Wednesday, February 11, 2015

மஹா சிவராத்திரி விரதப்பலன்



அம்மை வேண்டிக் கொண்டதற்கிணங்க நாம் மஹா சிவராத்திரி விரதம் அனுஷ்டிப்பதால் அந்த கயிலை நாதன் நமக்கு இம்மையில் நமது எல்லா தோஷங்களியும் நீக்கி, பய உணர்வை அகற்றி, தீராப் பிணிகளை தீர்த்து, மனக்கவலைகளை மாற்றி சகல மங்களங்களையும் வழங்குவதுடன் நமக்கு மறு பிறப்பு இல்லாமல் சிவகணங்களுள் ஒருவராகும் வாய்ப்பையும் வழங்குகிறார். எடுத்துக்காட்டாக புராணங்களில் கூறப்பட்டுள்ள ஒரு வேடனின் வரலாறு கூறப்பட்டுள்ளது.

முன்னொரு காலத்தில் வாரணாசியில் சுஸ்வர என்ற பெயருள்ள ஒரு ஏழை வேடன் இருந்தான். ஒரு சிறிய குடிலில் மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்த அவன் காட்டில் வேட்டையாடி கிடைக்கும் பறவை விலங்கு ஆகியவற்றின் மூலம் தனது குடும்பத்துக்கு உணவளித்து வந்தான். ஒரு நாள் அவன் வேட்டை ஆடும் போது ஒரு புலி அவனை துரத்தியது. புலியிடமிருந்து தப்பிக்க அவன் ஒரு மரத்தின் மேலே ஏறிக் கொண்டான். புலியும் மரத்தின் கீழே அவன் இறங்கி வந்தால் அவனைக் கொன்று புசிக்கலாம் என்று காத்துக் கொண்டிருந்தது. பகல் முழுவதும் இவ்வாறு அவன் ஒன்றும் சாப்பிடாமல் மரத்தின் மேலேயே இருந்தான்.

அந்தியும் ஆகியது புலியும் நகர வில்லை வேடனாலும் கீழே வர முடியவில்லை. இரவிலே தூங்காமல் இருக்க மரத்தில் இருந்த இலைகளைப் பறித்து கீழே போட்டுக் கொண்டிருந்தான். நடு நடுவே தன் குடுவையில் இருந்த தண்ணிரையும் கீழே ஊற்றிக் கொண்டிருந்தான். காலை புலர்ந்தது புலி ஓடி விட்டது, வேடனும் கீழிறங்கி வந்து தன் இருப்பிடன் சென்றான். அவன் அவ்வாறு அமர்ந்திருந்த மரத்தின் அடியில் ஒரு ”சிவலிங்கம்” இருந்ததாலும், அந்த மரம் வில்வ மரமாக இருந்ததாலும், அந்த இரவு சிவராத்திரியாக இருந்ததாலும் புலியின் பயத்தினாலேயே வேடன் இவ்வாறு பகலில் உணவு உண்ணாமலும் இரவிலே லிங்க மூர்த்திக்கு அபிஷேகமும் வில்வ தளங்களால் அர்ச்சனை செய்ததால் வேடனுக்கு சிவராத்திரி விரதப் பலனைக்கொடுத்து முக்தி கொடுத்தருளினார் எம்பெருமான். நாமும் தூ‘ய மனத்தோடு இந்த விரதத்தை மேற்கொண்டால் அந்த இறைவனது அருளைப் பெறலாமே.

வேடன் இவ்வாறு முக்தி பெற்ற ஐதீகம் நடைபெற்றதாகக் கூறப்படும் தலங்கள் திருவைகாவூர் மற்றும் பெரும் புலியூர் ஆகும் இத்தலங்களில் மஹா சிவராத்திரி மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

மஹா சிவராத்திரி 10 நாள் பெருவிழாவாக தேரோட்டத்துடன் நடைபெறும் மற்ற தலங்கள் ஸ்ரீ சைலம், ஸ்ரீ காளஹஸ்தி, ஸ்ரீ இராமேஸ்வரம், ஸ்ரீ கோகர்ணம் மற்றும் பணிப்புலம் வயல்கரை சம்புநாதீஸ்வரர் ஆகும்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம், ஆதி சேஷன் எப்போதும் இந்த பூவுலகைச் சுமந்து கொண்டிருப்பதால் தன் பலமனைத்தையும் இழந்து தவித்த போது, ஒரு சிவராத்திரியில் முதல் ஜாமத்தில் திருக்குடந்தையில் (கும்பகோணம்) நாகேஸ்வரரையும், இரண்டாம் ஜாமத்தில் சண்பகாரண்யம் எனப்படும் திரு நாகேஸ்வரத்தில் நாக நாத சுவாமியையும், மூன்றாம் ஜாமத்தில் சேஷபுரி எனப்படும் திருப்பாம்புரத்தில் பாம்பீஸ்வரரையும், நான்காம் ஜாமத்தில் நாகூரிலே நாக நாதரையும் தரிசித்ததால் தான் இழந்த பலமனைத்தையும் பெற்றார் என்பதால் சிவராத்திரி நன்னாளில் இந்த நான்கு தலங்களிலும் வழிபாடு செய்தால் உடலிலுள்ள எல்லா வியாதிகளும் நீங்கி சுகமாக வாழ்வர் என்பதும் சர்ப்ப தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.

சிவராத்திரியுடன் தொடர்புடைய மற்றொரு ஐதீகம்: அகில உலகமும் பெருங் கடல் மூடிப் பிரளயம் ஏற்படும் ஊழிக் காலத்தில் சகல ஜீவ ராசிகளும் எம் ஐயனின் காலடியில் ஒடுங்குகின்றன. அப்போது கங்காளராய் எம் ஐயன் மீண்டும் படைப்புத் தொழிலைத் தொடங்க ஓம் என்னும் பிரணவத்தை நல் வீணையில் வாசித்துக் கொண்டு இருப்பார். இதை அப்பர் பெருமான் தம் பதிகத்தில் இவ்வாறு பாடுகின்றார்,

பெருங்கடல் மூடிப் பிரளயங் கொண்டு பிரமனும் போய்
இருங்கடல் மூடியிறக்கும் இறந்தான் கபேளரமும்
கருங்கடல் வண்ணன் களேபரமுங் கொண்டு கங்காளராய்
வருங்கடல் மீளநின் றெம்மிறை நல் வீணை வாசிக்குமே!.


அந்த பிரளய காலத்தில் எம் அம்மை பார்வதி உயிர்களுக்கு இரங்கி தவம் கிடந்து இறைவனை பூஜை செய்த இரவே சிவராத்திரி ஆகும். பின்னர் படைப்பு தொடங்கிய பிறகு இந்நாளில் இறைவனை வணங்குபவர்களுக்கு இப்பிறப்பிலும் மறு பிறப்பிலும் எல்லா நன்மைகளையும் வழங்க வேண்டும் என்ற அம்மையின் வேண்டுகோளுக்கிணங்கி சிவ ராத்திரி நன்னாளில் அவரை வழிபடுபவர்களுக்கு இம்மையில் எல்லா சுகங்களையும் அளிப்பதுடன் வீடுப் பேற்றையும் அருளுகின்றார்.

தங்களுக்குள் யார் பெரியவர் என்று பிரம்மனும் விஷ்ணுவும் சண்டையிட்டனர், அவர்களது கர்வத்தை அடக்க சிவ பெருமான் பெரிய நெருப்பு பிழம்பாய் நின்று அடியும் முடியும் கண்டு பிடிக்குமாறு கூற இருவராலும் கண்டுபிடிக்க முடியாமற் போனது। இவ்வாறு எம்பெருமான் லிங்கோத்பவ மூர்த்தியாய் நின்ற நாள் திருக்கார்த்திகை ஆகும். பின் இருவரும் சிவ லிங்க ரூபமாக அவரை வணங்காத தமது தவறை உணர்ந்து மன்னிப்பு வேண்ட, மஹா சிவராத்திரி நன்னாளில் எம்பெருமான் லிங்க ரூபமாக தோன்றி இருவருக்கும் அருள் வழங்கின நாள் என்பதும் ஒரு ஐதீகம்.

திருக்கோயிலுள்ளிருக்கும் சிவலிங்கம் பரார்த்தலிங்கம் எனப் பெயர் பெறும். அது சுயம்புலிங்கம், காணலிங்கம், தைவிகலிங்கம், ஆரிடலிங்கம், மானுடலிங்கம் என ஐந்து வகைப்படும். அவற்றுள்,

1. சுயம்புலிங்கம் - தானாகவே தோன்றியது.

2. காணலிங்கம் - விநாயகர் சுப்பிரமணியர் முதலிய கணர்களாலே தாபிக்கப்பட்டது.

3. தைவிகலிங்கம் - விஷ்ணு முதலிய தேவர்களாலே தாபிக்கப்பட்டது.

4. ஆரிடலிங்கம் - இருடிகளாலே தாபிக்கப்பட்டது. அசுரர் இராக்சதர்களாலே ஸ்தாபிக்கப்பட்டது .

5. மானுடலிங்கம் - மனுடராலே தாபிக்கப்பட்டது.


மானுடலிங்கத்திலும் உயர்ந்தது ஆரிடலிங்கம்; அதனிலும் உயர்ந்தது தைவிகலிங்கம்; அதனிலும் உயர்ந்தது காணலிங்கம்; அதனிலும் உயர்ந்தது சுயம்புலிங்கம்.

சிவனாருக்கு உகந்த வில்வத்தின் சிறப்பு:

வில்வத்தில், மகா வில்வம், கொடி வில்வம், கற்பூர வில்வம், சித்த வில்வம் என பல வகைகள் உள்ளன. குறிப்பாக, மூன்று இதழ் கொண்ட வில்வ தளங்களையே பூஜைக்குப் பயன்படுத்து கிறோம். ஐந்து மற்றும் ஏழு இதழ்கள் உள்ள வில்வ தளங்களும் உள்ளன.

பூஜைக்குப் பயன்படுத்துகிற வில்வத்தை, சூரியோதயத்துக்கு முன்னதாகவே பறித்து வைத்துக் கொள்வது உத்தமம். வில்வத்துக்கு நிர்மால்யம் கிடையாது என்பதால், சிறிது தண்ணீரை வில்வத்தில் தெளித்துவிட்டு, பூஜைக்குப் பயன்படுத்தலாம்.

தினமும் சிவனாருக்கு வில்வம் சார்த்தி வழிபடுவது சிறப்பு. மகா சிவராத்திரி நாளில், வில்வாஷ்டகம் பாராயணம் செய்து, வில்வம் சார்த்தி சிவனாரைத் தரிசித்தால், ஏழேழு ஜென்மத்துப் பாவங்களும் விலகும் என்பது ஐதீகம்!

சிவராத்திரியில் முக்கியமான லிங்கோத்பவ காலம்:

சிவராத்திரியில் மூன்றாம் காலத்தை லிங்கோத்பவ காலம் என்பார்கள். மிகச் சிறப்பு வாய்ந்த தருணம் அது. இதுவே, சிவபெருமான் சிவலிங்கத்தினின்று திருவுருவம் கொண்டு வெளிப்பட்டு, அருவுருவமாக நின்று அன்பர்களுக்கு அருள்பாலித்த நேரமாகும். இந்த வேளையில் சிவபூஜை செய்வது அதிக சிறப்புத் தருவதாகும்.

லிங்கோத்பவ காலத்தில், இறைவனுக்கு நெய்பூசி வெந்நீரால் அபிஷேகம் செய்து, கம்பளியால் நெய்த ஆடைகளை அணிவித்து, மலர்களினால் அலங்கரிக்க வேண்டும். நெருப்புச் சுடரின் மையத்தில் தோன்றிய பெருமானை பிரமனும் திருமாலும் ஆயிரம் ஆயிரம் நாமங்களைச் சொல்லி அர்ச்சித்தார்கள். அதனை நினைவுகூரும் வகையில், உருத்திரருக்கு எண்ணில்லாத வணக்கங்களைக் கூறும் ருத்திரத்தை ஓத வேண்டும்.

மேலும் சிவ சகஸ்ரநாமத்தை பாராயணம் செய்ய வேண்டும். தமிழ் வேதமான தேவாரத்தில் உள்ள ”இருநிலனாய் தீயாகி” எனும் பதிகத்தையும், லிங்கபுராணக் குறுந்தொகையையும் தவறாது ஓதி வழிபடலாம்.

நிகழ்வுகள்:

நாம் அறிந்தோ, அறியாமலோ, தெரிந்தோ, தெரியாமலோ, எம்வாழ்வில் செய்த தீய செயல்களின் பாவங்களில் இருந்து விமோசனம் தந்து எம்மை பாவத்தின் பிடியில் இருந்து மீட்டெடுத்து பத்திவழி நடத்திட இப்புனித தினத்தில் பக்திசிரத்தையுடன் ஆன்மீக சீலராக சிவனடியில் சேர்ந்திடுவோம்.

விரதங்களில் கடுமையானதும் கட்டுப்பாடு மிக்கதும், நிறைந்த பலந்தருவதும் இச் சிவராத்திரி விரதமேயாகும். எனவே மிகுந்த கட்டுப்பாட்டுடனும் பயபக்தியுடனும் அனுஷ்டித்து மாதொரு பாகனான எம் பெருமானின் அருளுக்கும், அம்மையின் அருளுக்கும் பாத்திரமாவோமாக.

No comments:

Post a Comment