்தைத் தரிசிப்பித்தருளுவாராயினர். 

தைப்பூசத்தன்று சூரியனின் ஏழாம் பார்வை சூரியனின் மகரவீட்டிலும் விழுகிறது. இது மிகவும் உயர்ந்த நிலையாகும். சூரியனால் ஆத்மபலமும், சந்திரனால் மனோபலமும் கிடைக்கிறது. தை மாதத்தில் பவுர்ணமி சேரும் பூசநாள் மிகவும் விசேஷமானதாகும். இந்நாளின் சிறப்புப் பற்றிப் பூம்பாவைப் பதிகத்தில் ஞானசம்பந்தரும்.

மைப்பூசு மொண்கண் மடநல்லார் மாமயிலைக்
கைப்பூசு நீற்றான் கபாலீச்சர மமர்ந்தான்
நெய்ப்பூசு மொண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும்
தைப்பூசம் காணாதே போதியோ பூம்பாவாய்

எனக் கூறுவதனால் அறியலாகும். தில்லை மூவாயிரவர்களுக்கு மநு மகன் இரணியவர்மனுக்கும் தில்லை நடராசர் தரிசனம் கொடுத்த தினமும் இத்தினமேயாகும். மேலும், புத்தர் ஞானோதயம் பெற்று, இமயமலைச் சாரலிலே இருந்த நாளில் ஈழநாட்டைப் பற்றி நினைத்ததும் இத்தினத்திலேதான் என்பர். எனவே இத்தினத்தைச் சிறப்புடன் கொண்டாடி இறைவனருள் பெற்று வாழ்வோமாக.

புதிதுண்ணல்

புதுப்பிரயோசனத்தைச் சுபதினம் பார்த்துண்ணல் புதிதுண்ணல் எனப்படும். புதிருண்ணல் எனவும்படும். நவான்ன போஜனம் எனவும் கூறுவர். பொங்கலுக்குப் புதிய அரிசியைத்தான் பெரும்பாலும் உபயோகிப்பர். சுபதினத்தில் மங்கல வாத்தியங்களோடு கிராமமக்கள் சென்று புதிரெடுத்துக் கோயிலிலும், வீடுகளிலும் சேர்ப்பர். அந்நாளில் வீடு மெழுகிக் கோலம் செய்து வைப்பர் பெண்கள். கொண்டுவரும் நெற்கட்டைப் பணிவுடன் வணங்குவர். சுவாமிக்குப் புத்தரிசி கொடுத்துத் தாமும் உண்பர். கால உலக மாற்றத்தினாலும் பிறவாற்றானும் இக்காலத்து இவ்வழக்கு அருகி வருகின்றது. அன்றிச் சுவாமிக்குப் புதிரெடுதலுக்கு முன்னரே தாம் புதிரெடுத்தலையும் மேற்கொள்ளுகின்றனர். தை பிறந்துவிட்ட்து; வழி பிறந்துவிட்டது; அறுவடையெல்லாம் ஆரம்பித்துவிட்டன. களஞ்சியங்கள் நிறைந்து விட்டன. அதுபோல உள்ளமும் நிறைந்துவிட்டது. கஷ்டங்கள் மறைந்தன. கவலைகள் நீங்கின. வாழ்வில் பிரகாசம் ஏற்பட்டுவிட்டது என்று அன்றைத்தினம் முழுவதும் குதூகலிப்பர். சைவ மக்கள் அனைவரும் ஆனந்தக் கூத்தாடும் ஒரு பெருநாளாக இத்திருநாள் விளங்கும்.

தைப்பூச துளிகள்

முருகப் பெருமான் வள்ளியை திருமணம் புரிந்ததால் ஊடல் கொண்ட தெய்வயானையை சமாதானம் செய்து முருகப் பெருமான் வள்ளி - தெய்வானை சமேதராக தைப்பூசத்தன்றுதான் காட்சியளித்தாராம். தைப்பூசத்தன்று ஸ்ரீ ரங்கநாதர் தனது தங்கையான சமயபுரம் மாரியம்மனுக்கு சீர் வரிசைகள் கொண்டு போய் கொடுப்பார். ராமலிங்க அடிகளார் ஸ்ரீமுக (1874) ஆண்டு தை மாதம் 19-ம் நாள் ஒரு தைப்பூச நாளில் அருள் ஜோதியில் கலந்தார். ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் வடலூரில் ஜோதி தரிசனம் நிகழும். ஒரு தைப்பூச நன்னாளில்தான் மயிலாப்பூரில் திருஞானசம்பந்தர் பூம்பாவை என்ற பெண்ணை அஸ்தி கலசத்திலிருந்து உயிர்மீட்டார். தமிழகத்தைப் போலவே மலேசியாவிலும் தைப்பூசத் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப் படுகிறது. அன்று, பத்துமலை முருகன் வெள்ளி ரதத்தில் கோலாகலமாக பவனி வருகிறார். உலக நாடுகளில், தைப்பூசத்திற்காக அரசு விடுமுறை விடப்படுகிறது. மலேசியாவில் மட்டுமே.

தேவர்கள் பூமாரிப் பொழிய, வெற்றிவேல் வீரவேல் எனும் முழக்கம் திக்கெட்டும் ஒலிக்க, வீரமகேந்திரபுரியை வீழ்த்தி, சூரபதுமனை வென்ற வேலவன், வெற்றிப்புன்னகையுடன் நின்றிருந்தார். அசுரகுலத்தை அடக்கி வெற்றிவாகை சூடிய அந்தத் திருவிடத்துக்கு செந்திலம்பதிக்கு... ஜெயந்திபுரம் என்று அவர் திருப்பெயர் சூட்ட, மகிழ்ச்சியுடன் மீண்டும் ஆர்ப்பரித்தது தேவர்கள் சேனை. அவர்களைக் கையமர்த்திய வீரபாகு கந்தவேளை வணங்கினான். 

பிறகு,தந்தைக்கே பாடம் சொன்ன தகப்பன் சுவாமியே... சூரனை வதைத்து அமராபுரியை தேவர்களுக்கு மீட்டுக்கொடுத்து, அவர்களை வாழ வைத்து விட்டீர்கள். அதற்குப் பரிசாக வேவேந்திரன் தன் மகளையே தங்களுக்குத் தாரைவார்க்க காத்திருக்கிறான். ஆனால், அதுமட்டும் போதாது. மிக மேன்மையாக, இன்னும் ஏதாவது செய்ய வேண்டும் என நினைக்கிறோம்... என்று அவன் முருகனின் முகம் நோக்க, அவரோ என்ன செய்வதாய் உத்தேசம் வீரபாகு...? எனக் கேட்டார்.

 முருகா, உலகில் உள்ள அனைத்தும் நீங்கள் தந்த பரிசு. அப்படியிருக்க கொடுப்பதற்கு எங்களிடம் என்ன இருக்கிறது? இமைப்பொழுதும் மறவாமல் தங்களின் திருநாமத்தை உச்சரிப்பதையும், சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரம் கூறி உங்களைத் தியானிப்பதையுமே மேன்மையாகக் கருதுகிறோம். எனவே, தயவுகூர்ந்து... நாங்களும், எங்களின் வழியொற்றி உலக மாந்தர்களும் உங்களுக்குச் செய்யவேண்டிய பூஜா விதிகளையும் வழிமுறைகளையும் தாங்களே கூறியருள வேண்டுகிறோம். 

அப்படியே ஆகட்டும் என்ற சண்முகன், தனக்குரிய வழிபாட்டு முறைகளை அன்பொழுக எடுத்துரைத்தார். இப்படி, முருகப்பெருமான் தன்னை வழிபடும் நியதிகளை, வழிபாட்டு விதிமுறைகளை தேவர்களுக்கு எடுத்துச் சொன்னது, உத்தராயன புண்ணிய காலத்தின் துவக்கமாகிய தை மாதத்தில் என்பார்கள். ஆகவே தான்... முருகப்பெருமான் அவதரித்த விசாக நட்சத்திரத்தின் பொருட்டு வைகாசி மாதமும், அவரை வளர்த்த கார்த்திகைப் பெண்களால் கார்த்திகை மாதமும் பேறுபெற்றதுபோல தை மாதமும் புண்ணியம் பெற்றது. தைப்பூசத் திருநாளை தன்னில் கொண்டு முருக வழிபாட்டுக்கு உகந்ததாயிற்று என்று ஆன்றோர்கள் கூறுவார்கள்.

தை மாதத்தில் முருக வழிபாடு குறித்து, வேறு சில காரணங்களையும் பெரியோர்கள் சொல்வது உண்டு. பொதுவாக பவுர்ணமி தெய்வ வழிபாட்டுக்கும், அமாவாசை திருநாள் பித்ருக்கள் வழிபாட்டுக்கும் உகந்தவை என்பார்கள். பவுர்ணமியுடன் சில சிறப்பு நட்சத்திரங்கள் இணையும் திருநாள், மகிமை பெற்றுவிடும். சித்திரை நட்சத்திரம் பவுர்ணமியுடன் இணைவது சித்ராபவுர்ணமி. இப்படி பவுர்ணமியுடன் சேர்ந்து வரும் வைகாசி விசாகம், மாசி மகம், பங்குனி <உத்திரம் போன்று, தை மாத பவுர்ணமியும் பூச நட்சத்திரமும் இணைந்து தைப்பூசமாக, முருகக் கடவுளுக்குரிய திருநாளாக பன்னெடுங்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. முருகக் கடவுள் அசுரகுலத்தை அழித்ததன் வெற்றி விழாவாக தைப்பூசம் கொண்டாடப்படுகிறது என்றும் கூறுவர். முருகக் கடவுள் சூரனை வதைக்க அன்னை சக்தியிடம் சக்திவேல் பெற்றது ஒரு தைப்பூசத் திருநாளின் தான்.

தைப்பூசத்துக்கு வேறு சில சிறப்புகளும் உண்டு

ஒரு கல்பத்தில் தைப்பூச தினத்தில்தான் உலகப் படைப்பு தோன்றியது. நீர் முதலில் தோன்றியது; அதில் பிரமாண்டமான நிலப்பகுதி உருவானது என்று புராணங்கள் கூறுகின்றன. இந்த ஐதீகத்தின் அடிப்படையில் பல்வேறு ஆலயங்களில் அன்று தெப்போற்சவம் நடைபெறுகிறது. ஈசனுக்கும் உரிய நாள் தைப்பூசம். வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர்களுக்கு ஞானக்கண் தந்து, தன் திருத்தாண்டவத்தை காணச் செய்த எம்பெருமான் சிவன். அவர்களுக்காக திருநடனம் புரிந்த தினமும் ஒரு தைப்பூசத் திருநாளில்தான் என்பார் திருமுருக கிருபானந்தவாரியார். 

சிவாலயங்களில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பூசம் அல்லது புஷ்யம் என்று சொல்லப்படும் நட்சத்திரம், நட்சத்திர வரிசையில் 8வது நட்சத்திரம். இந்த நட்சத்திரம் கடக ராசியில் இருக்கிறது. இதற்கு தேவதை சனிபகவான் ஆவார். எனவே, பூச நட்சத்திர நாளில் சனி பகவானை பூஜித்தும் சிறப்படையலாம். வடலூரில் தைப்பூசம் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. முருகனை நினைத்துருகி கண்ணாடியில் அவன் தரிசனத்தைக் கண்ட வள்ளலார் தம் சித்திவளாகத்தை நிறுவி, அதில் அன்னதானம் செய்த திருநாள் தைப்பூசம். ஆகையால், அன்றைய தினம் வடலூரில் வள்ளலாருக்குரிய தினமாக கொண்டாடப்படுகிறது. தைப்பூசத்தன்று சிறப்பு ஆராதனைகளும் அன்னதானமும் நடைபெறுகின்றன.

No comments:

Post a Comment