Friday, February 6, 2015

வெற்றிகள் தரும் ஆஞ்சநேயர் சுலோகம்



அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம். முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி. அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன், ஆகவேதான் அவனைப் பற்றிய ஒரு சுலோகம்.


அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத
ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ


பள்ளித் தேர்வுக்குச் செல்லும் மாணவர்களாகட்டும், மகளுக்கு மணம் பேசச்செல்லும் பெற்றோராகட்டும் வியாபார விருத்திக்குச் செல்லும் வணிகர்களாகட்டும், வழக்குகளில் வெற்றிக்காக வாதிடும் வக்கீல்களோ, கட்சிக்காரர்களோ யாராயிருந்தாலும் மேற்கண்ட இரண்டு வரிகளையும் சொல்லி அஞ்சனையின் மைந்தனை வணங்கி பணியில் முனைந்தால், பல முறை தோற்றிருந்தாலும், வெற்றி நிச்சயம், இம்முறை.

சட்டியிலிருந்தால் தானே அகப்பையில் வரும்? வெறும் சட்டியைச் சுரண்டினால் என்ன வரும்? இருப்பவன் தானே இல்லாதவனுக்குக் கொடுக்க முடியும்? அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும், நிச்சயம் கிடைக்கும். யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். அவனிடமில்லாத்து ஒன்றில்லை. ஆகவே அவனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.

புத்திர் பலம் யசோ தைர்யம் நிர்ப்பயத்வம் அரோகதாம் |
அஜாட்யம் வாக்படுத்வம் ச ஹனுமத் ஸ்மரணாத் பவேத் ||


என உறுதியளிக்கிறது மற்றமொரு சுலோகம்.

புத்தியின் வலிமையும் அறிவின் கூர்மையும் மிகுந்தவன், அனுமன். தோல்வியின் தொடர்ச்சியில் மனம் கலங்கிய நிலையில் நம்மில் பலர், எதிலும் முடிவெடுக்காமல், எதைக் கண்டாலும் தடுமாறுகிறோம். இப்படித்தான் தடுமாறினான் சுக்ரீவன் என்கிற வானர வீரன், வாலியினால் விரட்டப்பட்டவன், நாட்டை இழந்தவன், மனைவியைப பறிகொடுத்தவன். ஓடி ஒளிந்து வாழ்கிறான். செய்வதறியாது செயல் இழந்து நின்றான்.

அவனுடனிருந்த நண்பர்களும் புத்திகலங்கி திகைத்து வாழ்ந்தார்கள். அப்பொழுது மனைவியை மாற்றான் கவர்ந்து செல்ல இல்லாளைத் தேடி அலைகின்ற, வில்லேந்திய வீரன் இராமன் இலக்குவனுடன் அங்கு வந்து சேர்ந்தான். புத்தி தடுமாறிய இராமன், கொடிகளையும், செடிகளையும், விலங்குகளையும் பறவைகளையும் கண்டு பிரலாபித்தான். யாரிடம் கேட்பது, எதைக் கேட்பது என்று புரியாமல் புலம்பி நின்றான். புத்திமான் அனுமன் மதி மயங்கிய மன்னர்கள் இருவரையும் இணைத்து, அவர்களுக்கு வாழ்க்கையில் பிடிப்பு ஏற்படச் செய்தான். யோசனையுடன் இருவரும் வெற்றிக்கு வழி கோலி ஒப்பந்தம் செய்தார். இதற்கு அடிப்படை, ஒரே பகலில் கதிரவனிடமிருந்து ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்ற, அனுமான் என்கிற புத்திமான். புத்தி வளர்வதற்கு அவனடி பற்றுவோம்.

பலவானுக்கெல்லாம் பலவான் என்று நாம் நினைக்கும் போது பீமஸேனன்தான் நம்முன் வருவார். அந்த பீமனுக்கும் பெரிய பலவான் நம் கடவுள். பல ஆண்டுகளாக, ஏன் நூற்றாண்டுகளாக வானோங்கி நிற்கின்ற மலைச் சிகரங்களை சடுதியிலே, நெடியாலே உருட்டிப் புரட்டி விடுகின்ற பலம் காற்றிற்குத்தானே உண்டு? காற்றின் கடுமையான பதிப்புத் தானே புயல் என்பது? அந்தப் புயலை எதிர்த்து நிற்கும் வலிமை யாருக்குத் தான் உண்டு? இராம-இராவண யுத்தத்திற்கு ஈடு, இராம-இராவண யுத்தம்தான் என்று கூறுவார்கள். அவ்வளவு கடுமை.

 இராவணன் யுத்ததில் முதல் நாள் போரில் பலவான்களை அனுப்பிப் பார்த்தான். இராமசேனையையும் பயமுறுத்தப் பார்த்தான். தூமராக்ஷன் என்கிற பலவான் வந்தான், பயங்கரப் படையுடன், முதல் அடியே இராவணனுக்கு மரண அடி என்பது போல, தூமராக்ஷனைத் தூள் தூள் ஆக்கினான் பலவான் வாயு குமாரன். வாயு புத்திரனை வணங்குவோம். வலிமை மிகப் பெறுவோம். இது உறுதி.

புகழ் என்பது எல்லாரும் விரும்புவதாயினும் எல்லாருக்கும் கிட்டுவதில்லை. சிலருக்கு வருவதேயில்லை. கிட்டிய புகழும் பலருக்கு நீடித்திருப்பதில்லை. பதவியில் ஒருவர் இருக்கும் வரை புகழ்ந்தவர் எல்லாம், பதவி விலகியவுடன் மதிப்பாரா? மறந்து விடுகின்றனரே! பயன் உள்ளவரை புகழுண்டு. காலம் காலமாக சிலருக்கு புகழுண்டு. மண்ணுள்ளவரை புகழுடையோரை யசஸ் உடையவர் என்கிறோம். ஆஞ்சனேயனைப் பாருங்களேன். பகவான் நாராயணன் இராமாவதாரம் எடுத்து அநுமனின் உதவியோடு அறத்தை நிலைநாட்டி வைகுந்தம் சென்றான். 

இராமாயணப் பாத்திரங்கள் அனைவரும் இவ்வுலகை விட்டுச் சென்றனர், ஆனால் அநுமன் அகலவில்லை. அதுமட்டுமன்று, யுகம் மாறியது. நாராயணன் கண்ணனாக வந்தான். அநுமனின் அருமை அறிந்து வீர விஜயனுக்கு உதவ வேண்டினான். இரண்டு யுகங்களுக்கும் அனுமன் புகழ் பரவியது. அது மட்டுமா? இந்தக் கலியிகத்திலும் அநுமனின் புகழ் உலகெங்கும் துதிக்கப் படுகிறது. ஆக அவன் புகழ், காலம் என்னும் எல்லையைத் தாண்டியது. அவன் புகழ் பாடும் நமக்கெல்லாம் புகழ்தானே?

No comments:

Post a Comment