Wednesday, January 28, 2015

சித்தர்களின் மனையடி சாத்திரம்



சித்தர்கள் இயற்கையோடு இயைந்த வாழ்க்கை முறையை வலியுறுத்தியவர்கள். தங்களின் நுட்பங்கள், தெளிவுகள் அனைத்துமே இயற்கையின் தன்மையோடு அமைந்தவையே... மனையடி சாத்திரம் தொடர்பாக சித்தர்கள் பாடல்களில் அறிவார்ந்த தகவல்களே நமக்கு காணக் கிடைக்கிறது.

நவீன கட்டிடவியலில் கட்டிடம் கட்டத் துவங்குவதற்கு முன்னர் அந்த இடத்தின் மண்ணின் தன்மையை பரிசோதிப்பதை அறிவோம்.ஆனால் பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் இதை வலியுறுத்தி இருக்கின்றனர். சித்தர்கள் நிலத்தின் தன்மையை ஐந்து கூறுகளாய் கூறியிருக்கின்றனர்.
அவையாவன...

நிறம்
மணம்
ஓசை
தொடுகை
தூளி

நிறம்

வெள்ளை நிறம் , பொன்னிறம், சிவப்பு நிறம், கருமை நிறம், என்று நான்குவகை நிலங்கள் உண்டு என்றும் அவற்றின் நிறத்தை கொண்டு நிலத்தின் தன்மையை அறிவது பற்றி கூறியிருக்கின்றனர்.

மணம்

பால், மலர் , கிழங்கு, நீர் போன்ற மணம் வீசும் நிலங்கள் பெரிய கட்டடங்கள் கட்ட பயன்படும் என்றும், புன்னை , ஜாதிமுல்லை , தாமரை, தானியங்கள், பாதிரிப்பூ, பசு போன்ற வாசம் வீசும் நிலங்கள் வீடு கட்ட உகந்தது என்றும் தயிர் , நெய், தென், எண்ணெய், இரத்தம், மீன் போன்ற மணம் வீசும் நிலங்கள் கட்டிடம் கட்ட விலக்கப்பட்ட நிலங்கள் என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஓசை

நிலத்தை கொத்தும் போது குதிரை, யானை, மூங்கில், வீணை, சமுத்திரம் இவைகள் எழுப்பும் ஓசை போல் கேட்குமானால் இந்த பூமியானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகக் கருதலாம் என்கின்றனர்.

தொடுகை

தொட்டுப் பார்த்து அறியும் முறை இது. அதாவது தொடுகையின் மூலம் பசைத் தன்மை, சொர சொரப்பு முதலியவைகளை பார்த்து பூமியை பற்றி அறிதல்.

தூளி

உலர்ந்த காலத்தில் பூமியின் ஒரு பிடி மண்ணை எடுத்து நன்கு கசக்கி கிழக்கு முகம் நோக்கி ஊதினால் அதில் பறக்கும் தூசி, மற்றும் கீழே விழும் மண்ணின் அளவு கொண்டு கொண்டு பூமியைக் தன்மையை கணிப்பது பற்றியும் கூறியிருக்கின்றனர்.
ஆச்சர்யமான தகவல்கள்தானே!

No comments:

Post a Comment