Wednesday, February 11, 2015

சிவராத்திரி விரத முறை


சிவராத்திரிக்கு கண் விழிப்பது ஏன்?

சிவராத்திரி அன்று கண் விழித்திருந்து விரதமிருந்து இறைவனை வணங்கும்போது முழுமையான இறைவன் அருள் கிடைக்கும். தியானம் நிலைக்கும். நினைத்த காரியம் நடக்கும்.

விரதம் கடைப்பிடிப்போர் (விரதம் பிடிப்போர்) முதல்நாள் ஒரு பொழுது உணவருந்தி சிவராத்திரியன்று உபவாசமாய் காலையில் குளித்து சிவ சிந்தனையுடன் கண்விழித்திருந்து நான்கு யாம வழிபாடு செய்யவேண்டும். அடுத்தநாள் காலையில் தீர்த்தமாடி, சுவாமி தரிசனம் செய்து அடியார்களுடன் உணவருந்தி (பாரணை செய்து) விரத்தை நிறைவு செய்தல் வேண்டும். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும்.

அதன் பின் உபதேசம் தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

சிவ ராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும்.

இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.

சிவராத்திரியன்று அதிகாலை எழுந்திருந்து காலைக் கடன்களை முடித்து சிறப்பாக வேதம் நான்கினும் மெய்ப் பொருளாவதும், நாவினுக்கருங்கலம் ஆனதும், பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை நண்ணி நின்றருப்பதுமான இறைவனின் பஞ்சாட்சர மந்திரத்தை கூறி பூஜை செய்ய வேண்டும். எதுவும் உண்ணுதல் கூடாது. ஆலயம் சென்று லிங்க மூர்த்தியையும் அம்பாளையும் தரிசித்து வரலாம். நாள் முழுவதும் இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டிருக்க வேண்டும். பிறகு மாலை 6 மணிக்கு மேல் தொடங்கும் இரவில் அபிஷேகப் பிரியரான லிங்க மூர்த்திக்கு நான்கு ஜாமங்களிலும் அபிஷேகம் செய்து,

த்ரிகுணம் த்குணாகாரம் த்ரி நேத்ரஞ்ச
த்ரயாயுஷ த்ரிஜன்ம பாப சம்ஹாரம்
ஏகபில்வம் சிவார்ப்பணம்


என்றபடி ஒரு வில்வத்தை அர்ப்பணம் செய்தாலே மூன்று ஜென்ம பாவங்களை அழிக்க வல்லது. மூன்று தளங்களைக் கொண்ட வில்வத்தைக் கொண்டு முக்கண்ணனான ஸ்ரீ பரமேஸ்வரனுக்கு அர்ச்சனை செய்தல் வேண்டும். பாச பந்தத்தில் கட்டுண்டு உழலும் பசுக்களாகிய நம்மை உய்விக்க எம்பெருமான் அரூப ரூபமாகிய லிங்க ரூபத்தில் தோன்றி அருள் பாலித்ததால் சிவராத்திரி இரவில் லிங்க மூர்த்திக்கு செய்யும் அபிஷேகமும் வில்வ தள அர்ச்சனையும் மிகவும் சிறப்பு வாய்ந்தது.

சிவபிரான், சிவராத்திரியன்று இரவு பதினான்கு நாழிகைக்குமேல் ஒரு நாழிகை இலிங்கத்தில் தோன்றுவதால், அன்று இரவு முழுவதும் கண்விழித்து இறைநாட்டத்துடன் இருந்து விரதம் முடித்தால் பலன் கிட்டும். மகாசிவராத்திரியன்று இலிங்கத்தை ஒரு வில்வ இலையால் பூசித்தால், கோடிக்கணக்கான மலர்களால் பூசித்ததற்குச் சமம். இங்ஙனம் விரதமிருந்துவர சிவனருள் கிட்டி, எல்லா நலனும் பெற்று இனிதே முத்தி கிட்டும்.

தென்னகத்திலே திருக்கோவில்களிலே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திகளுக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய அனுமதி இல்லை. ஆனால் வட நாட்டிலே எல்லா திருக்கோவில்களிலும் சிவராத்திரியன்று நாமே சென்று நம் கையால் நீராலோ, பாலாலோ லிங்க மூர்த்திக்கு அபிஷேகம் செய்ய முடியும்.

இலங்கயிலும் திருக்கேதீஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள லிங்க மூர்த்திக்கு நாமே சென்று அபிஷேகம் செய்ய ஒழுங்குகள் செய்யப்பெற்றுள்ளன. கனடாவிலும் ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தில் லிங்கேஸ்வரருக்கு நாமே அபிஷேகம் செயும் வசதிகள் செய்யப்பெற்றுள்ளன.

மனம் போனபடி போகும் புலன்களைக் கட்டுப்படுத்துவதே விரதமிருப்பதன் அடிப்படை நோக்கமாகும். உணவை தவிர்க்கும் போது உணர்வுகளைக் கட்டுப்படுத்துவது என்பது எளிது என்று கருதப்படுகிறது. தினமும் நாம் அனுபவிக்கும் நித்திரை தாமத குணத்தின் வெளிப்பாடு என்றும், விழித்திருப்பதன் மூலம் அந்தக் குணம் கட்டுப்பாட்டுக்குள் வருகிறது என்றும் சொல்லப்படுகிறது. இவ்வாறு உணவையும் உறக்கத்தையும் கட்டுப்படுத்துவதன் மூலம் நாம் சாதாதரண விழிப்பு நிலையையும், விழிப்பற்ற உறக்க நிலையையும் கடந்து மிக உயர்ந்த உணர்வு விழிப்பு நிலைக்குச் செல்கிறோம்.

சாதாரண விழிப்பு, உறக்க நிலைகள் இறைவனை உணர்வதற்குத் தடையாக இருப்பனவாகக் கருதப்படுகின்றன. தினமும் விழிப்பு நிலைக்கும் தூக்க நிலைக்கும் போய் வரும் நாம், உயர் விழிப்பு நிலை பற்றி உணர்வதேயில்லை. சிவராத்திரியில் விரதமிருந்து உறக்கத்தைத் தவிர்க்கும் போது எமது புலன்கள் கட்டுப்படுகிறது. அந்த நிலையில் நின்று இறைவனைப் போற்றி வழிபடும் போது எமது உணர்வுகள் வெண்ணை போல உருகி, நாம் உயர்ந்த விழிப்பு நிலைக்குச் செல்ல வழிவகுக்கிறது.

சிவராத்திரி விரதம் இருப்பவர்கள் மிக முக்கியமாக படிக்க வேண்டியது ஞானசம்பந்தரின் கோளறு பதிகமாகும். இது மனதிற்கு தைரியத்தை தரும். எந்த கிரகங்களின் தாக்கம் இருந்தாலும் அதை நீக்கிவிடும். இதைத்தவிர சிவபுராணம், லிங்காஷ்டகம், பஞ்சாட்சர ஸ்தோத்திரம், நடராஜ பத்து, தேவாரம், திருவாசகம், லிங்கபுராணம், திருவிளையாடற் புராணம், பெரியபுராணம் ஆகியவற்றை படித்தாலும், கேட்டாலும் அதிக பலன் கிடைக்கும். "ஓம் நவசிவாய" என்ற மந்திர உச்சரிக்கவேண்டும். மகா சிவராத்திரி இரவு கோயிலில் அனைவரும் ஒன்றுகூடி "சிவாய நம" என்ற நாமத்தை உச்சரிக்க வேண்டும்.

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்



கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


பொருள்:

தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும்.

"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். இவ் வருடம் 16.02.2015 திங்கட்கிழமை அன்று வட-அமெரிக்காவிலும், 17.02.2015 அன்று இலங்கை, இந்தியாவிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர், சாத்தாவோலை(வயல்கரை) சம்புநாதீஸ்வரர் ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன. இத் தினத்தில் பணிப்புலம்-சாத்தாவோலை சம்புநாதீஸ்வர், கீரிமலை நகுலேஸ்வரர் தேரினில் ஆரோகணித்து வேண்டுவார் வேண்டுவதை ஈர்ந்தருளுகின்றனர்.

எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ”வள்ளல் பெருமான்” இராமலிங்க அடிகள்- கூறுகின்றார்.

தனித்திரு: ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.

விழித்திரு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும். விழிப்புடன் இருத்தல் ஆகும்.

பசித்திரு: பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல், முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.

மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

நித்ய சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.

பட்ச சிவராத்திரி:

தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை. ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.

மாத சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.

யோக சிவராத்திரி:

திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.
யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.

மகா சிவராத்திரி :

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

Friday, February 6, 2015

வெற்றிகள் தரும் ஆஞ்சநேயர் சுலோகம்



அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம். முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி. அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன், ஆகவேதான் அவனைப் பற்றிய ஒரு சுலோகம்.


அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ


பள்ளித் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களாகட்டும், மகளுக்கு மணம் பேசச்செல்லும் பெற்றோராகட்டும் வியாபார விருத்திக்குச் செல்லும் வணிகர்களாகட்டும், வழக்குகளில் வெற்றிக்காக வாதிடும் வக்கீல்களோ, கட்சிக்காரர்களோ யாராயிருந்தாலும் மேற்கண்ட இரண்டு வரிகளையும் சொல்லி அஞ்சனையின் மைந்தனை வணங்கி பணியில் முனைந்தால், பல முறை தோற்றிருந்தாலும், வெற்றி நிச்சயம், இம்முறை.

சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரும்? வெறும் சட்டியைச் சுரண்டினால் என்ன வரும்? இருப்பவன் தானே இல்லாதவனுக்குக் கொடுக்க முடியும்? அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும், நிச்சயம் கிடைக்கும். யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். அவனிடமில்லாத்து ஒன்றில்லை. ஆகவே அவனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||


என உறுதியளிக்கிறது மற்றமொரு சுலோகம்.

புத்தியின் வலிமையும் அறிவின் கூர்மையும் மிகுந்தவன், அனுமன். தோல்வியின் தொடர்ச்சியில் மனம் கலங்கிய நிலையில் நம்மில் பலர், எதிலும் முடிவெடுக்காமல், எதைக் கண்டாலும் தடுமாறுகிறோம். இப்படித்தான் தடுமாறினான் சுக்ரீவன் என்கிற வானர வீரன், வாலியினால் விரட்டப்பட்டவன், நாட்டை இழந்தவன், மனைவியைப பறிகொடுத்தவன். ஓடி ஒளிந்து வாழ்கிறான். செய்வதறியாது செயல் இழந்து நின்றான்.

அவனுடனிருந்த நண்பர்களும் புத்திகலங்கி திகைத்து வாழ்ந்தார்கள். அப்பொழுது மனைவியை மாற்றான் கவர்ந்து செல்ல இல்லாளைத் தேடி அலைகின்ற, வில்லேந்திய வீரன் இராமன் இலக்குவனுடன் அங்கு வந்து சேர்ந்தான். புத்தி தடுமாறிய இராமன், கொடிகளையும், செடிகளையும், விலங்குகளையும் பறவைகளையும் கண்டு பிரலாபித்தான். யாரிடம் கேட்பது, எதைக் கேட்பது என்று புரியாமல் புலம்பி நின்றான். புத்திமான் அனுமன் மதி மயங்கிய மன்னர்கள் இருவரையும் இணைத்து, அவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படச் செய்தான். யோசனையுடன் இருவரும் வெற்றிக்கு வழி கோலி ஒப்பந்தம் செய்தார். இதற்கு அடிப்படை, ஒரே பகலில் கதிரவனிடமிருந்து ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்ற, அனுமான் என்கிற புத்திமான். புத்தி வளர்வதற்கு அவனடி பற்றுவோம்.

பலவானுக்கெல்லாம் பலவான் என்று நாம் நினைக்கும் போது பீமஸேனன்தான் நம்முன் வருவார். அந்த பீமனுக்கும் பெரிய பலவான் நம் கடவுள். பல ஆண்டுகளாக, ஏன் நூற்றாண்டுகளாக வானோங்கி நிற்கின்ற மலைச் சிகரங்களை சடுதியிலே, நெடியாலே உருட்டிப் புரட்டி விடுகின்ற பலம் காற்றிற்குத்தானே உண்டு? காற்றின் கடுமையான பதிப்புத் தானே புயல் என்பது? அந்தப் புயலை எதிர்த்து நிற்கும் வலிமை யாருக்குத் தான் உண்டு? இராம-இராவண யுத்தத்திற்கு ஈடு, இராம-இராவண யுத்தம்தான் என்று கூறுவார்கள். அவ்வளவு கடுமை.

 இராவணன் யுத்ததில் முதல் நாள் போரில் பலவான்களை அனுப்பிப் பார்த்தான். இராமசேனையையும் பயமுறுத்தப் பார்த்தான். தூமராக்ஷன் என்கிற பலவான் வந்தான், பயங்கரப் படையுடன், முதல் அடியே இராவணனுக்கு மரண அடி என்பது போல, தூமராக்ஷனைத் தூள் தூள் ஆக்கினான் பலவான் வாயு குமாரன். வாயு புத்திரனை வணங்குவோம். வலிமை மிகப் பெறுவோம். இது உறுதி.

புகழ் என்பது எல்லாரும் விரும்புவதாயினும் எல்லாருக்கும் கிட்டுவதில்லை. சிலருக்கு வருவதேயில்லை. கிட்டிய புகழும் பலருக்கு நீடித்திருப்பதில்லை. பதவியில் ஒருவர் இருக்கும் வரை புகழ்ந்தவர் எல்லாம், பதவி விலகியவுடன் மதிப்பாரா? மறந்து விடுகின்றனரே! பயன் உள்ளவரை புகழுண்டு. காலம் காலமாக சிலருக்கு புகழுண்டு. மண்ணுள்ளவரை புகழுடையோரை யசஸ் உடையவர் என்கிறோம். ஆஞ்சனேயனைப் பாருங்களேன். பகவான் நாராயணன் இராமாவதாரம் எடுத்து அநுமனின் உதவியோடு அறத்தை நிலைநாட்டி வைகுந்தம் சென்றான். 

இராமாயணப் பாத்திரங்கள் அனைவரும் இவ்வுலகை விட்டுச் சென்றனர், ஆனால் அநுமன் அகலவில்லை. அதுமட்டுமன்று, யுகம் மாறியது. நாராயணன் கண்ணனாக வந்தான். அநுமனின் அருமை அறிந்து வீர விஜயனுக்கு உதவ வேண்டினான். இரண்டு யுகங்களுக்கும் அனுமன் புகழ் பரவியது. அது மட்டுமா? இந்தக் கலியிகத்திலும் அநுமனின் புகழ் உலகெங்கும் துதிக்கப் படுகிறது. ஆக அவன் புகழ், காலம் என்னும் எல்லையைத் தாண்டியது. அவன் புகழ் பாடும் நமக்கெல்லாம் புகழ்தானே?

Wednesday, February 4, 2015

விருட்சங்களும் தெய்வீக சக்திகளும்


துளசி

         துளசி விஷ்ணுவின் அம்சமாகும். துளசியின் இன்னொரு பெயர் பிருந்தா, பிருந்தாவனம் உள்ள இடத்தில் கண்டிப்பாக விஷ்ணு குடியிருப்பார். அதனால் வீடுகளில் முற்றத்தில் துளசி மாடம் அமைக்கப்படுகிறது. துளசிக்கு பல மருத்துவ குணங்களும் உண்டு. இதிலிருந்து வெளிப்படும் தெய்வீக அதிர்வுகள் பல நோய்களை குணமாக்கும்.

சந்தன மரம்

              சந்தனமரம் விஷ்ணுவின் அம்சமாகும். சந்தனம் சுபகாரியங்களிலும், பூஜைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இதிலிருந்து தெய்வீக அதிர்வுகள் வெளிபடுகின்றன. இவ்வதிர்வுகள் மன அமைதியையும், சாத்வீக குணத்தையும் கொடுக்கும்.

அத்திமரம்

                அத்தி மரம் தத்தாத்திரேயரின் அம்சமாகும். விஷ்ணுவும் இதில் குடியிருப்ப்பார். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் அல்லது காந்த அலைகள் சாத்வீக குணமுடையவை. மனசாந்தியை கொடுக்கக்கூடியவை. இம்மரத்தில் அடியில் அமர்ந்து தியானம் செய்தால் எளிதாக கைகூடும்.

மாமரம்

               மாமரம் மகாலட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தில் இருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இதன் காரணத்தினாலேயே எல்லாவிதமான பூஜைகளிலும் மாவிலைகள் பயன்படுத்தபடுகின்றன. சுபகாரியங்கள் செய்யும்  போது வீடுகளில் மாவிலைகள் தோரணமாக கட்டி தொங்க விடப்படுகிறது.

அரசமரம்

              அரசமரம் பிரம்மாவின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வழிபாடும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தீபம் ஏற்றி வர புத்திர தோஷம் நீங்கும்.

ஆலமரம்

                 ஆலமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே அமர்ந்து தியானம் செய்தால் தியானம் எளிதாக கைகூடும். அம்மரத்தின் விழுதுகள் ஆண்மை குறைவை நீக்கும் தன்மையுடையது.

மருதாணிமரம்

                 மருதாணி மரமானது லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் பழங்களை தூங்கும் போது தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் கேட்ட கனவுகள் வராது.

ருத்ராஷ  மரம்

                ருத்ராஷ மரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்திலிருந்து வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. ருத்ராஷ கோட்டையை  உடலில் அணிந்து கொண்டால் இரத்தம் சுத்தமாகும். இரத்த அழுத்தம் சீராகவும் கோபம் குறையும். மனதில் சந்தம் உண்டாகும்.

ஷர்ப்பகந்தி

                 இம்மரத்தின் அருகே பாம்புகள் வராது. இம்மரத்தின் குச்சிகள் உடலில் கட்டி கொண்டால் பாம்புகள் தீண்டாது.

நெல்லி மரம்

                   நெல்லி மரம் விஷ்ணுவின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே தம்பதிகளை அமரவைத்து அன்னதானம் செய்தால், அன்னதானம் செய்பவருடைய சகல பாவங்களும் நீங்கும்.

வில்வமரம்

                    வில்வமரம் சிவனின் அம்சமாகும். இம்மரத்தின் இலைகளால்  சிவனை பூஜிக்க சகல பாவங்களும் நீங்கும்.

வேப்பமரம்

                     வேப்பமரம் சக்தியின் அம்சமாகும். இம்மரத்தின் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தை சுற்றி மஞ்சள் குங்குமம் பூசி மங்கள் ஆடைகளை கட்டி மாலை சூடி மரத்தை வலம் வந்து வணங்கி வர சக்தியின் அருள் கிட்டும்.

கருவேல மரம்

                  கருவேல மரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும் இம்மரத்தின் காய் மற்றும் வேர்களை மந்திரவாதிகள் தவறான காரியங்களுக்கு பயன்படுத்துகிறார்கள். பொதுவாக பேய், பிசாசுகள் இம்மரத்தின் மீதுதான் குடியிருக்கும்.

காட்டுமரம்

                   காட்டு வேம்பு பிரம்மாவின் அம்சமாகும். ஒரு சிலர் இதை விஷ்ணும் அம்சம் என கூறுவர். இம்மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிபடுத்தும்.

அசோக மரம்

                     அசோக மரம் சாத்வீக அதிர்வுகளை வெளிப்படுத்தும்.

புளிய மரம்

                    புளியமரம் தீய அதிர்வுகளை வெளிபடுத்தும். புளிய மரத்தின் நிழல் நோய்களை உண்டாகும். புளிய மரங்களில் பேய், பிசாசுகள் தங்கி இருக்கும் என்பது நம்பிக்கை.

மாதுளம் மரம்

                     மாதுளை மரம் லட்சுமியின் அம்சமாகும். இம்மரத்தின் வெளிப்படும் அதிர்வுகள் சாத்வீக குணமுடையவை. இம்மரத்தின் கிழே விளகேற்றி தம்பதிகளால் வலம் வர தம்பதிகளிடையே அன்னியோன்யம் ஏற்படும்.

தை அமாவாசை


தை அமாவாசைஇந்து சமயத்தவர்களுக்கு மிகவும் புனிதமும் சிறப்பானதுமான தினமாகும். தை மாதத்தில் வருகின்ற அமாவாசை தை அமாவாசை விரதம் எனச் சிறப்புப் பெறுகின்றது.தமிழ் மாதங்களில் எல்லா மாத அமாவாசை நாட்களுமே சிறப்பானவை என்பதால் தாய், தந்தையரை இழந்தோர் தங்களின் பெற்றோர் மற்றும் மூதாதையரை கருத்தில் நினைத்து அமாவாசை நாட்களில் விரதம் கடைபிடிப்பர்.

ஆனால் குறிப்பிட்ட சில மாதங்களில் வரும் அமாவாசை நாட்கள் சிறப்பு வாய்ந்தன. அவற்றில் முக்கிய இடம்வகிப்பது ஆடி அமாவாசை மற்றும் தை அமாவாசை ஆகும். தை அமாவாசை அன்று ஆண்டின் பிற அமாவாசை நாட்களில் கடைபிடிக்க இயலாதவர்கள் ஆறு,கடல் போன்ற புனித நீர்நிலைகளில் குளித்து மூதாதையர்களுக்கு படையல் செய்து சிறப்பு பூசை செய்வர்.

கடல்கூடும் கன்னியாகுமரி, இராமேசுவரம் மற்றும் காவிரியின் முக்கூடல் தலமான பவானி இங்கெல்லாம் மக்கள் கூட்டம் கூடுதலாக இருக்கும்.

இராமேசுவரத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ராமநாத சுவாமி, அம்பாளுடன் தை அமாவாசை தினத்தன்று அங்குள்ள அக்னி தீர்த்தத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு புனித நீராடல் நடைபெறும். கோயிலில் சிறப்பு அபிசேக ஆராதனைகளும் நடைபெறுகின்றன.

தை அமாவாசையை முன்னிட்டு இராமேசுவரம்வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடுவர். இராமேசுவரம் கடற்கரையில் தங்களின் மூதாதையருக்கு தர்ப்பணம் செய்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

திருநெல்வேலி அருள்மிகு நெல்லையப்பர் கோயிலில் ஆண்டுதோறும் தை அமாவாசை தினத்தன்று லட்ச தீபம் ஏற்றப்படுகிறது.

அன்றைய தினம் ஸ்ரீ நெல்லையப்பர் – காந்திமதியம்மன் கோயிலில் காணும் இடமெல்லாம் தீபங்களாக – பிரகாச ஜோதியாகவே காணப்படும். பல்லாயிரக்கணக்கானோர் சுற்றுவட்டாரங்களில் இருந்து வந்து மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோயிலின் பிரகாரங்கள் உள்ளிட்ட பகுதிகளில் தீபங்களை ஏற்றிவைத்து வழிபடுவார்கள்.

அமாவாசையை முழு நிலவு ஆக்கிய அன்னை அபிராமியின் பக்தனுக்கு அருளும் மாண்பினை விளக்கும் காட்சி யொன்று எல்லா ஆலயங்களிலும் , திருக்கடவூர் அன்னை அபிராமியின் திரு முன்னும் நடப்பது வழக்கம்.

வள்ளலார் சுட்டிக்காட்டும் பாவச் செயல்கள்


உலக போகங்களையெல்லாம் பெரிதாகக் கருதி அதில் மூழ்கிக் கிடக்கும் மனிதன் எல்லாம் வல்ல இறையாற்றலிடம் வேண்டுவது கூட அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் துன்பமளிக்கும் விஷயங்களாகத்தான் இருக்கும். வேண்டுவது என்பதே தன்னை அதை அடையத் தயார் படுத்திக் கொள்ளவே என்பதை மனிதன் இறுதி வரை அறிந்திட்டான் இல்லை. என்ன தேவை, எதை நாம் வேண்டுதலின் மூலமாக அடைய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளல் பெருமானின் தெய்வ மணி மாலையைப் படித்துணர்ந்தவர்கள் அறிவார்கள். நாம் வேண்டுவது எல்லாம் சிற்றின்பத்திற்கு உதவும் விஷயங்களையே ஆகும். ஆனால், வள்ளல் பெருமான் வேண்டுகின்ற அனைத்தும் நமக்கு பேரின்பம் அளித்து நம்மை மரணமில்லா பெரு வாழ்வு நிலையை அடையச் செய்யும் அற்புதமான விஷயங்களாகும்.

அதைப் போலவே நாம் இன்பம் அடையும் பொருட்டு எத்தனையோ பாவச் செயல்களை சுயநலத்தோடு செய்து வாழ்கிறோம். நாம் செய்வது பாவம் என்று உணராமலேயே நிறைய பாவங்களைச் செய்கிறோம். அப்படியே அதைப் பாவம் என்று யாராவது சுட்டிக் காட்டினாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு பல நியாயங்களைக் கற்பிக்கிறோம். நாலு பேருக்கு நன்மை செய்யுமானால் எந்தச் செயலும் பாவமில்லை என்று முட்டாள் தனமாகப் பேசுகிறோம். அது எத்தனை பேருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும், பாவச் செயல் என்பது பாவமே அல்லாது புண்ணியமாகாது. பட்டினத்தார் சொல்வது போல சாஸ்வதம் என்று நீ நினைக்கும் எதுவும் கூட வராது. ஆனால், நீ செய்யும் பாவ புண்ணியங்கள் கூட வரும் என்கிறார். அதில் கூட ஒரு நுட்பம் உள்ளது. அதாவது பாவம் மட்டுமல்ல, புண்ணியமும் பல பிறவிகளைத் தரக் கூடியதாகும் என்பதுவே. எனவே பற்றற்ற, மனதின் சம்ஸ்காரங்கள் அற்ற நிலை மட்டுமே, அதாவது பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு வாழ்வது மட்டுமே மேன்மே தரக் கூடியதாகும். எதெல்லாம் பாவம் என்று வள்ளல் பெருமான் மனுமுறை கண்ட வாசகத்தில் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.

1. நல்லோர் மனதை நடுங்கச் செய்வது.
2. வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரை தடுத்து நிற்பது.
4. கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வது.
6. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொள்வது.
7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.
8. தர்மம் பாராது தண்டஞ் செய்வது.
9. மண்ணோரம் பேசி வாழ்வழிப்பது.(தன் நிலத்திற்கு அருகில் உள்ள பிறர் நிலத்தை அபகரித்தல்)
10. உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்வது.
11. களவு செய்வோர்க்கு உளவு சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசஞ் செய்வது.
14. வரவுபோக் கொழிய வழியடைப்பது.
15. வேலையிட்டுக் கூலி குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராதிருப்பது.
17. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லி குடும்பங் கலைப்பது.
19. நட்டாற்றில் கையை நழுவ விடுவது.
20. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பழிந்தவளைக் கலந்திருப்பது.(கற்பு என்பதை மனம் சார்ந்த விஷயம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.)
22. காவல் கொண்டிருந்த கன்னியை அழிப்பது.
23. கணவன் வழி நிற்போரைக் கற்பழிப்பது.
24. கருப்பமழித்துக் களித்திருப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறப்பது.
27. கற்றவர் தம்மைக் கடுகடுப்பது.
28. பெரியோர் பாட்டிற் பிழை சொல்வது.
29. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
30. கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பது.
31. ஊன் சுவை உண்டு உயிர் வளர்ப்பது.
32. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
33. அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வது.
34. குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்ப்பது.
35. வெயிலுக்கொதுங்கும் விருட்சமழிப்பது.
36. பகை கொண்டு அயலார் பயிர் அழிப்பது.
37. பொது மண்டபத்தைப் போயிடிப்பது.
38. ஆலயக் கதவை அடைத்தே வைப்பது.
39. சிவனடியாரைச் சீறி வைப்பது.
40. தவஞ் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
41. சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்வது.
42. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பது.
43. தெய்வமிகழ்ந்து செருக்கடைவது.

என்று பாவங்களைப் பட்டியலிடுகிறார். படித்துப் பார்த்தால் பெரும்பாலான பாவங்களை நாம் செய்திருக்கிறோம் என்பது புலப்படும். இதை சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்றால், இதற்கு முன்னால் போனது போகட்டும். இனிமேலும் இது போன்ற பாவங்களைச் செய்யாமல் வாழும் வாழ்வைத் தா என்று இறையாற்றலிடம் வேண்டிக் கொள்வதற்குத்தான். ஏனென்றால் வேண்டுதல் என்பதே நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு சங்கல்பம் தான்.

வாழ்வில் மாற்றம் தரும் புண்ணிய ஸ்தலம்


வாழ்வில் மாற்றம் நிகழ வேண்டும், பாவங்கள் தீர வேண்டும், புண்ணியம் தேட வேண்டும் என்பதற்காக பல புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வருவோம்.


கேராளாவில் உள்ள மண்ணாறசால நாகராஜ தலத்திற்கு சென்று வந்தால் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்பது ஐதீகம்.

தன் தந்தையைக் கொன்றதன் காரணமாக, சத்திரியர்கள் பலரையும் அழித்தார் பரசுராமன். அந்த பாவங்களில் இருந்து விமோசனம் பெற விரும்பினார். அதற்காக மகரிஷிகளை அணுகினார்.

சொந்தமாக ஒரு நிலத்தை பிராமணர்களுக்கு தானம் செய்திட அவர்கள் கட்டளையிட்டனர். பரசுராமன் பூமியைப்பெற வருண பகவானை வழிபட்டார்.

பரம்பொருளான சிவன் அருளிய ‘மழு’ என்ற ஆயுதத்தை சமுத்திரத்தில் இருந்து வீசினார். அந்த மழு சென்று விழுந்த இடம் வரை கடல் விலகியது. அவ்வாறு கிடைத்த பூமியை அந்தணர்களுக்கு தானம் செய்தார். அதுதான் கேரளம்.



உப்புச்சுவை காரணமாக வாழ இயலாமல் மரஞ்செடிகள் கூட முளைக்க முடியாமல் இருந்ததால் வாழ்க்கை நடத்த தகுதியுடையதாக இல்லை என்பதால் மக்கள் அவ்விடத்தை விட்டு அகன்றனர்.

இந்த உண்மையறிந்து பரசுராமன் வேதனையடைந்தார். அவர் திருமாலை நினைத்து தவம் புரிந்தார். திருமால் அவருக்கு நேரில் காட்சி தந்தார். ‘நாகராஜாவின் அருள்ஒளி எங்கும் பரவினால் மட்டுமே எண்ணியவை நடக்கும்.

அதற்கு ஒரே ஒரு வழி, நாகராஜா மன திருப்தி கொண்டு அருள்பெற வேண்டும்’ என கூறி மறைந்தார்.

கேரளம் இயற்கையழகு நிறைந்த நாடாகவும், மரஞ்செடி கொடிகள் நிறைந்ததாகவும், அனைத்து சம்பத்துகளும் நிறைந்த இடமாகவும் மாறிய பின்னரே அங்கிருந்து விலகுவது என பரசுராமன் தீர்மானித்தார். அதற்கு நாகராஜாவை திருப்திப்படுத்த ஏகாந்தமான ஒரு வனாந்திர பகுதியைத் தேடி தன் சீடர்களோடு புறப்பட்டார்.

கேரளத்தின் தென் பகுதியில் கடலோரத்தின் அருகே தகுந்த ஓர் இடத்தை கண்டார். தன் நீண்டகால திட்டத்திற்கு அனுகூலமான இடமான அங்கே தவம்புரிய ‘தீர்த்த சாலை’ அமைத்தார். தவத்தைத் தொடர்ந்தார்.

கடும் தவத்தின் காரணமாக நாகராஜாவின் தரிசனம் அவருக்கு கிடைத்தது. அவரிடம் கரம் குவித்து மெய்சிலிர்க்க தன் வேண்டுதலை தெரிவித்தார்.

நாகராஜா, பரசுராமனின் வேண்டுதலை ஏற்றுக்கொண்டார். கொடிய விஷக் கதிர்களை பரப்பிட, பயங்கரமான நாகங்கள் உடனடியாக அங்கு தோன்றின. விஷ ஒளிக்கதிர்கள் மூலம் கேரள பூமி முற்றிலும் நாக பூமியாக மாறியது.

நாகராஜா எந்தவித தயக்கமும் இன்றி, அதை ஏற்றுக்கொண்டார். தனது சிஷ்யர்களில் முக்கியமான ‘விப்ரனை’ நாக பூஜை செய்யும் அதிகாரியாக தேர்ந்தெடுத்தனர்.

அவருடைய வம்சத்தில் பிறப்பவர்களுக்கு நாக பூஜையின் அனைத்து அதிகாரங்களையும் வழங்கி அவதார நாதனான பரசுராமன் ஆசி அருளினார். வனப்புமிக்க சோலையாக இயற்கை எழிலுடன் காட்சி தரும் இந்த சாலைக்கு வந்து வழிபடுவோருக்கு நாகராஜா தனது பரிவாரங்களுடன் அருள் பாலிப்பதால், இந்த சோலை மந்தார சோலை எனும் பெயரில் மருவி பிரபலமாகி உள்ளது.

தலைமுறைகள் பல கடந்தன – வம்சம் கடினமான துக்கக்கடலில் வீழ்ந்தது. இந்த நிலையில் பொறுப்பினை ஏற்றிடும் நிலைக்கு வந்தவர்கள் வாசுதேவனும் ஸ்ரீதேவியும் ஆவர்.

அந்தத் தம்பதிகளின் நீண்டகால தவ வலிமையின் காரணமாக அவர்களுக்கு நாகராஜா காட்சியளித்தார். இவ்வேளையில் நாகராஜாவின் வாழ்விடத்தின் சுற்றுமுள்ள வனப்பகுதியில் காட்டுத் தீ பரவியது.

அக்னியின் கோரத் தாக்குதலில், பல இடங்களிலும் வாழ்ந்து வந்த சர்ப்பங்கள் (பாம்புகள்) உயிருக்கு பாதுகாப்பு தேடி, நாகராஜாவின் பாதங்களை சரணடைந்தன. இதையடுத்து காட்டுத் தீ முழுவதுமாக அணைந்து ஓய்ந்தது. தீயின் வெப்பம் தணிந்து, மண் முழுமையாக ஆறிய சாலை, ‘மண்ணாற சாலை’யானது.

மண்ணாறசாலை நாகராஜா கோவிலில் முக்கிய வழிபாடு ‘உருளி கவிழ்த்தல்’. குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகள் இக்கோவிலுக்கு வந்து, நாகராஜாவையும் சர்ப்ப யக்சி அம்மாவையும் மனமுருக பிரார்த்தனை செய்து நடத்தும் வழிபாடு இது.

பல நாடுகளில் இருந்து ஜாதி, மத பேதமின்றி திரளான பக்தர்கள் அனைத்து நாட்களிலும் கோவிலுக்கு வந்து பூஜை–வழிபாடுகளில் பங்கேற்பது சிறப்பு வாய்ந்ததாகும்.