Wednesday, February 11, 2015

சிவானந்தப் பெருவாழ்வு வழங்கும் சிவராத்திரி விரதம்



கனகமஹாமணிபூஷித லிங்கம்
பணிபதிவேஷ்டிதஸோபித லிங்கம்
தக்ஷஸுயக்ஞவினாஸன லிங்கம்
தத்ப்ரணமாமி ஸதாஸிவ லிங்கம்


பொருள்:

தங்கத்தாலும், சிறந்த மணிகளாலும் அலங்கரிக்கப்பட்ட லிங்க மூர்த்தியை, நாகராஜனால் சுற்றப்பட்டு விளங்குகின்ற லிங்க மூர்த்தியை, தக்ஷ யாகத்தை நாசம் செய்த லிங்க மூர்த்தியை, மங்கலத்தைச் செய்யும் ஸ்ரீமகாலிங்க மூர்த்தியை நமஸ்கரிக்கிறேன் என்பதாகும்.

"மகா சிவராத்திரி" எனும் புனிதமான விரதம் ஒவ்வொரு வருடமும் மாசி மாதம், கிருஷ்ண பக்ஷம், சதுர்த்தசி திதியன்று திருவோணம் நக்ஷத்திரம் கூடிய புண்ணிய தினத்தன்று அனுஷ்டிக்கப் பெறுகின்றது. மஹா சிவராத்ரியன்று சிவபெருமான் எழுந்தருளும் ராத்திரி, சிவனை அர்ச்சிக்க வேண்டிய ராத்திரி, சிவனோடு ஐக்கியமாக வேண்டிய ராத்திரி, தேவர்களும் முனிவர்களும் வணங்கி நிற்கும் ஒப்பற்ற ராத்ரியாகும். இவ் வருடம் 16.02.2015 திங்கட்கிழமை அன்று வட-அமெரிக்காவிலும், 17.02.2015 அன்று இலங்கை, இந்தியாவிலும் அமைவதாக சோதிடம் கணிக்கின்றது.

சிவராத்திரி விரதம் பொதுவாக எல்லா சிவன் ஆலயங்களிலும் குறிப்பாக இலங்கையில் திருக்கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், பொன்னம்பலவாணேஸ்வரர், சாத்தாவோலை(வயல்கரை) சம்புநாதீஸ்வரர் ஆலயங்களிலும் பணிப்புலம் முத்துமாரி அம்பாள் ஆலயத்திலும் பெரு விழாவாக நடைபெற்று வருகின்றன. இத் தினத்தில் பணிப்புலம்-சாத்தாவோலை சம்புநாதீஸ்வர், கீரிமலை நகுலேஸ்வரர் தேரினில் ஆரோகணித்து வேண்டுவார் வேண்டுவதை ஈர்ந்தருளுகின்றனர்.

எம்பெருமானுக்கு உகந்த விரதங்களாக எட்டுவிரதங்களை கந்தபுராணம் குறிப்பிடுகிறது. சோம வார விரதம், திருவாதிரை, உமா மகேசுவர விரதம், மகா சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாண விரதம், சூல விரதம் , ரிசப விரதம் என்பன அவையாகும். இத் திருநாட்களில் தனித்திருந்து, விழித்திருந்து, பசித்திருந்து இறைவனை வழிபட்டால் இறையருள் கிட்டும் என ”வள்ளல் பெருமான்” இராமலிங்க அடிகள்- கூறுகின்றார்.

தனித்திரு: ஆசாபாசங்களில் மனதை அழுந்த விடாமல் பற்றற்றான் பற்றினையே பற்றிக் கொண்டிருத்தல், எவ்வித கூட்டுறவுகளில் கலந்திருந்த போதிலும் சீவன் பரமனை பற்றி இருத்தலே தனித்திருத்தல் - மனம் தனித்து அமைதி நிலையில் இறையுணர்வோடு இருத்தல் ஆகும்.

விழித்திரு: மனம், புத்தி, சித்தம், அகங்காரம் முதலிய காரணங்களை அன்புக்குரிய நன் முயற்சியில் ஈடுபடுத்தி பொய், பொறாமை, காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம் முதலான துவேச உணர்வுகளிலிருந்து தடுத்துப் பழகுதலே விழித்திருத்தல் - விழித்திருத்தல் எனப்பெறும். விழிப்புடன் இருத்தல் ஆகும்.

பசித்திரு: பசியோடு இதிருந்தால்தான் புசிக்கலாம். ஆண்டவர் அருளமுதம் அருந்த அருட்கணல் ஏற்றி அவாக் கொள்ளுதலே பசித்திருத்தல், முழுமை சித்தி அடையும்வரையில் ஞானப் பசியுடன் இருத்தல் ஆகும்.

மகா சிவராத்திரியின் மகிமையை ஆகமங்கள், சிவமகா புராணம், ஸ்காந்தம், பத்மம் உள்ளிட்ட பத்து புராணங்களும் குறிப்பிடுகின்றன. மகாசிவராத்திரியானது சிவனுக்கு உரிய இரவு என பொருள்படும். மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசி திதியன்று வருவது மஹா சிவராத்திரி. வேதங்களில் சாமவேதமும், நதிகளில் கங்கையும், பஞ்சபூத ஸ்தலங்களில் ஆகாய ஸ்தலமாகிய சிதம்பரமும் எப்படி உயர்ந்ததோ அதே போல விரதங்களில் உயர்ந்தது மஹா சிவராத்திரி விரதம் என சாஸ்திரங்கள் போற்றுகின்றன.

சிவனுக்குரிய விரதங்களாக நித்ய சிவராத்திரி, மாத சிவராத்திரி, பக்ஷசிவராத்திரி, யோக சிவராத்திரி, மஹா சிவராத்திரி என்று வருடம் முழுவதும் கொண்டாடப்பெற்று வந்தாலும் மஹா சிவராத்திரி விரதம் எல்லா சிவராத்திரிகளிலும் சிறப்பானது என புராணங்கள் கூறுகின்றன.

நித்ய சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் தேய்பிறை, வளர்பிறை, சதுர்த்தசி திதிகள் ஆகியன நித்திய சிவராத்திரி எனப்படும். ஒவ்வொரு சதுர்தசியிலும் சிவனை நான்கு காலங்களிலும் முறைப்படி பூஜை செய்ய வேண்டும். இப்படி ஒரு வருஷத்தில் இருபத்தி நான்கு சதுர்தசியில் இரவில் பூஜை செய்து வழிபடுவதற்கு நித்திய சிவராத்திரி என்று பெயர்.

பட்ச சிவராத்திரி:

தை மாதம் தேய்பிறை பிரதமையன்று தொடங்கித் தொடர்ந்து பதின்மூன்று நாட்கள் இரவில் சிவபூஜை செய்ய வேண்டும். பின்னர் சதுர்த்தசியில் பூக்ஷையை நிறைக்க வேண்டும். நான்கு காலத்திற்குப் பதில், பக்ஷ சிவராத்திரியில் ஒரு காலம் பூஜை செய்தால் போதுமானது என்பது கொள்கை. ரோகங்கள் விலகவும், உன்மத்த ரோக சமனம் ஏற்படவும், இது துணையாவது. இதை ரோகிகளுக்காக மற்றவர்கள் கூடச் செய்யலாம்.

மாத சிவராத்திரி:

ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திதியில் இந்த விரதம் வரும். சித்திரையில் தேய்பிறை அஷ்டமி, வைகாசியில் வளர்பிறை அஷ்டமி, ஆனியில் வளர்பிறை சதுர்த்தி, ஆடியில் தேய் பிறை பஞ்சமி, ஆவணியில் வளர்பிறை அஷ்டமி, புரட்டாசியில் வளர்பிறை திரயோதசி, ஐப்பசியில் வளர்பிறை துவாதசி, கார்த்திகையில் வளர்பிறை சப்தமி, மார்கழியில் வளர்பிறை சதுர்த்தசி, தை மாதம் வளர்பிறை திருதியை, மாசியில் தேய் பிறை சதுர்த்தசி (மகா சிவராத்திரி), பங்குனியில் வளர்பிறை திரிதியை ஆகிய நாட்களில் இந்த விரதம் இருக்க வேண்டும். சிவலோகத்தையும், சிவசாயுஜ்யத்தையும் அடைவார்கள். மாத சிவராத்திரிகளில் சிவபூஜை செய்பவர்களுக்கு சுகவாழ்வும் பரத்தில் கைவல்யமும் கிட்டும்.

யோக சிவராத்திரி:

திங்கட்கிழமையன்று அறுபது நாழிகையும் அமாவாசையாக இருந்தால் அந்த அமாவாசை யோகிகளுக்கு மிகவும் உயர்ந்தது. சித்தர்களுக்கு மிகவும் சிறந்தது. இது யோக சிவராத்திரி எனப்படும்.
யோக சிவராத்திரியில் யோகியானவன் யோக பூஜை செய்ய வேண்டும். யோக சித்தியை இது வழங்கும். யோகியர் அல்லாத மற்றவர்கள் யோக சிவராத்திரியில் பூஜித்தால் ஆத்ம ஜோதியில் சிவத்தைத் தரிசனம் காண ஏதுவாகும்.

மகா சிவராத்திரி :

மாசி மாதம் கிருஷ்ணபக்ஷ சதுர்தசியன்று வருவது மஹா சிவராத்திரி மற்ற எல்லா சிவராத்திரிகளை விடவும் இதுவே சிறப்புடையது. பல்வேறு வகையான பெரிய நலன்களை இது வழங்குவது. மற்ற சிவராத்திரிகளில் பெறும் எல்லா பேற்றையும் இது ஒரு சேர வழங்குவதால் இது மஹாசிவராத்திரி என்று போற்றப்படுகிறது. மஹா சிவராத்திரியில் நான்கு காலங்களிலும் இரவில் பூஜை செய்ய வேண்டும். சிவபஞ்சாயதனம் கைக்கொண்டவர்கள் இரவில் பூஜையைத் தரித்து நற்பலன் பெற வேண்டும்.

சிவராத்திரி என்ற சொல்லே மோக்ஷம் தருவது என பொருள் பெறும். சிவ வசீகரண மந்திரத்தை ருத்திர பூமியில் இந்தப் புண்ணிய நாளில் ஜெபம் செய்து தேவதா வஸ்யம் முதல் பல லாபங்களை அடையலாம். குருவான சிவபெருமான் இதற்கு அருளுவார்

ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு திதி உண்டு. ஈஸ்வரனுக்குரிய திதி இறுதி திதியான சதுர்த்தசி திதி ஆகும். சிவன் அழிக்கும் கடவுள். எல்லா உயிர்களும் தங்கள் வாழ்வின் இறுதியில் அவரையே அடைகின்றன என்பதால் இந்த இறுதி திதியை அவருக்கு ஒதுக்கினார்கள். அதில் மாசி மாதம் தேய்பிறையில் வரும் சதுர்த்தசி இரவே மகிமை மிக்க "மகா சிவராத்திரி ஆகும்.

அம்பிகைக்கு சிவன் அருவுருவில் (உத்பவம்) உபதேசம் செய்த ஆகம உபதேச புண்ணிய காலமான மகா சிவராத்திரி விரதம் கடை பிடிக்கும் போது புத்திசாலி குழந்தைகள் அமைவர். குபேரனிடம் இருப்பது போல் வற்றாத செல்வம் கிடைத்து நிலைக்கும். ஒரு வருடம் முழுவதும் ஐந்து பிரிவு சிவராத்திரி விரதம் கடைபிடித்தால் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும் என்பது ஐதீகம்.

மகாபிரளயத்தின் பின்னர் எம்பெருமான் சிவபெருமான் தனியாக இருந்து ஆழ்ந்த தவத்தில் மூழ்கியிருந்தார். எப்போதும் உடனாய சிவகாமியம்மை, மீண்டும் அண்டசராசரங்களையும் படைக்க வேண்டி எம்பெருமானை நோக்கித் தவமிருந்தார். அன்னையின் தவத்தின் பலனாக ஐயன் திருவருட்சம்மதம் அருளினார். அன்னையின் தவத்தில் மகிழ்ந்த எம்பெருமான் அன்னையின் திருவுள்ள விருப்பத்திற்கு அமைய "இந்நாளாகிய சிவராத்திரிச் சாமபொழுதில் கண்விழித்து, நான்கு காலப்பூசைகளையும் முறைப்படி ஒழுகி விரதம் பூணுவர்களுக்கு முக்தி அளிப்பேன்" என திருவருட்சம்மதம் அளித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் உத்தராயண சிசு ருதுவில் குளிர் காலத்தில், மாசி மாத கிருஷ்ண பட்ச சதுர்த்தியில் இரவு 14 நாழிகைக்கு மேல் 16 நாழிகைக்குட்பட்ட வேளை தான் மகா சிவராத்திரி எனப்படும். உத்தமோத்தம சிவராத்திரி, உத்தம சிவராத்திரி, மத்திம சிவராத்திரி, அதம சிவராத்திரி என மகா சிவராத்திரியானது நான்கு வகைப்படும்.

சூரியன் அஸ்தமிக்கும் வரை திரயோதசி திதியிருந்து, அதன் பிறகு சதுர்தசி வந்து, அந்த இரவும், மறுநாள் பகலும் முழுவதுமாக சதுர்தசி திதியிருந்தால் அது உத்தமோத்தம சிவராத்திரி.

சூரியன் அஸ்தமித்த பிறகும், இரவின் முன் பத்து நாழிகையிலும் சதுர்தசி திதி வந்தால் அது உத்தம சிவராத்திரி.

காலை முதல் மறுநாள் சூரிய உதயம் வரை வரும் சதுர்தசி திதியும், சூரியன் அஸ்தமிப்பதற்கு முன்பே வரும் சதுர்தசி திதியும், இரவின் பத்து நாழிகைக்குப் பிறகு வரும் சதுர்தசி திதியும் மத்திமம்.

இரவில் 20 நாழிகை அளவு சதுர்தசி திதியிருந்து, அதன் பின் அமாவாசை வந்தால், அது அதமம்.

இவை தவிர சிவபெருமானுக்குச் சிறப்பான திருக்கார்த்திகை, திருவாதிரை ஆகிய தினங்களும் சிவராத்திரி தினங்களாக கணிக்கப்பட்டு சிவராத்திரி விரதம் அனுட்டிக்கின்றனர்.

No comments:

Post a Comment