Friday, September 19, 2014

சனி பகவான்





இவர் பெயரை கேட்டாலே அண்ட சராசரமே ஆடிப்போகும்.  சாதாரண மனிதர் முதல்,  சகல சம்பத்துகளும் பெற்ற தேவர்கள் வரை நடுங்குவார்கள்.  நீதிமான். நியாயவாதி. அதனால்தான் தராசு சின்னம் கொண்ட துலாம் ராசியில் உச்சமாகிறார். 

கரிய நிறம் கொண்ட சனிபகவான் காசிப கோத்திரத்தில் பிறந்தவர்.  ஜோதிட சாஸ்த்திரத்தில் ஆயுள் காரகன் என்ற அதி முக்கியமான பதவியில் இருப்பவர்.  சூரியபகவானின் இரண்டாவது புதல்வர். 

அப்போ முதல் புத்திரர்.....

அது யமன்.  பின்னவர் ஆயுளை வளர்த்தால்,  முன்னவர் ஆயுளை பறிக்கும் தொழிலை செய்பவர்.  சகோதரி யமுனை.  காக்கையை வாகனமாக கொண்டவர். ஈஸ்வர பட்டம் பெற்றவர்களில் சனியும் ஒருவர். 

புரட்டாசி மாதம், சனிக்கிழமை, ரோகினி நச்சத்திரம் கூடிய சுபயோக சுப தினத்தில், தகப்பனார் ஸூரியபகவானுக்கும்,  தாயார் சாயாதேவிக்கும் பூர்வ புண்ணிய பொங்கு சோபன புத்திரன் சனீஸ்வரன் என்ற சனிபகவான் ஜனனமானார். 

அவர் பிறந்தநாளைதான் புரட்டாசி மாதம் வரும் ஒவ்வொரு சனி கிழமையும் விரதம் இருந்து அனுஷ்டிக்கிறோம். 

எதற்கு?

நீடித்த ஆயுளை பெற, சனிபகவானின் அருளை பெற.  இது கோவிந்தனுக்கும் உரிய நாள் என்பது உண்மைதான்.  எள்தான் இவரது தானியம்.  அந்த எள் விஷ்ணு பகவானின் வியர்வையில் இருந்து வந்ததாக சொல்லப்படுகிறது.

இங்கே குறிப்பிட்டாக வேண்டிய ஒரு விஷயம் இது.   மற்ற கிரகங்கள் என்னதான் யோக நிலையில் இருந்தாலும் சனிபகவானின் சம்மதம் இல்லாவிட்டால்  யூகத்தை பெறுவதற்கு சான்ஸ் இல்லை.

அதே சமயம் சனி கொடுக்க துணிந்து விட்டால்,  சும்மா அதிரும்முள்ள என்று சொல்கிற மாதிரிதான் இருக்கும்.  எதுக்குடா வம்பு என்று மற்ற கிரகங்கள் விலகி கொள்ளும்.  புரியுதா.

சனி கர்ம வினை கிரகம்.  கலியுகத்தில் சகல தெய்வங்களின் தூதுவனாக நின்று நன்மையோ தீமையோ செய்கிறார்.  அதனால் எந்த ராசியில் நின்றாலும்  தப்பு செய்தால் அவருக்கு பிடிக்காது.

ஏழரை சனி, அஷ்டமத்து சனி வரும்போது செயற்குழு, பொதுக்குழு, காரிய கமிட்டி கூட்டமெல்லாம்  போடா மாட்டார்.  நேரடியாக ஆகஷன்தான். 

என்னதான் காசு பணம், சொத்து சுகம்  இருந்தாலும் அனுபவிக்க முடியாது.  நோயை கொடுத்து பாயில் படுக்க வைத்து விடுவார்.  விபத்து கண்டங்களை உருவாக்கி ஒரே இடத்தில் முடக்கி போடுவார்.

இல்லா விட்டால் ஒரே நாளில் ஓட்டாண்டியாக்கி நொந்து நுலாக அலைய விடுவார்.  அப்படியும் இல்லையா..... வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு என்பது மாதிரி நம்பிக்கை மோசடிக்கு யாராவது நம்மை தேடி வருவார்கள்.

அட அதுவும் முடியலையா?  இருக்கவே இருக்கு அரசாங்க அறை.  அதாங்க... ஜெயில்.  இருட்டிப்பு செய்து இருக்கும் இடம் தெரியாமல் செய்வது போல், கொஞ்ச நாளைக்கு கம்பி எண்ணுடா தங்கம்னு அனுப்பி வைக்க பார்பார்.

உங்களுக்கு ஏழரை சனியா?  அஷ்டம சனியா? இந்த மத்திரத்தை சொல்லுங்க.  சனி பகவானின் கருணை உங்களுக்கு கிடைக்கும்.  அந்த மந்திரம் இதுதான்.

" நீலாஞ்சனச மாபாஷம்
ரவி புத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட சம்புதம்
தம் நவாமி சனைசரம் ".

ஸ்ரீ பத்ரகாளியம்மன் 108 போற்றி



ஓம் அன்னையே போற்றி

ஓம் அழகே போற்றி
ஓம் ஆத்தா போற்றி
ஓம் ஆரணி போற்றி
ஓம் இளகியோய் போற்றி 
ஓம் இமயோய் போற்றி 6 
ஓம் ஈஸ்வரி போற்றி 
ஓம் ஈவோய் போற்றி 
ஓம் உமையே போற்றி 
ஓம் உத்தியே போற்றி
ஓம் எழிலே போற்றி
ஓம் ஏதிலாய் போற்றி 12 
ஓம் ஐங்குனி போற்றி 
ஓம் ஐஸ்வரி போற்றி 
ஓம் அங்கயல் போற்றி 
ஓம் அருமையே போற்றி 
ஓம் உருமையே போற்றி 
ஓம் ஒளியின் ஒளியே போற்றி 18 
ஓம் கனல் விழியே போற்றி 
ஓம் கமலினியே போற்றி 
ஓம் கங்கனியே போற்றி 
ஓம் கிளி மொழியே போற்றி
ஓம் குயில் மொழியே போற்றி 
ஓம் குண சீலியே போற்றி 24 
ஓம் குணவதியே போற்றி 
ஓம் குடும்பினியே போற்றி 
ஓம் கொற்றவையே போற்றி 
ஓம் கொல்லியே போற்றி 
ஓம் குவிமுலையே போற்றி 
ஓம் கோள்களாட்சியே போற்றி 30 
ஓம் கெளரியே போற்றி 
ஓம் கௌமாரியே போற்றி 
ஓம் கெளசகியே போற்றி 
ஓம் கமலையே போற்றி 
ஓம் சண்டி சாமுன்டியே போற்றி 
ஓம் சூலினியே போற்றி 36 
ஓம் செங்கனியே போற்றி
ஓம் செஞ்சடையே போற்றி 
ஓம் சைகையே போற்றி 
ஓம் தைலஸ்ரீயே போற்றி 
ஓம் தர்பரையே போற்றி 
ஓம் பராபரையே போற்றி 42 
ஓம் தாட்சாயணியே போற்றி 
ஓம் தினகரியே போற்றி 
ஓம் நடனகாளியே போற்றி 
ஓம் நல்மையிலே போற்றி 
ஓம் நற்குயிலே போற்றி 
ஓம் ஆதியே போற்றி 48 
ஓம் ஓங்காரியே போற்றி 
ஓம் பைரவியே போற்றி 
ஓம் கருஉருவே போற்றி 
ஓம் புனலின் இதயமே போற்றி 
ஓம் புரந்தரியே போற்றி 
ஓம் நிரந்தரியே போற்றி 54 
ஓம் மகா மாயா போற்றி 
ஓம் மகமாயி போற்றி 
ஓம் மாலினியே போற்றி 
ஓம் குண்டலினியே போற்றி 
ஓம் பரிபூரணியே போற்றி 
ஓம் பார்கவியே போற்றி 60 
ஓம் உடையவள் போற்றி 
ஓம் பங்கஜா போற்றி 
ஓம் சாம்பவியே போற்றி 
ஓம் மோகனாவே போற்றி 
ஓம் மனோன்மணியே போற்றி 
ஓம் தடாதகையே போற்றி 66 
ஓம் ஜடாதாரியே போற்றி 
ஓம் மணிமகளே போற்றி 
ஓம் அலர்மகளே போற்றி 
ஓம் சந்த்ரிகையே போற்றி 
ஓம் சியாமளா போற்றி 
ஓம் ஸ்ரீயந்திரம் போற்றி 72 
ஓம் பொங்கழல் போற்றி 
ஓம் இளம் மலரே போற்றி 
ஓம் மதியொளியே போற்றி 
ஓம் ஒளிசிவையே போற்றி 
ஓம் வான்நிதியே போற்றி 
ஓம் பசிலோக பயங்கரியே போற்றி 78 
ஓம் நிரஞ்சனியே போற்றி 
ஓம் ஆனந்த நாயகியே போற்றி
ஓம் பரோப காரியே போற்றி 
ஓம் பராசக்தியே போற்றி 
ஓம் வாராஹியே போற்றி 
ஓம் ஓம் வாக்தேவியே போற்றி 84 
ஓம் வீரகோஷ்டித் தாயே போற்றி 
ஓம் நவகாளியே போற்றி 
ஓம் அஷ்டகாளியே போற்றி 
ஓம் வீர காளியே போற்றி 
ஓம் வீர பத்ரகாளியே போற்றி 
ஓம் வன பத்ரகாளியே போற்றி 90 
ஓம் கொல்லிக்காளியே போற்றி 
ஓம் பச்சைக் காளியே போற்றி
ஓம் பவழக் காளியே போற்றி 
ஓம் வக்ரகாளியே போற்றி 
ஓம் மதுரகாளியே போற்றி 
ஓம் கொண்டத்துக் காளியே போற்றி 96 
ஓம் ஊர்த்துவ காளியே போற்றி 
ஓம் வெட்டுடைக் காளியே போற்றி 
ஓம் அக்கினி காளியே போற்றி 
ஓம் பாதாள காளியே போற்றி 
ஓம் இரண காளியே போற்றி
ஓம் தில்லைக் காளியே போற்றி 102
ஓம் மங்கள சண்டிகா போற்றி 
ஓம் மா காளியே போற்றி 
ஓம் கோட்டைக் காளியே போற்றி 
ஓம் உஜ்ஜயினி மாகாளியே போற்றி 
ஓம் பத்ரகாளித் தாயே போற்றி 
ஓம் வடபத்ர காளித் தாயே போற்றி ... போற்றி ... 108
ஓம் சக்தி ... ஓம் சக்தி ... ஓம் சக்தி ...ஓம் ...
ஓம் சக்தி ... பராசக்தி ... ஓம் சக்தி ... ஓம் ...
ஓம் சக்தி ... பத்ரகாளி... ஓம் சக்தி ... ஓம் .

சிவனும் சித்தர்களும் வாழும் சதுரகிரி



நான்கு பக்கமும் மலைகளால் சூழப்பட்ட வனப் பிரதேசம்.

சித்தர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி; பரவச அனுபவம் தரும் ஆன்மிகத் தலம். பல்லாயிரம் ஆண்டுகளாக இந்த சதுரகிரி சித்தர்களின் பூமியாக உள்ளது.

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்ற கிராமம் உள்ளது.இங்கிருந்து 15 கிலோ மீட்டர் பயணித்தால் தாணிப்பாறை என்ற மலையடிவாரப்பகுதி உள்ளது.இதுதான் சதுரகிரியின் நுழைவாசல்.இங்கிருந்து 5 மைல்கள் தூரம் அடர்ந்த காட்டுப்பாதையில்(சாலை வசதி கிடையாது.பாதை கரடு முரடானது)பயணித்தால் சதுரகிரியை அடையலாம்.

சதுரகிரி உச்சிக்கு செல்ல மூன்று பாதைகள் இருந்தாலும் தாணிப்பாறை பாதையே பக்தர்களுக்கு உகந்தது. எனினும் இவ்வழியே பயணப்படுவோர் பருவகாலச் சூழ்நிலையை அறிந்து தகுந்த முன்னேற்பாடுகளுடன் செல்வது நல்லது. மலைப்பாதையின் குறுக்கே சில ஆறுகளில் மழைக் காலத்தில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். எனவே மிகவும் கவனமாக செல்ல வேண்டும். கோடை காலம் தவிர மற்ற சூழ்நிலைகளில் மலைப்பகுதியில் குடிநீருக்கு அதிகம் சிரமம் இருக்காது எனினும் குடிநீர் கொண்டு செல்வது நல்லது. நான்கு அல்லது ஐந்து மலைகளை கடந்தே சதுரகிரியை அடையமுடியும். எனவே பாதையில் ஏற்ற இறக்கம் இருக்கும். நாவல் மரம், பலா மரம்,நெல்லி மரம், ஒரு யானையே ஒளிந்துகொள்ளலாம் போன்ற உடல் பருத்த பெருமரங்கள், வகைவகையான மூலிகைச் செடிகொடிகள், சித்தர்கள் வசித்த குகைகள், ஆங்காங்கே சலசலத்து ஓடும் ஓடைகள் இன்னும் எத்தனையெத்தனையோ அற்புதங்கள் நிறைந்த இடம்.

சிலிர்ப்பூட்டும் செங்குத்தான மலையில்,உச்சியில் கோயில் கொண்டிருக்கிறார் சுந்தர மகாலிங்க சுவாமி. ஒருமுறை தரிசித்தாலே நமது உள்மனத்தில் குடிகொண்டுவிடுகிறார்.

மகாலிங்கரைத் தரிசிக்க நடையாகத்தான் மலையேறிச் சென்றாக வேண்டும். வேறு வழியில்லை. காரோ, கட்டை வண்டியோ,அவ்வளவு ஏன், ஹெலிகாப்டரில்கூட சென்று இறங்க முடியாது.

சித்தர்களின் தலைமைப்பீடம் சதுரகிரி என்கிறார்கள்.எண்ணற்ற சித்தர்கள் பலர் சதுரகிரி மலையில் கூடி ஆன்மீக விவாதங்கள் நடத்துவது உண்டாம்.இதற்கென அவர்கள் பயன்படுத்தும் குகைகள் பிரமிப்பை ஏற்படுத்தும் வண்ணம் காணப்படுகின்றன.சித்தர்கள் ஏற்படுத்திய தீர்த்தங்கள் இன்றைக்கும் இருக்கின்றன. சித்தர்கள் வசித்த குகைகளில் மனிதர்களால் செல்ல இன்றளவும் இயலாத ஒன்றாகவே உள்ளது.

மனித நேயம் அறிந்த மனிதனே மகான்/சித்தன் ஆகிறான்.பின்னாளில் சிவம்/தெய்வமும் ஆகின்றான்.

வான்மீகி, கோரக்கர், கமலமுனி, சட்டைமுனி, அகத்தியர், சுந்தரானந்தர், கருவூரார், அகப்பைச்சித்தர்,கொங்கணர், தன்வந்திரி, பாம்பாட்டிச்சித்தர், இராமதேவர், இடைக்காட்டுச்சித்தர், திருமூலர், போகர், அழுகுணிச்சித்தர், காலாங்கிநாதர், மச்சமுனி,ஆகியோர் பதிணென் சித்தர்கள் எனப்படுவர். 18 சித்தர்களும் சேர்ந்து ஒரே சந்நிதியில் காட்சி தருவது சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே. வருடத்துக்கு ஒருமுறை இந்த சித்தர்களுக்கு விஷேச பூசை நடைபெறும். சித்தர் சட்டநாதர் வாழ்ந்த குகையை இப்போதும் இங்கு காணலாம். சந்தன மகாலிங்கம் சந்நிதியில் இருந்து மிகஅருகில் அமைந்திருக்கிறது இந்த குகை. சதுரகிரியில் சந்தன மகாலிங்கம் சந்நிதியில் மகாசிவராத்திரியின் போது பக்தர்கள் தங்கள் கைகளாலேயே புஷ்பங்கள் சமர்பித்து சந்தன மகாலிங்கத்தை வழிபடலாம். மகாசிவராத்திரியின் போது இங்கு நான்கு கால பூஜைகள் நடைபெறும். ஒவ்வொரு காலம் முடிந்ததும் பக்தர்கள் வரிசையில் சென்று இறைவனை தரிசிக்கலாம். சந்தன மகாலிங்கம் கோயிலில் மட்டுமே அம்பாளுக்கு தனிசந்நிதி உண்டு.

தன்னை தரிசிக்க வரும் எவரையும் எந்தவித சிரமத்திற்கும் உள்ளாக்குவதில்லை மகாலிங்க ஸ்வாமிகள். மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லும் போது வழி மாறி செல்லாமல் இருக்க பைரவர்கள்(நாய்கள்) பக்தர்களை பார்த்து வாலாட்டிவிட்டு "என் பின்னாலே வா." என்பது போல் வழிகாட்டிக்கொண்டே செல்லும். பக்தர்கள் சற்று ஓய்வு எடுக்கலாம் என்று நினைத்து உட்காரும் போது நாய்களும் ஒரி இடத்தில் உட்காருகின்றன. நாம் எந்திரித்து நடக்க ஆரம்பித்தவுடன் நாய்களும் நமக்கு வழிகாட்டியாக எந்திரித்து நடக்க ஆரம்பிக்கின்றன.

அனைவரும் சென்று தரிசிக்க வேண்டிய ஒரு புனிதமான இடம்.

புரட்டாசி சனி விரதம்



தமிழ் மாதங்கள் பன்னிரண்டில் ஆறாவது மாதமான புரட்டாசிக்கு தனி மகிமை உண்டு. இது காக்கும் கடவுளான மகாவிஷ்ணுவுக்கு உகந்த மாதமாகும். ஒவ்வொரு மாதத்திலும் விரதநாட்கள் இருந்தாலும் புரட்டாசி முழுவதும் விரதநாட்கள்தான். சனி விரதம், நவராத்திரி விரதம் என தினம் தினம் திருவிழா கோலம்தான். திருமாலை சனிக்கிழமையில் வழிபடுவது மிகவும் சிறப்பென்கின்றனர் பெரியோர்கள். அதுவும் புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட்டால் எல்லாவிதமான கஷ்டங்களும் நீங்கி வளமான வாழ்வு கிட்டும் என்பது இந்து மதத்தின் மரபு வழி நம்பிக்கை.

கன்னி ராசியில் சூரியன்

ஒன்பது கோள்களில் ஒன்றான புதன் கிரகத்திற்கு உரிய மாதங்களில் புரட்டாசியும் ஒன்று. புதனின் அதி தேவதையாக இருப்பவர் மஹாவிஷ்ணு. எனவேதான் விஷ்ணுவின் அருள்பெற உகந்த மாதமாக புரட்டாசி திகழ்கிறது. பெருமாளின் அம்சமாக கருதப்படும் புதனுடைய வீடு கன்னி. இந்த கன்னி ராசியில் சூரியன் அமர்வது புரட்டாசி மாதத்தில்தான். ஆகவே இந்த மாதத்தில் பெருமாளுக்கு வேண்டிய பஜனைகள் பிரம்மோற்சவங்கள் நடைபெறுகின்றன. புதனுக்கு நட்பு கிரகம் சனிபகவான். அதனால்தான் புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமைகள் விஷேசமாக கொண்டாடப்படுகிறது.

எமபயம் நீக்க வழிபாடு

புரட்டாசி மாதத்தை எமனின் கோரைப் பற்களுள் ஒன்றாக அக்னி புராணம் குறிப்பிடுகிறது. எமபயம் நீங்கவும், துன்பங்கள் விலகவும் புரட்டாசி மாதத்தில் காத்தல் கடவுளான விஷ்ணுவை வணங்குவது சிறப்பு. ஒவ்வொரு மாதமும் சனிக்கிழமைகளில் விரதம் கடைப்பிடிப்பது நல்லது. அப்படி விரதத்தினை மேற்கொள்ள முடியாதவர்கள், புரட்டாசி சனிக்கிழமைகளில் அவரவர் குடும்ப வழக்கப்படி மாவிளக்கு ஏற்றி, பெருமாளுக்குப் பூஜை செய்து வழிபட்டு, முடிந்த அளவு அன்னதானம் செய்து வந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும்.
சனிக்கிழமைகளில் பொதுவாக பெருமாளுக்கு விரதமிருப்பது வழக்கம் தான். இதில், புரட்டாசி மாத சனிக்கிழமைக்கென ஒரு விசேஷம் இருக்கிறது. புரட்டாசி சனிக்கிழமையில் தான் சனிபகவான் அவதரித்தார். அதன் காரணமாக, அவரால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது வழக்கத்தில் வந்தது. இந்த விரதத்தின் மகிமையை விளக்க கதை ஒன்று கூறப்படுகிறது.

மண் சட்டியில் நிவேதனம்

பெருமாள் கோயில்களில் மிக உயர்ந்ததாக கருதப்படுவது திருப்பதி வெங்கடாசபதி கோயில். இங்கு பீமன் என்ற குயவர் வசித்துவந்தார். இவர் பெருமாள் பக்தர். ஆயுள் முழுவதும் சனிக்கிழமை விரதம் இருப்பதாக சங்கல்பம் எடுத்துக் கொண்டவர். ஆனால், இவரது ஏழ்மையின் காரணமாக எந்நேரமும் தொழிலில் மூழ்கிக் கிடப்பார்.
சனிக்கிழமைகளில் கோயிலுக்கு போக நேரம் இருக்காது. போனாலும் பூஜை முறையும் தெரியாது. தப்பித்தவறி போனால், பெருமாளே, நீயே எல்லாம் என்ற வார்த்தையை மட்டும் சொல்லிவிட்டு வந்து விடுவார். ஒருமுறை மனதில் ஒரு எண்ணம் உதித்தது. பெருமாளைப் பார்க்க கோயிலுக்கு போக நேரமில்லை. பெருமாளை இங்கேயே வரவழைத்தால் என்ன என்று யோசித்தார். படபடவென களிமண்ணால் ஒரு சிலையைச் செய்தார். பூ வாங்குமளவுக்கு அவரிடம் பணம் கிடையாது. எனவே, தான் வேலை செய்து முடித்த மீந்து விடும் மண்ணை சிறு சிறு பூக்களாகச் செய்து அதைக் கோர்த்து சிலையின் கழுத்தில் போட்டு வணங்கி வந்தார். அவ்வூர் அரசர் தொண்டைமானும் பெருமாள் பக்தர். அவர், சனிக்கிழமைகளில் தங்கப்பூ மாலை ஒன்றை அணிவிப்பார்.
ஒருமுறை இப்படி அணிந்து விட்டு, மறுவாரம் வந்தார். பெருமாளின் கழுத்தில் மண் பூ மாலை தொங்கியது. பட்டர்கள் தான் ஏதாவது தவறு செய்கிறார்களோ என குழப்பத்தில் சென்றார். அன்று கனவில் தோன்றிய பெருமாள், நடந்ததைச் சொன்னார். அந்த குயவரின் இல்லத்திற்கு நேரில் சென்ற அரசர், அவருக்கு வேண்டிய அளவு பொருளுதவி செய்தார். அப்பொருளைக் கண்டும் மயங்காமல், பெருமாள் பணியே செய்து வந்த குயவர் இறுதிக்காலத்தில் வைகுண்டத்தை அடைந்தார். பெருமாளின் ஆணைப்படி, அந்த பக்தரைக் கவுரவிக்கும் வகையில் இப்போதும், திருப்பதி ஏழுமலையானுக்கு மண்சட்டியில்தான் நைவேத்யம் செய்யப்படுகிறது.
புரட்டாசி மாதத் திருவோணம், திருப்பதி மலையப்ப சுவாமி தன்னை வெளிப்படுத்திக் கொண்ட தினம் என்றால், புரட்டாசி சனிக் கிழமையிலோ சனிபகவான் அவதரித்து புரட்டாசிக்கு முக்கியத்துவம் தந்துவிட்டார். அதன் காரணமாக சனிபகவானால் ஏற்படும் கெடுபலன்கள் குறைய, காக்கும் கடவுளான திருமாலை வணங்குவது மரபாகிவிட்டது. இதற்காகத்தான் புரட்டாசி சனி விரதத்தை பக்தர்கள் வழி வழியாக கடைபிடிக்கின்றனர்.

Thursday, September 18, 2014

5 விதமான தோஷங்கள்

இவை ஆண்களுக்கு பெண்களுக்கும் ரெண்டு பேருக்கும் பொருந்தும் தோச பரிகாரங்கள்
ஒரு மனிதனுக்கு வாழ்க்கையில் 5 விதமான தோஷங்கள் ஏற்படலாம் என்று ஆதி தமிழர்கள் கணித்து எழுதிவைத்துள்ளனர். ஒருவர் செய்யும் பாவங்கள், தவறுகள் எல்லாம் இந்த 5 வகை தோஷத்துக்குள் வந்து விடுகிறது.
 அந்த தோஷங்கள் 1.வஞ்சித தோஷம், 2.பந்த தோஷம், 3.கல்பித தோஷம் 4.வந்தூலக தோஷம் 5.ப்ரணகால தோஷம் எனப்படும்.

1.வஞ்சித தோஷம்

பார்க்கக் கூடாத படங்கள், வெறிïட்டும் காட்சிகள் காம சிந்தனைகள் உடலில் சூட்டை உண்டாக்கி, அவை பித்த நாடிகளைப் பாதிக்கச் செய்கிறது. இது உடலில் பல வியாதிகளை உண்டாக்குகிறது. இதற்கு வஞ்சிததோஷம் எனப்பெயர். உடன் பிறந்த சகோதரிகளை வணங்கி அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்ய வேண்டும். சகோதரிகள் இல்லாதவர்கள் ஏழைப் பெண்களுக்குத் தானம் அளிக்க வேண்டும். இவ்வாறு செய்தால் வஞ்சித தோஷம் விலகிவிடும்.

2.பந்த தோஷம்: 

நம்மை நம்பி பழகியவர்களுக்குத் துரோகம் செய்வது அல்லது பழிவாங்குதல் பந்த தோஷமாகும். இந்த தோஷத்துக்கு தந்தை, தாய் வழிகளில் உள்ள மாமா, அத்தை, சித்தப்பா, பெரியப்பா ஆகியோருடைய பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் பந்த தோஷம் விலகும்.

3. கல்பித தோஷம்: 

பிறர் தன்னை விரும்புவதாக எண்ணிக் கொண்டு முறை தவறிப் பழகுதல் கல்பித தோஷமாகும். இத்தகைய தோஷம் ஏற்பட்டால் தன்னை விட வயதில் மூத்த பெண்களுக்குத் தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் கல்பித தோஷம் உடனடியாக விலகி விடும்.

4.வந்தூலக தோஷம்: 

ஒருவர் தன்னைவிட வயது அதிகமுள்ள பெண்ணை திருமணம் செய்தால், அவருக்கு சுவாசக் கோளாறுகள், நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படலாம். இவ்வாறு உருவாகும் தோஷத்திற்கு வந்தூலக தோஷம் எனப்படும். வந்தூலக தோஷம் நீங்க வேண்டுமானால் வயதான தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். வேஷ்டி, புடவை, துண்டு, ரவிக்கைத் துணி ஆகியவற்றைத் தானமாக வழங்க வேண்டும். அறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்ச் சோலைத் தலத்திற்குச் சென்று முருகனைத் தரிசித்துப் பின் ஏழைத் தம்பதிகளுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும்.

5. ப்ரணகால தோஷம்: 

திருமணப் பொருத்தங்கள் பார்க்காமல், பணம், புகழ், அந்தஸ்து, பதவி ஆகியவற்றுக்கு ஆசைப்பட்டு ஒருவர், திருமணம் செய்து கொண்டால், அவருக்கு ப்ரணகால தோஷம் ஏற்படும். இதனால் வாழ்க்கையில் பிடித்தம் இல்லாத நிலை காணப்படும். இந்த தோஷத்தை தவிர்க்க வேண்டுமானால் அனாதை விடுதியியில் உள்ள பெண்களுக்குத் தான தர்மங்கள் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் ப்ரணகால தோஷங்கள் நிவர்த்தியாகும்.

தாலி கட்டுவது ஏன்...?



தமிழர்களின் திருமண சடங்குகளில் செய்யப்படும் ஒவ்வொரு காரியங்களுக்கும் வலுவான காரணங்கள் உண்டு உதாரணமாக அம்மி மித்திப்பது நான் கற்பு தன்மையில் அம்மியை போல் அதாவது கல்லை போல் உறுதியாக இருப்பேன் என்றும் அருந்ததி பார்ப்பது பகலில் நட்சத்திரத்தை பார்ப்பதற்கு எவ்வளவு விழிப்புணர்வு வேண்டுமோ அதே போன்று விழிப்புணர்வோடு என் குடும்ப கெளரவத்தை காப்பாற்றவும் இருப்பேன் என்றும் பொருளாகும்
திருமண சடங்கில் அக்னி வளர்ப்பது திருமணம் முடித்து கொள்ளும் நாம் இருவரும் ஒருவர்க்கொருவர் விசுவாசமாகவும் அன்யோன்யமாகவும் இருப்போம் உன்னை அறியாமல் நானும் என்னை அறியாமல் நீயும் தவறுகள் செய்தால் இந்த நெருப்பு நம் இருவரையும் சுடட்டும் இருவரின் மனசாட்சியையும் சுட்டு பொசுக்கட்டும் என்பதாகும்
அதே போன்ற அர்த்தம் தான் கல்யாண வீட்டில் வாழை மரம் கட்டுவதில் இருக்கிறது வாழை மரம் வளர்ந்து குலைதள்ளி தனது ஆயுளை முடித்து கொள்ளவேண்டிய நிலைக்கு வந்தாலும் கூட அடுத்ததாக பலன் தருவதற்கு தனது வாரிசை விட்டு செல்லுமே அல்லாது தன்னோடு பலனை முடித்து கொள்ளாது எனவே திருமண தம்பதியரான நீங்கள் இருவரும் இந்த சமூதாயம் வளர வாழையடி வாழையாக வாரிசுகளை தந்து உதவ வேண்டும் என்பதே வாழைமரம் கட்டுவதின் ரகசியமாகும்.
உலக முழுவதும் உள்ள திருமண சடங்கு முறையில் திருமணம் ஆனதற்கான அடையாள சின்னங்களை அணிந்து கொள்வது முறையாகவே இருந்து வருகிறது அதாவது மனித திருமணங்கள் அனைத்துமே எதோ ஒருவகையில் நான் குடும்பஸ்தன் என்பதை காட்ட தனிமுத்திரை இடப்படுவதாகவே இருக்கிறது. அப்படி உலகம் தழுவிய வழக்கங்களில் ஒன்று தான் தாலிகட்டும் பழக்கமாகும் சங்ககாலத்தில் தாலி என்ற வார்த்தை இலக்கியங்களில் அதிகமாக பயன்பாட்டில் இல்லை என்பதற்காக பழங்கால தமிழன் தாலி கட்டாமல் வாழ்ந்தான் என்று சொல்வதற்கு இல்லை
தாலி என்ற வார்த்தை தான் இல்லையே தவிர இதே பொருளை கொண்ட மங்கலநாண் என்ற வார்த்தை இலக்கியங்கள் பலவற்றில் காணப்படுகிறது. ஒரு காலத்தில் அரசியல் கூட்டங்களில் சிலப்பதிகாரத்தில் கோவலன் கண்ணகி திருமண சடங்கில் இளங்கோவடிகள் தாலிகட்டுவதை பற்றி பேசவே இல்லை அதனால் தமிழர் திருமணங்களில் தாலியே இல்லை என்று முழங்கி கொண்டு அலைந்தனர். ஆனால் அவர்களே மங்கள் வாழ்த்து படலத்தில் மங்கல அணி என்ற வார்த்தைக்கு என்ன பொருள் என்றே அறியாமல் போய்விட்டனர்
“முரசியம்பின, முருடதிர்ந்தன, முறையெழுந்தன பணிலம்,வெண்குடை
அரசெழுந்ததோர் படியெழுந்தன, அகலுள்மங்கல அணியெழுந்தது”'''
என்று இளங்கோ அடிகள் மிக அழகாக சொல்கிறார். அதாவது திருமண நேரத்தில் முரசுகள் ஒலிக்கின்றன வெண்குடை உயர்கிறது வாழ்த்துக்கள் முழங்குகின்றன மங்கல அணி எழுத்து போல் பதிகிறது என்பது இதன் பொருளாகும்
ஆண் பெண்ணை அடிமையாக்குவதோ பெண் ஆணை அடிமையாக்குவதோ சமூதாய பிரச்சனையே தவிர அது சடங்கு பிரச்சனை அல்ல தமிழர் சடங்கில் எந்த இடத்திலாவது நீ தாலி அணிந்திருக்கிறாய் அதனால் எனக்கு நீ அடிமை என்ற வாசகம் கிடையவே கிடையாது.
உணமையாக தாலி அணிவதன் பொருள் ஆண்மகனான நான் உன் கழுத்தில் திருமாங்கல்யத்தை அணிவிக்கும் இந்த நேரம் முதல் உன்னை பாதுகாக்கும் காவலனாக இருப்பேன் இந்த மாங்கல்யத்தில் நான் போடும் முதல் முடிச்சி நீ தெய்வத்திற்கும் மனசாட்சிக்கும் கட்டுப்பட்டவள் என்பதை காட்டட்டும் இரண்டாவது முடிச்சி குலபெருமையை நீ பாதுகாப்பாய் என்பதை காட்டட்டும் மூன்றாவது முடிச்சி குலவாரிசுகளை முன்னின்று காப்பவள் நீயென்று காட்டட்டும் என்பதாகும்.
தமிழர்களின் திருமண சடங்குகள் அனைத்துமே ஆணையும் பெண்ணையும் சமமாக பாவித்தே இருக்கிறதே தவிர ஏற்ற தாழ்வு கற்பிக்கும் படி எதுவும் கிடையாது . உண்மைகளை கண்டறிய வேண்டியது தான் உயர்ந்த மனிதர்களின் உன்னத நோக்கமாகும்.
நீங்கள் எப்போதும் உயர்ந்ததையே பாருங்கள் உயர்ந்ததாக சிந்தியுங்கள் உங்கள் வாழ்வும் உயர்ந்ததாக இருக்கும் அதை விட்டு விட்டு ஆகயாத்தில் பறக்கின்ற கழுகு தான் எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதை மறந்து கீழே பூமியில் கிடக்கும் அழுகிய மாமிசத்தை பார்ப்பது போல் தாழ்மையான கருத்துக்களை பார்க்காதீர்கள் தாழ்வான சிந்தனைகளை காது கொடுத்து கேட்காதிர்கள் உயர்ந்தவர்கள் எப்போதும் உயர்ந்ததையே காண்பார்கள்

உயர்வு தரும் பௌர்ணமி பூஜை

பௌர்ணமி தினங்களில் அம்பிகை வழிபாடு மிகவும் சிறப்பானது என்று சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். ஸ்ரீசக்ர நாயகியான ஆதிபராசக்தி பதினாறு (16) நித்தியையாக மகா திரிபுரசுந்தரியாக பூரண ஒளியுடன் பௌர்ணமியன்று காட்சி தருவதாக புராணங்களும் சாத்திரங்களும் கூறுகின்றன.

ஒளிமயமான அன்னை தேவி பராசக்தியை, இந்த ஒளிமயமான பௌர்ணமி தினத்தில் பூசைகள் செய்து வழிபாடு செய்யும் போது அன்னையின் பரிபூரண அருள் கிடைக்கப்பெற்று விசேடமான பலன்கள் நமக்கு கிடைக்கிறது. கிரங்களின் அதிர்வு பெற்ற நாள் பௌர்ணமி நாளாகும். ஏழு கிரகங்களிற்குரிய நாட்கள் சேரும்போது ( ஞாயிறு திங்கள் என்று எந்த நாளில் பௌர்ணமி வருகிறதோ ) அதற்கேற்ப மனிதனின் அறிவு, புத்தி, மனம் மற்றும் சரீரத்திலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன. பௌர்ணமியில் தேவி ‘ஸ்ரீசந்திரிகா’ என்ற பெயர் கொண்டு பிரகாசித்து அருள்பாலிக்கிறார். துர்க்கா தேவியை பௌர்ணமியில் முறைப்படி வழிபட்டு வந்தால் நாம் விரும்பியதெல்லாம் நிறைவேறும். துர்க்கையென்றால் துக்கங்களை அழிப்பவள் ஆகும்.

ஒவ்வொரு கிழமைநாட்களிலும் வரும் பௌர்ணமியில் அம்பிகையை எவ்வாறு வழிபட்டால் சிறப்பான பலன் கிட்டும் என்று சித்தர்கள் கூறியவற்றில் இருந்து சிலவற்றைக் கீழே தருகிறோம்.
ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு சிகப்பு ஆடை அணிவித்து, செந்தாமரை மலர்கள் சூட்டி, செந்தாமரை மலர்களால் அர்ச்னை செய்யவேண்டும். செவ்வாழைப்பழம், சர்க்கரைப் பொங்கல் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அவ்வாறு வழிபடும் போது தீராத நோய்கள் எல்லாம் தீரும். இப்படி பூசை செய்பவரை எந்த நோயும் அணுகாது.

திங்கட்கிழமைகளில் வரும் பௌர்ணமியன்று அம்பிகைக்கு ஒரேஞ் (Orange ) நிற ஆடையணிவித்து, மந்தாரை, மல்லிகை மலர்கள் சாற்றி, இதே மலர்களினால் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். இவ்வாறு வழிபடும் போது சகல ஐஸ்வர்யங்களும் கிட்டும். செய்யும் தொழிலில் உயர்வு, வேலை வாய்ப்பு கிட்டும்.

செவ்வாய்க்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அம்பாளிற்கு வெண் பட்டாடை அணிவித்து, செவ்வரளி பூ, சிகப்பு நிற பூக்களினால் அர்ச்சனை செய்து, சித்திரான்னம், தேன், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். இதனால் வறுமை நீங்கும். கடன்கள் தீரும். கிரக தோசங்கள், பில்லி, சூனியம் தீரும்.

புதன்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் பச்சை பட்டாடை அணிவித்து, முல்லை, நறுமணமுள்ள மலர்கள் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சனையும் செய்து, பால்பாயாசம், பழரசங்கள், பஞ்சாமிர்தம் நிவேதனமாக படைத்து வழிபடவேண்டும். அறிவு வளரும், கல்வியில் அளப்பரிய முன்னேற்றம் கிட்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். சந்தான விருத்தி கிட்டும்.

வியாழக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தில் அம்பிகைக்கு மஞ்சள் நிற ஆடை அணிவித்து, மஞ்சள் நிற (பொன் நொச்சி, பொன்னரலி) நறுமணமுள்ள மலர்களால் அலங்கரித்து, அதே மலர்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். சுண்டல், தயிர்ச்சாதம், பழங்கள் நிவேதனமாக படைத்து வழிபட வேண்டும். வேலையில்லாதவர்களிற்கு வேலை கிடைக்கும். வேலையில் உள்ளவர்களிற்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமணத் தடைகள் நீங்கும். சகல விதமான தடைகளும் நீங்கும். தேர்வுகளில் வெற்றி கிட்டும்.

வெள்ளிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி நாட்களில் அமபிகைக்கு பொன்னிற ஆடை அணிவித்து, மல்லிகை மலர்கள் சூட்டி, மல்லிகை மலர்களால் அர்ச்சனை செய்து, முக்கனிகள், கல்கண்டு, பொங்கல் நிவேதனமாக வைத்து வழிபடவும். திருமணத் தடைகள் நீங்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்று சேர்வர். பணவரவு அதிகரிக்கும். வராக்கடன் வரும்.

சனிக்கிழமைகளில் வரும் பௌர்ணமி தினத்தன்று அம்பாளிற்கு நீலநிற ஆடை அணிவித்து, மருக்கொழுந்து, நீலநிற காக்கணம் (சங்குப்பூ) சாற்றி, அதே மலர்களால் அர்சித்து, காய்கறிகள், எள் அன்னம், பால், தேன் தயிர், நெய், கற்கண்டு நிவேதனமாக படைத்து வழிபடவும். நவக்கிரக தோசம் நீங்கும். கடன் தீரும். நோயில்லா வாழ்வு கிட்டும்.

பௌர்ணமி தினத்தில் பூரண பக்தியுடன் முறைப்படி பூசை செய்து வழிபாடு செய்பவர்கள் கிரக தோசங்களில் இருந்து விடுபட்டு நிம்மதியான, ஆரோக்கியமான வாழ்வு வாழலாம்.