உலக போகங்களையெல்லாம் பெரிதாகக் கருதி அதில் மூழ்கிக் கிடக்கும் மனிதன் எல்லாம் வல்ல இறையாற்றலிடம் வேண்டுவது கூட அவனுக்கு இம்மையிலும், மறுமையிலும் துன்பமளிக்கும் விஷயங்களாகத்தான் இருக்கும். வேண்டுவது என்பதே தன்னை அதை அடையத் தயார் படுத்திக் கொள்ளவே என்பதை மனிதன் இறுதி வரை அறிந்திட்டான் இல்லை. என்ன தேவை, எதை நாம் வேண்டுதலின் மூலமாக அடைய வேண்டும் என்று சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும் என்பதை வள்ளல் பெருமானின் தெய்வ மணி மாலையைப் படித்துணர்ந்தவர்கள் அறிவார்கள். நாம் வேண்டுவது எல்லாம் சிற்றின்பத்திற்கு உதவும் விஷயங்களையே ஆகும். ஆனால், வள்ளல் பெருமான் வேண்டுகின்ற அனைத்தும் நமக்கு பேரின்பம் அளித்து நம்மை மரணமில்லா பெரு வாழ்வு நிலையை அடையச் செய்யும் அற்புதமான விஷயங்களாகும்.
அதைப் போலவே நாம் இன்பம் அடையும் பொருட்டு எத்தனையோ பாவச் செயல்களை சுயநலத்தோடு செய்து வாழ்கிறோம். நாம் செய்வது பாவம் என்று உணராமலேயே நிறைய பாவங்களைச் செய்கிறோம். அப்படியே அதைப் பாவம் என்று யாராவது சுட்டிக் காட்டினாலும் அதை நாம் ஏற்றுக் கொள்வதில்லை. அதற்கு பல நியாயங்களைக் கற்பிக்கிறோம். நாலு பேருக்கு நன்மை செய்யுமானால் எந்தச் செயலும் பாவமில்லை என்று முட்டாள் தனமாகப் பேசுகிறோம். அது எத்தனை பேருக்கு நன்மை செய்வதாக இருந்தாலும், பாவச் செயல் என்பது பாவமே அல்லாது புண்ணியமாகாது. பட்டினத்தார் சொல்வது போல சாஸ்வதம் என்று நீ நினைக்கும் எதுவும் கூட வராது. ஆனால், நீ செய்யும் பாவ புண்ணியங்கள் கூட வரும் என்கிறார். அதில் கூட ஒரு நுட்பம் உள்ளது. அதாவது பாவம் மட்டுமல்ல, புண்ணியமும் பல பிறவிகளைத் தரக் கூடியதாகும் என்பதுவே. எனவே பற்றற்ற, மனதின் சம்ஸ்காரங்கள் அற்ற நிலை மட்டுமே, அதாவது பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற ஒரே சிந்தனையோடு வாழ்வது மட்டுமே மேன்மே தரக் கூடியதாகும். எதெல்லாம் பாவம் என்று வள்ளல் பெருமான் மனுமுறை கண்ட வாசகத்தில் குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.
1. நல்லோர் மனதை நடுங்கச் செய்வது.
2. வலிய வழக்கிட்டு மானங் கெடுப்பது.
3. தானம் கொடுப்போரை தடுத்து நிற்பது.
4. கலந்த சினேகிதரைக் கலகஞ் செய்வது.
5. மனமொத்த நட்புக்கு வஞ்சகஞ் செய்வது.
6. குடிவரி உயர்த்திக் கொள்ளை கொள்வது.
7. ஏழைகள் வயிறு எரியச் செய்வது.
8. தர்மம் பாராது தண்டஞ் செய்வது.
9. மண்ணோரம் பேசி வாழ்வழிப்பது.(தன் நிலத்திற்கு அருகில் உள்ள பிறர் நிலத்தை அபகரித்தல்)
10. உயிர்க்கொலை செய்வோர்க்கு உபகாரஞ் செய்வது.
11. களவு செய்வோர்க்கு உளவு சொல்வது.
12. பொருளை இச்சித்துப் பொய் சொல்வது.
13. ஆசை காட்டி மோசஞ் செய்வது.
14. வரவுபோக் கொழிய வழியடைப்பது.
15. வேலையிட்டுக் கூலி குறைப்பது.
16. பசித்தோர் முகத்தைப் பாராதிருப்பது.
17. இரப்போர்க்குப் பிச்சை இல்லை என்பது.
18. கோள் சொல்லி குடும்பங் கலைப்பது.
19. நட்டாற்றில் கையை நழுவ விடுவது.
20. கலங்கி ஒளிந்தோரைக் காட்டிக் கொடுப்பது.
21. கற்பழிந்தவளைக் கலந்திருப்பது.(கற்பு என்பதை மனம் சார்ந்த விஷயம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.)
22. காவல் கொண்டிருந்த கன்னியை அழிப்பது.
23. கணவன் வழி நிற்போரைக் கற்பழிப்பது.
24. கருப்பமழித்துக் களித்திருப்பது.
25. குருவை வணங்கக் கூசி நிற்பது.
26. குருவின் காணிக்கை கொடுக்க மறப்பது.
27. கற்றவர் தம்மைக் கடுகடுப்பது.
28. பெரியோர் பாட்டிற் பிழை சொல்வது.
29. பட்சியைக் கூண்டில் பதைக்க அடைப்பது.
30. கன்றுக்குப் பாலூட்டாது கட்டி வைப்பது.
31. ஊன் சுவை உண்டு உயிர் வளர்ப்பது.
32. கல்லும் நெல்லும் கலந்து விற்பது.
33. அன்புடையவர்க்குத் துன்பஞ் செய்வது.
34. குடிக்கின்ற நீருள்ள குளந்தூர்ப்பது.
35. வெயிலுக்கொதுங்கும் விருட்சமழிப்பது.
36. பகை கொண்டு அயலார் பயிர் அழிப்பது.
37. பொது மண்டபத்தைப் போயிடிப்பது.
38. ஆலயக் கதவை அடைத்தே வைப்பது.
39. சிவனடியாரைச் சீறி வைப்பது.
40. தவஞ் செய்வோரைத் தாழ்வு சொல்வது.
41. சுத்த ஞானிகளைத் தூஷணஞ் செய்வது.
42. தந்தைதாய் மொழியைத் தள்ளி நடப்பது.
43. தெய்வமிகழ்ந்து செருக்கடைவது.
என்று பாவங்களைப் பட்டியலிடுகிறார். படித்துப் பார்த்தால் பெரும்பாலான பாவங்களை நாம் செய்திருக்கிறோம் என்பது புலப்படும். இதை சொல்ல வேண்டிய அவசியம் என்னவென்றால், இதற்கு முன்னால் போனது போகட்டும். இனிமேலும் இது போன்ற பாவங்களைச் செய்யாமல் வாழும் வாழ்வைத் தா என்று இறையாற்றலிடம் வேண்டிக் கொள்வதற்குத்தான். ஏனென்றால் வேண்டுதல் என்பதே நமக்கு நாமே செய்து கொள்ளும் ஒரு சங்கல்பம் தான்.
No comments:
Post a Comment