Wednesday, September 3, 2014

அதிகாரத்திற்கு வளையாத இறைவன் அடியவருக்கு வளைந்த கதை!



தூய்மையான, தன்னலமற்ற பக்திக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்கள் நாயன்மார்கள். நம் மண்ணில் நம்மிடையே  வாழ்ந்து மறைந்தவர்கள். எத்தனை சோதனை வந்தாலும் தாங்கள் எடுத்துக்கொண்ட தொண்டிலும், கடமையிலும் பக்தியிலும் குறை வைக்காதவர்கள். சிவனடியாரும் சிவனும் வேறு வேறு அல்ல என்று கருதி, அடியார்களையே இறைவனாக தொழுதவர்கள்.
வேதத்தை முழுவதும் கற்று ஓதுவதற்கு இணையானது இவ்வடியார்களின் வரலாற்றை படிப்பது.
இன்று ஆவணி மூலம். குங்கிலயக் கலய நாயனாரின் குருபூஜை. அவர் இறைவனோடு இரண்டறக் கலந்த நாள். இந்நன்னாளில் அவரது புனித வரலாற்றை பார்ப்போம்.
காவிரி பாயும் சோழவளநாட்டில் திருக்கடவூர் என்ற ஒரு தலம் உண்டு. அது சிவபெருமானின் வீரம் வெளிப்பட்ட அட்ட வீரட்ட தலங்களில்  ஒன்று.
அட்ட வீரட்ட தலங்கள் முறையே 1) திருக்கண்டியூர் பிரமன் சிரம் கொய்தது. 2) திருக்கோலூர் அந்தகாசுரனை அழித்தது. 3) திருவதிகை திரிபுரத்தை எரித்தது 4) திருப்பரியலூர் தக்கன் சிரம் கொய்தது. 5) திருவிற்குடி கவந்தராசுரனை வதைத்தது 6) வழுவூர் யானையை உரித்தது 7) திருக்குறுக்கை காமனை அழித்தது 8) திருக்கடையூர் எமனை உதைத்தது.
இதில் கடைசியாக உள்ள திருக்கடையூரில் மறையவர்கள் சிறந்து வாழ்வார்கள். அவர்களுள் கலயனார் என்ற பெரியார் ஒருவர் இருந்தார். அவர் சிவனடிபேணும் சிறந்த அன்புடையவர். நல்லொழுக்கத்திற் சிறந்தவர். அத்தலத்தே எழுந்தருளியிருக்கும் அமிர்தகடேஸ்வரருக்கு, பாலன் மார்கணடருக்காகக் காலனை காலால் உதைத்த கருணையை நினைத்து, ஆலய விதிப்படி தினமும் தூபம் இடும் திருப்பணியை செய்து வந்தார். ஆதலால் அவரைக் குங்கிலயக்கலயர் என்று ஊரார் அழைத்தனர்.
எந்த சூழலிலும் தனது குங்கிலியம் இடும் தொண்டை நிறுத்தாத இவரது பெருமையை உலகறியச் செய்ய திருவுளம் பூண்ட இறைவன்,  இவருக்கு கடும் வறுமையை ஏற்படுத்தினான். அதன் பின்னரும் அத்திருப்பணியை வழுவாது செய்து வந்தார். வறுமை மிகவே தமது நிலம் தோட்டம் துரவு என அனைத்தையும் விற்றுப் பணிசெய்தார்.
வறுமை மேலும் பெருக தாமும், மனைவி, மக்களும் சுற்றமும் இரண்டு நாள் உணவின்றி வருந்தினார்கள். இது கண்ட அவரது துணைவியார், தனது தாலிக்கயிற்றை கழட்டிக் கொடுத்து, “இதை கொண்டு உணவு சமைக்க நெல் வாங்கி வாருங்கள்” என்று அனுப்பினார்.
அதனைக் கொண்டு அவர் நெல்கொள்ளச் சென்றபோது எதிரில் ஒரு வணிகன் ஒப்பில்லாத குங்கிலியப் பொதியை சுமந்துகொண்டு வந்தான். அதனை அறிந்த கலயனார் “இறைவனுக்கேற்ற மணமுடைய குங்கிலியம் இதுவாயின் இன்று நல்ல பேறு பெற்றேன். பெறுதற்கரிய இப்பேறு கிட்ட வேறுகொள்ளத்தக்கது என்ன உள்ளது?” என்று துணிந்து பொன் பெற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியினைத் தருமாறு வணிகனைக் கேட்டார். அவனும் மகிழ்ந்து அவர் தந்த தாலியைப் ஏற்றுக்கொண்டு குங்கிலியப் பொதியை கொடுத்துச் சென்றான். கலயனார் சிந்தை மகிழ்வுடன் விரைந்து சென்று கோயிற் களஞ்சியத்தில் அப்பொதியின் குங்கிலியத்தைச் சேமித்து வைத்தார். மனைவி மக்கள் அங்கே பசித்திருப்பதை மறந்து தூபத் திருப்பணி செய்துகொண்டு சிவசிந்தையுடன் அங்கேயே தங்கினார்.
அன்று இரவு மனைவியாரும், மக்களும் பசியால் மிகவருந்தி இவர் வருகையை எதிர்பார்த்து ஏமாந்து பின்னர் தண்ணீரை அருந்திவிட்டு அயர்ந்து தூங்கினர். அப்போது இறைவனுடைய கட்டளைப்படி குபேரன் தனது செல்வத்தைப் பூமியில் கொண்டுவந்து நிறைத்து கலயனாரது வீடு முழுவதும் பொற்குவியலும் நெற்குவியலும் அரிசி முதலிய பிற எல்லா வளங்களுமாக குவித்தான்.
இதனை இறைவன் அம்மையாருக்குக் கனவில் தோன்றி உணர்த்த, அவர் எழுந்து செல்வங்களைப் பார்த்தார். அவற்றை இறைவரின் அருள் என்று கண்டு கைகூப்பித் தொழுதார். தனது கணவருக்கு திருவமுது சமைக்கத் தொடங்கினார்.
திருக்கோயிலில் இருந்த கலயனார்க்கு “நீ பசியோடு இருக்கிறாய்… உடனே உன் வீட்டுக்கு சென்று அமுதுண்டு பசி நீங்குக!” என்று என்று இறைவர் கட்டளை இட்டு அருளினார். அத்திருவருளை மறுப்பதற்கு அஞ்சிக் கலயனார் வீட்டுக்கு வந்தார். தன் வீடு முழுக்க செல்வம் குவிந்திருப்பதை  கண்டு, மனைவியிடம் விசாரித்தார். அவர் “திருநீலகண்டராகிய எம்பெருமானது அருள்” என்றார். கலயனார் கைகூப்பி வணங்கி “என்னையும் ஆட்கொள்ள எம்பெருமான் திருவருள் இருந்தபடி இதுவோ? என்று துதித்தார்.
இவ்வாறு இறைவரருளால் உலகில் நிறைந்த செல்வமுடையவராகி அடியவர்களுக்கெல்லாம் நல்ல இனிய அமுதூட்டியும் உதவியும் வாழ்ந்திருந்தனர்.
இந்நாளில் திருப்பனந்தாளில் வீற்றிருக்கும் சிவலிங்கத் திருமேனி, தாடகை என்ற அரச குமாரிக்கு அருளும் பொருட்டு சாய்ந்தது. சாய்ந்தவாறே இருந்தது. அதனைச் சாய்வுபோக்கி கண்டு கும்பிட வேண்டுமென்று ஆசை கொண்ட சோழமன்னன் யானைகளையும் சேனைகளையும் பூட்டித் திருமேனியினை நிமிரப்பண்ண முயன்றான். ஆனாலும் இறைவன் நிமிரவில்லை. யானைகளும் இளைத்து வீழ்ந்தன. அரசன் மிகவும் கவலையோடிருந்தான். இதனைக் கேள்வியுற்ற கலநாயனார், நாதனைக் நேர்காணும் பணியில் நின்ற அரசனை விரும்பித் திருக்கடவூரிளிருந்து நேராக திருப்பனந்தாள் சென்றார்.
இறைவனை நிமிர்த்த நடைபெற்ற முயற்சியில் சேனைகள் இளைத்து வீழ்ந்து எழமாட்டா நிலைகண்டு மனம் வருந்தினார். பொருளுக்கு உழைத்து இளைப்பதைவிட, இதுவன்றோ இளைப்பு… நானும் இந்த முயற்சியிலே பங்குகொண்டு இளைபுறவேண்டும் என்று துணிந்தார்.
நாரினால் கெட்டியாகக் கட்டப்பட்ட ஒரு மாலையை சிவனுக்கு அணிவித்தார். வளைந்திருந்த பக்கத்திற்கு எதிர்ப்புறத்தில் நின்று கொண்டார். தன் கழுத்தில் சுருக்குப் போட்டுக் கொண்டார். அந்தக் கயிற்றினை லிங்கத்துடன் கட்டினார். லிங்கத்தை நிமிர்த்த முயன்றார்.
யானைகளும் சேனைகளும் சேர்த்து இழுத்தபோதும் நிமிர மறுத்த இறைவனுக்கு தற்போது தர்மசங்கடம் ஏற்பட்டது. குங்கிலியக் கலயனார் சுருக்குக் கயிறாக இறைவனை கட்டியிருந்தமையால், இழுக்க இழுக்க சுருக்கு இறுகிக்கொண்டே வந்தது. இன்னும் கயிறு சற்று இறுகினால் போதும், கலயனார் மூச்சை நிறுத்திவிடுவார். கலயனாரின் அன்பும் வைராக்கியமும் ஆண்டவனை அசைத்தது. அதிகாரத்திற்கு வளையாத இறைவன் அடியவருக்கு வளைந்தான்.
நண்ணிய ஒருமை அன்பின் நார் உறு  பாசத்தாலே
திண்ணிய தொண்டர் கூடி இளைத்த  பின் திறம்பி நிற்க
ஒண்ணுமோ கலயனார்தம் ஒருப்பாடு  கண்டபோதே
அண்ணலார் நேரே நின்றார் அமரரும்  விசும்பில் ஆர்த்தார்’
என்கிறார் சேக்கிழார் பெருமான்.
மிகப் பெரும் சேனைகளை கட்டி இழுத்தபோது கூட நிமிராத சிவலிங்கம், இவர் கையிற்றை கட்டி இழுத்தபோது நிமிர்ந்தது. தேவர்கள் விண்ணில் ஆரவாரித்துப் பூமழை பெய்தனர். வாடியசோலை தலைமழை பெய்து தழைப்பது போல யானை சேனைகள் களித்தன. சோழ மன்னன் கலயனாரது பாதங்களில் வீழ்ந்து வணங்கி மேருவை வில்லாக வளைத்துப் புரமெரித்த கடவுளின் செந்நிலை காணச் செய்தீர்! திருமாலுங் காணாத மலரடியிணைகளை அன்புடைய அடியாரே அல்லலால் நேர்காண வல்லார் யார்? என்று துதித்தான். பின்னர் அரசன் இறைவர்க்குப் பிறபணிகள் பலவும் செய்து தனது நகரத்திற்குச் சென்றான். அரசன் சென்ற பின்னரும் கலயனார் சிலநாள் இறைவனை பிரிய ஆற்றாது அங்கு தங்கி வழிபட்டுப் பின் திருக்கடவூர் சேர்ந்தனர்.
திருக்கடவூரிலே தூபத்திருப்பணிசெய்திருக்கும் நாளில் ஆளுடைய பிள்ளையாரும் (சம்பந்தர்) ஆளுடைய அரசுகளும் அத்திருத்தலத்திற்கு ஒரு நாள் இறைவனை தரிசிக்க வருகை தந்தார்கள். மிக்க மகிழ்ச்சி பொங்கக் கலயனார் அவர்களை எதிர்கொண்டு அழைத்துவந்தார். தமது இல்லத்தில் அவர்களுக்கு இன்னமுது அளித்து வழிபட்டார். அதனால் அவர்களது அருள் மட்டுமின்றி  இறைவரது அருளும் பெற்றார். இவ்வாறு கலயனார் அரசனுக்கும், அடியவர்களுக்கும் ஏற்றனவாய்த் தமக்கு நேர்ந்த பணிகள் பலவும் செய்து வாழ்ந்திருந்து ஆவணி மூல நட்சத்திரத்தன்று சிவபெருமானது திருவடி நிழலிற் சேர்ந்தார்.
திருக்கடையூர் வாழ்நாளில் அனைவரும் ஒருமுறையேனும் தரிசிக்க வேண்டிய ஒரு அற்புதமான தலமாகும். அபிராம பட்டரின் வாக்கை மெய்ப்பிக்கும் பொருட்டு அன்னை அபிராமி தனது தாடகத்தை கழற்றி வீச, அது முழு நிலவாக ஜொலித்த வரலாறு உங்களுக்கு தெரிந்திருக்கும். 

Tuesday, September 2, 2014

எலுமிச்சை விளக்கேற்றும் முறை






ராகு கால துர்க்கா பூஜையில் முதலிடம் பெறுவது எலுமிச்சை பலி ஆகும். பழத்தை நறுக்கும்போது "ஐம்" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
மூடியை திருப்பும்போது "க்ரீம்" என்ற மந்திரத்தை சொல்ல வேண்டும். அதில் பஞ்சு திரியை இடவேண்டும்.
எண்ணெய் ஊற்றும்போது "க்லீம்" என்ற மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.
இந்தவிளக்கை துர்க்கையின் முன் வைத்து ஏற்றும்போது "சாமுண்டாய விச்சே" என்று சொல்லி தீபம் ஏற்ற வேண்டும். விளக்கேற்றிய பிறகு கோயிலை ஒன்பது அல்லது 21 முறை சுற்றிவர வேண்டும்.
ஐம் என்ற சொல் சரஸ்வதியையும், க்ரீம் என்ற சொல் லட்சுமியையும், க்லீம் என்ற சொல் காளியையும் குறிக்கும். சாமுண்டாய விச்சே என்ற சொல்லுக்கு சரஸ்வதி கடாட்சம், லட்சுமி கடாட்சம், காளி கடாட்சம் ஆகியவற்றை வழங்கும் தெய்வமே என பொருள்.
எலுமிச்சையின் மகிமை
ராகு காலத்தில் எலுமிச்சையை துர்க்காதேவிக்கு தீபம் ஏற்று பயன்படுத்துகிறார்கள். சூலாயுதங்களில் எலுமிச்சை குத்தப்படுகிறது. இதற்கு காரணம் எலுமிச்சை தேவ கனி என்பதால் ஆகும்.
மாம்பழத்தில் வண்டு குற்றம் உண்டு.
பலாவில் வியர்வை குற்றம் உண்டு.
வாழையில் புள்ளி குற்றம் உண்டு.
ஆனால் எலுமிச்சையில் மட்டும் இவ்வித குற்றங்கள் இல்லை.
மனிதனுடைய எண்ணங்களை ஈர்க்கும் சக்தி மற்ற கனிகளைக் காட்டிலும் எலுமிச்சைக்கு அதிகம் உண்டு.

குருநாதரைப் பற்றி நமக்கு அருணகிரிநாதர் இப்படிச் சொல்கிறார்.




அருணகிரிநாதர் சொல்லும் ஆசார்ய மகிமை
உலகத்தில் உள்ள அனைவருக்கும் செல்வத்தின் மீது ஆசை. அதே சமயம், செல்வம் சுலபமாக அதாவது கஷ்டப்படாமல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணமும் இருக்கிறது. இது நடக்கக்கூடிய காரியமா?
அழியக் கூடிய சொத்துக்கள் கிடைப்பதற்கே, பல பாடுகள் பட்டாக வேண்டி இருக்கிறது. ஆனால் அழியாத சொத்தான 'ஞானத்தை' நமக்கு அளிக்க வேண்டுமென்றால், அது யாரால் முடியும்?
குருவால் மட்டும்தான் முடியும். எந்த விதமான காரணமும் இல்லாமல் வெறும் கருணை மாத்திரத்தால் மட்டுமே, நமக்கு ஞானச் செல்வத்தை அள்ளித்தரும் குருநாதருக்கு 'அவ்யாஜ கருணாமூர்த்தி' என்றே ஒரு திருநாமமும் உண்டு.
இப்படிப்பட்ட குருநாதரைப் பற்றி நமக்கு அருணகிரிநாதர் சொல்கிறார். அவருடைய முதல் பாடல் 'முத்தைத்தரு' எனும் பாடல். அப்பாடலில்,
முத்தைத்தரு பத்தித்திருநகை
அத்திக்கிறை சத்திச் சரவண
முத்திக்கொரு வித்துக்குருபர எனவோதும்
முக்கட்பர மர்க்குச் சுருதியின்
முற்பட்டது கற்பித்து.............
என்கிறார்.
அருணகிரிநாதரின் வாக்குப்படி இவ்வார்த்தைகள் சிவபெருமானால் சொல்லப்பட்டவை. அதாவது, "முத்துக்களை வரிசையாக அடுக்கி வைத்ததைப் போன்ற பற்கள் சற்றே தெரியும் படியாகப் புன்முறுவல் பூக்கும் தெய்வானையின் கணவனே! சக்திச் சரவணா! முக்திக்கு ஆதாரமாக இருப்பவனே" என்றெல்லாம் சொல்லி அழைத்து, சிவபெருமான் உபதேசம் கேட்கிறார். மூன்று கண்கள் உடைய அவருக்குப் பிரணவ மந்திரத்தை உபதேசம் செய்து அதன் காரணமாகத் தகப்பன் ஸ்வாமி என்ற திருநாமத்தைப் பெற்றவர் - முருகப்பெருமான்.
முதல் பாடலிலேயே இவ்வாறு அரனுக்கும் ஆசார்ய புருஷராக இருந்த தகவலைச் சொல்லி, ஆறுமுகனைத் துதிக்கத் தொடங்கிய அருணகிரிநாதர், 'குடிவாழ்க்கை அன்னை' எனும் திருப்புகழில், "முருகா! நல்ல குடிப்பிறப்பு, நல்ல பெற்றோர்கள், நல்ல மனைவி, நல்ல பிள்ளை, ஏராளமான செல்வம் என எல்லாம் இருந்தும், குரு உபதேசமோ அவர் அருளோ இல்லாவிட்டால் என்ன பயன்? ஆகையால், சுடுகாட்டில் கொண்டு போய் என்னைச் சுட்டுக் கொளுத்து முன், குருவருளை நான் பெறவேண்டும். அதற்கு அருள் செய் ஆறுமுக வள்ளலே!" என முருகப் பெருமானிடம் வேண்டுகிறார்.
இப்பாடல், ஜகத்குருவான ஆதிசங்கரரின்,'சரீரம் சுரூபம்' என்னும் பாடலில் எதிரொலி போலத் தோன்றுகிறது.
"அழகான உடல், உயர்ந்த உறவுகள், அளவிலாத செல்வம், பெரும் புகழ் என எல்லாம் இருந்தாலும், மனதானது குருவின் பாத கமலங்களில் பற்று வைக்காவிட்டால், அவற்றால் என்ன பயன்?" என நான்கு முறைகள் கேட்டிருக்கிறார் ஆதிசங்கரர்.
சரீரம் சுரூபம் ததாவா களத்ரம்
யசச்சாரு சித்ரம் தனம் மேரு துல்யம்
மனஸ்சேன்ன லக்னம் குரோரங்க்ரி பத்மே
தத:கிம் தத:கிம் தத:கிம் தத:கிம்
(ஆதிசங்கரர்)
இந்த அருள்வாக்கை அப்படியே சொல்லி, ஆறுமுகனிடம் வேண்டுகிறார் அருண்கிரிநாதர். அவர் ஏன் வேண்ட வேண்டும்? நமக்கு அறிவுறுத்துவதற்காகத்தான்.
திருப்புகழின் முதல் பாடல் முதல் வரியிலேயே, குரு உபதேசத்தைச் சொல்லி, அதன்பிறகும் அதையே வலியுறுத்தி மற்றொரு திருப்புகழும் பாடி, அப்படியும், 'இது போதாது' என்று நினைத்து ஓர் உயிலும் எழுதி வைத்திருக்கிறார். கடைசிகாலத்தில் எழுதி வைக்கப்படுவது தானே உயில்! அந்த முறைப்படி அருணகிரிநாதர் கடைசியில் பாடி (எழுதி)யது கந்தர் அனுபூதி. அதிலும் கடைசிப் பாடல்,
உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்
கருவாய் உயிராய் கதியாய் விதியாய்
குருவாய் வருவாய்! அருள்வாய்! குகனே!
(கந்தர் அனுபூதி)
இப்பாடலின் கடைசி வரி 'குருவாய் வருவாய் அருவாய் குகனே' என்பது. இதன் விளக்கம் எல்லோருக்கும் தெரிந்தது தான். ஆனால் இப்பாடலுக்கு உண்டான பொருளைப் பார்க்கும் போது, வழக்கப்படிப் பார்க்கக் கூடாது. பாடலின் ஒவ்வொரு வார்த்தையும் - குருவாய் வருவாய் அருவாய் குகனே! என்பதுடன் சேர்த்துப் பார்க்க வேண்டும்.
உருவாய் - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
அருவாய் - குருவாய் வருவாய் அருள்வாய் குகனே!
என்பதைப் போல, ஒவ்வொரு வார்த்தைக்கும் பார்க்கவேண்டும். அருணகிரிநாதர் நினைத்துச் சொல்லியிருக்கும் குருநாதரின் மகிமை புரியும்.
ஆரம்பத்தில் குருவைச் சொல்லி, நடுவிலும் குருவைச் சொல்லி, கடைசியிலும் குருவைச் சொல்லியிருப்பதைப் பார்க்கும் போது, அருணகிரிநாதரின் குருபக்தி மகிமை நமக்குப் புரிகிறது.
முதல் பாடலின் முதல்வரியும் குரு; கடைசிப் பாடலின் கடைசிவரியும் குரு - என அருணகிரிநாதர் அமைத்திருப்பது, 'குருநாதரைத் தேடு! அவர் திருவடியை நாடு!' என்பதை நமக்கு உணர்த்தவே!


குருவருளின்றி திருவருள் இல்லை!




நீங்கள் செய்யும் தொண்டு மனபாண்மையும் சேவையும் குரு தான் .
எவ்வளவு பெரிய புண்ணியம் என்பது தெரியுமா? இருவினை தீர்க்கும் குருவின் பெருமை கேட்பது படிப்பது.

அதென்ன இருவினை ?

‘முன்னை வினையின் முடிச்சை அவிழ்ப்பர்கள், பின்னை வினையைப் பிடித்து பிசைவர்கள்’ என்கிற இந்த ஒரு வரி போதும் குருவின் பெருமையை உணர்த்துவதற்கு. நமது முன்ஜென்ம வினையின் முடிச்சை அவிழ்ப்பார்கள். பின்னால் வரக்கூடிய வினையை மாற்றிடுவார்கள். இது குருவருளாலே மட்டும் தான் முடியும்.
குருவின் பெருமையையும் குரு பக்தியின் சிறப்பையும் விவரிக்கும் . . மாதா, பிதா, குரு, தெய்வம் என்று வேதத்தில் கூறப்பட்டிருக்கும் வாக்கியம் சாதாரண வாக்கியம் அல்ல. எண்ணற்ற அர்த்தங்கள் கொண்டது. பல நீதிகளை சொல்வது.
தீமைகள் மலிந்து கிடக்கும் கலியுகத்தில் கலியின் தீமை நம்மை அண்டாது இருக்கவேண்டுமெனில் குரு அருள் அவசியம் தேவை.
மகா குரு ஸ்ரீ ராகவேந்திரர், நடமாடும் தெய்வமாக விளங்கிய காஞ்சி மகா பெரியவர், பாம்பன் ஸ்வாமிகள், திருமுருக.கிருபானந்த வாரியார் ஸ்வாமிகள், மகாவதார் பாபாஜி, ஷீரடி சாய்பாபா, வள்ளி மாலை ஸ்வாமிகள், இராமலிங்க அடிகளார் இவர்களை போன்ற மகான்களில் எவரேனும் ஒருவரை குருவாக ஆத்மார்த்தமாக ஏற்றுக்கொண்டு அவர்கள் காட்டிய நெறிமுறைப்படி வாழ்ந்து வரவேண்டும்.
இது ஒன்றே கலியுகத்தின் தீமைகளிலிருந்து நம்மை காத்துக்கொள்ளும் வழி. இறைவனின் அருளைப் பெறவும் வழி.
குரு என்ன இறைவனை விட உயர்ந்தவரா? என்ற சந்தேகம் உங்களுக்கு இருக்கக்கூடும். குருவருளின்றி திருவருள் இல்லை.
மும்மூர்த்திகளின் அம்சமாக அனுசூயா தேவிக்கு பிறந்த ஸ்ரீ தத்தாத்ரேயரின் மகிமைகளை விளக்கும் குரு சரித்திரத்தில் வரும் கீழ்கண்ட வரலாற்றை படியுங்கள்… உங்கள் சந்தேகம் தீரும்.
குருவருளின்றி திருவருள் இல்லை!
கோதாவரி நதிக்கரையில் அங்கரீச மகரிஷி ஆசிரமம் இருந்தது. அங்கு நல்லோர்கள், தவம் செய்பவர்கள், விரதத்தை கடைப்பிடிப்பவர்கள் பலர் இருந்தார்கள். அவர்களில் பைலமுனி என்பவரின் புதல்வர் வேததர்மன் என்பவர் இருந்தார். அவருக்கு அனேக சீடர்கள் இருந்தார்கள். வேததர்மன் தன சீடர்களின் குரு பக்தியின் சிரத்தையை தெரிந்து கொள்ள நினைத்து அவர்களை அழைத்து, “என் முற்பிறவியில் செய்த பாவங்களினால் பெற்ற கர்மாவை இந்தப் பிறவியில் என் தவத்தினால் கொஞ்சம் போக்கினேன். மீதமுள்ள கர்மாவை போக்குவதற்கு மற்றுமொரு பிறவி எடுத்து தவம் செய்ய வேண்டும். எனக்கு மீண்டும் ஒரு பிறவியில் விருப்பமில்லை. எனவே அதை நாம் இப்பிறவில் அனுபவிக்க வேண்டுமென்று எண்ணி அதற்காக எல்லா பாவங்களையும் போக்கும் காசிக்கு சென்று அங்கு 21 வருடம் ‘தொழுநோய் பெற்று குருடனாகவும், முடவனாகவும் வாழ்ந்து என் பாவங்களை போக்கிக் கொண்டு முக்தி அடைய திட்டமிட்டுள்ளேன். ஆகையால் அங்கு எனக்கு பணிவிடைகள் செய்து துணையாக இருக்க யார் உங்களில் தயாராக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார்.
தொழு நோயாளிக்கு சேவை செய்யவேண்டுமா என இதைக் கேட்ட பலர் தயங்கினர். மேலும் சிலர் குரு சேவையில் குறை நேர்ந்தால் என்ன நடக்குமோ என்று பயந்து மௌனமாய் இருந்தார்கள். ஆனால் தீபகன் என்ற சீடன் மட்டும் முன் வந்து, சுவாமி, “நீங்கள் அனுமதி கொடுத்தால் உங்களுக்குப் பதிலாக நான் 21 வருடங்கள் குருடனாகவும், முடவனாகவும், மாறி தொழுநோய் பெற்று அந்த கர்மாவை அனுபவிப்பேன்” என்று வேண்டினான். இதைக் கேட்ட குரு “எவனொருவன் பாவம் செய்கிறானோ அவனே அந்த பாவ கர்மாவை அனுபவித்தாக வேண்டுமே தவிர, வேறொருவர் அனுபவித்தால் அந்த கர்மா தீராது. ஆகையால் நானே அதை அனுபவிக்க வேண்டும். நோயாளிகளுக்கு சேவை செய்வது மிகக் கடினமானது. அதற்கு சம்மதமானால் நீ என்னுடன் வரலாம்” என்றார். தீபகன் சம்மதித்து குருவுடன் காசிக்குச் சென்றான்.
அங்கு வேததர்மன் மணிகர்ணிகா கட்டத்தில் நீராடி விஸ்வநாதரை வணங்கி அருகிலுள்ள கன்பலாஸ்வரத்தில் தன் சீடன் தீபகன் கட்டிய குடீரத்தில் வாழ ஆரம்பித்தார்.
உடனே அவர் கண் பார்வை இழந்து, முடவனாகி, தொழுநோய் உடலில் ஏற்பட்டது. உடலில் புண்கள் ஏற்பட்டு சீழ், புழுக்களுடன் துர்நாற்றம் வரத் தொடங்கியது. மேலும் அவர் மனநிலையும் பிறழ்ந்தது.
இந்நிலையில் தீபகன் தன் குருவுக்கு செய்யும் சேவையை காசி விஸ்வநாதருக்கு செய்யும் சேவையைப் போல் பாவித்து தினமும் குருவுக்கு நீராட்டி, புண்களைத் துடைத்து, பாத பூஜை செய்து பிச்சை எடுத்து சோறூற்றி வந்தார். ஆனால் குருவோ தனக்கு சேவைகள் சரியாக செய்யவில்லை என்றும், புண்களை சரியாக துடைத்து விடாததால் ஈக்கள் என்னைக் கடிக்கின்றன அவற்றை விரட்டு என்றும் கோபிப்பார். அப்பொழுது தீபகன் உடலை சுத்தம் செய்ய முற்பட்டால் கோபித்து எனக்கு பசியாக இருக்கிறது சீக்கிரமாக சாப்பாடு கொண்டுவா என்பார். அவன் நல்ல சாப்பாடு கொண்டு வந்தால் அது நன்றாக இல்லை என்று தூக்கி எறிவார். சில நேரங்களில் நீ நன்றாக சேவை செய்கிறாய் என்று பாராட்டுவார். உடனே கோபித்து “நீ என்னை மிகவும் துன்புறுத்துகிறாரய் . நீ இங்கிருந்து செல்” என்பார். ஆனால் தீபகனோ இவை எதனையும் பொருட்படுத்தாமல், பாவம் அதிகமாக உள்ளவர்களுக்கு துன்பங்களுடன் கொடூரமும் இருக்குமென்று நினைத்து குருவை பக்தியுடன் சேவிக்கலாணன். குருவே சகல தேவதா ரூபமென்று நினைத்து காசி ஷேத்திர யாத்திரையும் செய்யாமல் அங்கு தேவதைகளையும் சேவிக்காமல் குரு சேவையில் மூழ்கினான்.
மந்த்ராலயத்தில் ஸ்ரீ சுயதீந்த்ர தீர்த்தர் ஸ்ரீ ராகவேந்திரரின் பாதுகைக்கு பூஜை செய்யும் அற்புத காட்சி
ஒரு நாள் காசி விஸ்வநாதர் தீபகனின் குரு பக்திக்கு உவந்து தரிசனம் தந்து “என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார். அவன் குருவின் அனுமதி இல்லாமல் எந்த வரமும் கேட்க முடியாது என்று கூறி, தன் குருவிடம் சென்று இந்த விஷயத்தை கூறி “உங்கள் வியாதி போகும்படி நான் வரம் கேட்கலாமா?” என்றான்.
அப்போது அவர், “என்னடா எனக்கு சேவை செய்வது உனக்கு கடினமாக உள்ளதா? என் பாவத்தை தீர்க்க என் கர்மாவை நானே அனுபவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன் ஆகையால் நீ எந்த வரமும் கேட்க வேண்டாம்” எண்டு கோபித்துக் கொண்டார்.
தீபகன் காசி விஸ்வநாதரை பார்த்து “ஸ்வாமி, எனக்கு என் குருவே சகலமும். என் குருவிற்கு விருப்பமில்லாதது எனக்கு வேண்டாம். ஆகையால் நீங்கள் செல்லலாம்” என்றான்.
காசி விஸ்வநாதர் இதைக் கேட்டு மிக்க ஆச்சிரியப்பட்டு உடனே வைகுண்டதிற்குச் சென்று விஷ்ணுவிடம் தீபகனின் குரு பக்தி பற்றி தெரிவித்தார். இதைக் ஆச்சரியப்பட்ட விஷ்ணு தீபகனின் குரு பக்தியால் ஆனந்தப்பட்டு அப்படிப்பட்ட சீடனைப் பார்க்க்க வேண்டுமே என்று தீபகனிடம் சென்று அவனிடம் “பாலகா உன்னுடைய குரு பக்திக்கு நான் பெரும் சந்தோஷப்பட்டேன் உனக்கு என்ன வரங்கள் வேண்டுமோ கேள். அவற்றை நான் தருகிறேன்” என்றார்.
தீபகன் விஷ்ணுவை வணங்கி “தேவா…. வரங்களைப் பெற உங்களுக்க தவம் செய்பவர்களை விட்டு விட்டு உங்களை என்றும் வணங்காத எனக்கு தரிசன தந்தீர்களே ஏன்?” என்று கேட்டார்
விஷ்ணு “அப்பனே குருவை பக்தியுடன் சேவித்தால் என்னை சேவிப்பது போல் ஆகும். அப்படிப்பட்ட உத்தமனான சீடனுக்கு நான் வசமாகிறேன். தாய், தந்தையர்களை, வித்வான்களை, பிராமணர்களை, யதுகளை, யோகிகளை, தவம் புரிபவர்கள், திருநீறு பூசியவர்களை, கணவனே கண்கண்ட தெய்வம் போல் நினைத்து அவர்களை சேவிக்கும் உத்தமிகள், எல்லோரும் என்னை சேவிப்பவர்கள் ஆவார்கள். ஆகையால் என்ன வரம் வேண்டுமோ கேள்” என்றார்.
தீபகன் விஷ்ணுவை வணங்கி “குருவே சகல தேவதா ஸ்வரூபம், சகல தீர்த்த சொரூபம் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன. நீங்கள் கொடுக்கும் வரங்கள் குரு அவர்கள் கொடுக்க முடியுமல்லவா?” என்றான். ஸ்ரீமன் நாராயணன் “நாங்கள் இருவரும் ஒன்று ஆகையால் எங்கள் சந்தோஷத்திற்காக வரம் கேள்” என்றார்.
“சுவாமி அப்படி என்றால் என்றும் என் குரு பக்தி பெருகிக் கொண்டிருக்குமாறு அருள் புரியுங்கள்” என்று வேண்டினான். லக்ஷ்மிபதி சந்தோஷமடைந்து “குரு சேவாயால் நீ உயர்ந்து விட்டாய். சகல தேவதைகள் உன் வசமாகி விடுவார்கள். இந்தக் காசி விஸ்வநாதர் என்றும் கண் இமை போல் உன்னைக் காப்பாற்றுவார். எவனொருவன் குருவே பரமார்தமென்றும், சகலமும் அவர் என்றும், மும்மூர்த்திகளின் அவதாரமென்றும் அறிந்து அவரை சேவிக்கிறானோ அவனுக்கு எல்லா வளமும் கிடைத்து சுகமாக வாழ்வான். குருவை சேவிப்பவர்களுக்கு மும்மூர்த்திகள் என்றும் வசமாவார்கள். மும்மூர்த்திகளின் அருளினால் மனிதர்களுக்கு சத்குரு கிடைப்பார்” என்று கூறி மறைந்தார்.
தீபகன் தன குருவான வேத தருமரிடம் சென்று நடந்ததை எல்லாம் சொல்ல குரு மிக்க மகிழ்ச்சியுடன் “மகனே உன் குருபக்திக்கு மிக்க மகிச்சி அடைந்தேன். நீ காசியில் சுகமாக வாழ உனக்கு நவநிதிகள். எல்லா சித்திகளும் வசமாகும். எல்லா கல்விச் செல்வங்கள் உன்னிடம் வந்தடையும். உன் நாமத்தை சொல்வதினால் மனிதர்களின் சகல வியாதிகள், துன்பங்கள் நிவர்த்தியாகும். உன்னை பக்தியுடன் துதிப்பவர்களுக்கு எல்லா வளமும் கிடைக்கும். கலியுகத்தில் அனைவரையும் துன்புறுத்தும் கலியின் தீமை குருபக்தி இருப்பவர்களை மட்டும் அண்டாது!” என்று ஆசிர்வதித்து பிரகாசமான உடலைப் பெற்றார்.
வேததர்மர் ஒரு சீடன் எப்படி சேவை செய்ய வேண்டும், முக்தி வேண்டுகிறவர்கள் எப்படி தன் பாவ கர்மாவை அனுபவிக்க வேண்டுமென்றும் உலகிற்கு தெரிவிப்பதற்காக இப்படி ஒரு ரூபம் எடுத்தார். நாடகம் நடத்தினார்.
எவனொருவன் மிக்க பக்தியுடன் சிரத்தையுடன் குருவை சேவிக்கிறானோ அவனுக்கு சகல தேவதைகள் வசமாகும். ஆகையால் குரு சேவையில் வாழ்வை கழிக்கவேண்டும்.

Monday, September 1, 2014

சிதம்பரம் நடராஜர் கோவில்



சிதம்பரம் நடராஜர் கோவில், கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம் எனும் பஞ்சபூதங்களுள் ஒவ்வொன்றுக்கும் ஒரு கோவில் உள்ளது. அந்த வகையில் சிதம்பரம் நடராஜர் கோவிலும் பஞ்சபூதஸ்தலங்களுள் ஒன்று. இந்தக் கோவில் ஆகாயத்தை குறிக்கிறது. மொத்தக் கோவிலும் சிதம்பரத்தில் இருக்கும் பொது தீட்சிதர்களின் நிர்வாகம் தான் நடக்கிறது இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கீழ் உள்ளது. கிட்டத்தட்ட 40 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்தக் கோவில் சிதம்பரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது.
இந்தக் கோவிலில் முக்கிய கடவுள்கள், நடராஜர் மற்றும் கோவிந்தராஜ பெருமாள். ஒரே கோவிலில் சைவர்களின் கடவுளான சிவனும், வைஷ்ணவர்களின் கடவுளான பெருமாளும் இங்கு இருப்பது சிறப்பு. சிதம்பரம் என்னும் பெயர் சித்தம்பலம் எனும் பெயரில் இருந்து வந்ததாகவும், அதற்கு முன்னர் தில்லை என்றும் அழைக்கப்பட்டு வந்தது.
இங்கு தில்லை மரங்கள் அதிகம் இருந்ததால் இந்த இடம் தில்லை என்று அழைக்கப்பட்டது. சித்தம்பலம் என்றால் சிவனின் ஆனந்த நடனம் நடந்த இடம் என்றும் கூறலாம்.
சிதம்பரம் கோவிலில் கோவிந்தராஜப் பெருமாளும், புண்டரீகவள்ளித் தாயாரும் காட்சியளிக்கின்றனர். இதனால் இந்தத் தளம் தில்லை திருசித்திரக்கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. 108 திவ்யதேசங்களில் இதுவும் ஒன்று. ஒரே கோவில் சிவனாலும், பெருமாளாளும் பெருமை அடைந்தது என்றால் அது சிதம்பரமே.
மேலும் சிவன் நடனமாடிய ஐந்து இடங்களுள் இதுவும் ஒன்று. இந்தத் தலம் கனகசபை என்றழைக்கப்படும்.
1) சிதம்பரம் - கனகசபை
2) திருவாலங்காடு - இரத்தினசபை
3) மதுரை - வெள்ளிசபை
4) திருநெல்வேலி - தாமிரசபை
5) திருக்குற்றாலம் - சித்திரசபை.
இதுமட்டுமல்லாது, சிதம்பரம் கோவிலிலேயே நடராஜப் பெருமானுக்கு ஐந்து சபைகள் உள்ளன.
சிற்சபை - இது சிற்றம்பலம் என்றும் அழைக்கப்படும். முதல் பராந்தக சோழன் இந்த சபைக்கு பொன்னால் ஆன கூறை வேய்ந்தாதாக திருவாலங்காட்டுச் செப்பேடுகள் கூறுகின்றன.
கனகசபை - இது பொன்னம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உள்ள ஸ்படிக லிங்கத்துக்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. இந்தச் சபைக்கு முதலாம் ஆதித்த சோழன் பொன்னால் ஆன கூறை வேய்ந்ததாக கூறுவர்.
ராஜசபை - இது ஒரு ஆயிரம் கால் மண்டபம். ஆனி மற்றும் மார்கழி மாத திருவிழாக்களில் இங்கு நடராஜர் காட்சியளிப்பது உண்டு.
தேவசபை - இது பேரம்பலம் என்று அழைக்கப்படுகிறது. இதன் கூறை செம்பினால் வேயப்பட்டது. இதனுள் பஞ்ச மூர்த்திகள் எனப்படும் விநாயகர், முருகன், சோமாஸ்கந்தர், அம்பாள் மற்றும் சண்டிகேஸ்வரர் ஆகியோர் உள்ளனர்.
நிருத்தசபை - இந்த சபை கொடிமரத்துக்கு தென்புரத்தில் உள்ளது. இங்கு சிவன் காளியுடன் நடனமாடினார்.
இந்தக் கோவிலின் மற்றுமொரு சிறப்பு, சிவன் மற்ற கோவில்களை போல் லிங்க வடிவில் இல்லாமல் வேறு உருவமுடையவராக காட்சி தருகிறார். இங்கு காணப்படும் உருவம் சிவன் ஆடிய ஆட்டத்தின் ஒரு பாவம் என்று சொல்லலாம். இங்கு அவர் ஆனந்த தாண்டவம் ஆடியதாக கூறுவதும் உண்டு. பூதத்தை மிதித்துக்கொண்டு, கையில் தீயுடன், ஒரு கையையும், காலையும் தூக்கி, ஒரு கையில் மத்தளத்தை ஏந்தி, ஒரு வட்டத்துக்குள் காட்சியளிக்கிறார் நடராஜர்.
கோவிலுக்கு செல்ல மொத்தம் ஒன்பது வழிகள் உள்ளன, அவற்றில் நான்கு திசைகளிலும் ஏழு அடுக்குகளுடைய கோபுரம் உள்ளது. மேற்கு மற்றும் கிழக்கு கோபுரங்கள் 160 அடி உயரம் கொண்டவை. இதில் கிழக்கு கோபுரத்தில் பரதநாட்டியத்தில் குறிப்பிடப்படும் 108 வகையான தோற்றங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இதில் என்ன சிறப்பு என்றால் ஒவ்வொரு கோபுரமும் ஒவ்வொரு மன்னனால் கட்டப்பட்டது. தெற்கு கோபுரம் பாண்டிய மன்னனாலும், மேற்கு கோபுரம் கிருஷ்ணதேவராயராலும், கிழக்கு கோபுரம் பல்லவன் இரண்டாம் கோப்பெருசிங்கனாலும், வடக்கு கோபுரம் முதலாம் சுந்தர பாண்டியனாலும் கட்டப்பட்டாதாகவும் வரலாற்றுச் சின்னங்கள் தெரியப்படுத்துகின்றன.
மேலும் மேற்குக் கோபுரம் வழியாக திருநாவுக்கரசர், தெற்குக் கோபுரம் வழியாக திருஞானசம்பந்தர், வடக்கு கோபுரம் வழியாக சுந்தரர், கிழக்குக் கோபுரம் வழியாக மாணிக்கவாசகரும் வந்து சிவபெருமானை வழிபட்டுள்ளதாகவும் வரலாறு கூறுகிறது. இவர்கள் இந்தக் கோவிலின் உள்நுழைந்ததை குறிக்கும் வகையில் ஒவ்வொரு கோபுரத்திலும் அக்கோபுரத்தின் வழியாக வந்தவரின் படத்தைக் காணலாம்.
மற்ற கோவில்களைப் போலவே அறுபத்துமூவர், விநாயகர், முருகன் சந்நிதிகளும் உள்ளன. பதஞ்சலி முனிவரும், வியாக்ய பாரதரும் வழிபட்ட சிவலிங்கம் - திருஆதிமூலநாதரும், உமையம்மையும் உள்ளனர். இங்கு இருக்கும் விநாயகர் சங்கு ஊதுவதை போல காட்சியளிக்கிறார். கோவிலின் உள்ளே சிவகங்கை எனும் பெயரில் பெரிய குளமும், சிற்சபைக்கு அருகில் பரமாநந்த கூபம் எனும் பெயரில் கேணியும் உள்ளன. இந்த சிவகங்கை தீர்த்தத்தில் நீராடியதால் 500 ஆம் ஆண்டு இங்கு வந்த ஹிரண்ய சக்கரவர்த்திக்கு தொழுநோய் குணமானதாகவும் வரலாறு உண்டு. 500ஆம் ஆண்டுக்குப் பின்னரே பல மன்னர்களால் கோவில் உருவாக்கப்பட்டுள்ளது என்று வரலாறுகள் கூறுகின்றன.
எல்லாவற்றிற்கும் மேல் சிதம்பரம் கோவிலில் முக்கியமானது சிதம்பர ரகசியம். சிற்சபையில் சபாநாயகரின் வலது பக்கத்தில் உள்ள ஒரு சிறு வாயிலில் உள்ள திரை அகற்றப்படும்போது கற்பூர ஆரத்தி காட்டப்பெறும். இதனுள்ளே தங்கத்தாலான வில்வ தள மாலை ஒன்று சுவரில் தொங்கவிடப்பட்டுக் காட்சி அளிக்கும். மூர்த்தி ஏதும் இல்லாமலேயே வில்வதள மாலை தொங்கும். இதன் ரகசியம், இறைவன் இங்கு ஆகாய உருவில் இருக்கின்றார் என்பதை உணர்த்துவதேயாகும்.
திருவெண்காடு தலமே ஆதிசிதம்பரம் என்றும்; சிதம்பரம் சிற்சபையில் காணும் நடராஜப் பெருமானின் திருமேனி ராஜராஜன் காலத்தில்தான் தோற்றுவிக்கப்பட்டது என்றும், அதன் பின்னரே தமிழ்நாட்டில் அனைத்துச் சிவாலயங்களிலும் நடராஜர் திருமேனி அமைக்கப்பட்டு வழிபாட்டில் சிறப்புடன் விளங்குவதாகவும் சிலர் கூறுவர்.
இந்தக் கோவிலின் மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால், பஞ்சபூதஸ்தலங்களுள் காளஹஸ்தி, காஞ்சிபுரம் மற்றும் சிதம்பரம் ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமைந்துள்ளன. மற்ற இரண்டு தலங்களான திருவண்ணாமலையும், திருவானைக்காவலும் இந்த நேர்கோட்டில் இருந்து சற்றே விலகியுள்ளன.
தினமும் நடராஜருக்கு ஆறு பூஜைகள் நடப்பதை குறிக்கும் வகையில் வருடத்தில் ஆறு விழாக்கள் இங்கு கொண்டாடப்படுகின்றன.
1)முதல் பூஜையை குறிக்கும் வகையில் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் ஆருத்ரா தரிசனமும்
2)இரண்டாம் பூஜையை குறிக்கும் வகையில் மாசி மாதம் சதுர்த்தசியிலும்,
3)மூன்றாம் பூஜையை குறிக்கும் வகையில் சித்திரை மாதம் திருவோணத்திலும்
4)நான்காம் பூஜையை குறிக்கும் வகையில் ஆனி மாதம் உத்திரத்தில் ஆனி திருமஞ்சனமும்,
5)ஐந்தாம் பூஜையை குறிக்கும் வகையில் ஆவணி மாதம் சதுர்த்தசியிலும்.
6)ஆறாம் பூஜையை குறிக்கும் வ்கையில் புரட்டாசி மாதம் சதுர்த்தசியிலும் விழாக்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன.

ஸ்ரீ மகாலஷ்மி மகிமை





ஸ்ரீ மகாலஷ்மி அருள் கிடைக்க தேவர்கள் முதல் முனிவர்கள் வரை தவம் இருப்பார்கள். அவ்வளவு ஏன் ஸ்ரீமந் நாராயணனும், செல்வத்தின் அதிபதியான குபேரனும் கூட ஸ்ரீ மகாலஷ்மியின் அருளுக்காக தவம் இருந்திருக்கிறார்கள். ஆனாலும் ஸ்ரீ மகாலஷ்மி, தனக்கு பிடித்தவர்கள் மேல்தான் தன் அருள் பார்வையை செலுத்துகிறார். அப்படி லஷ்மியின் பார்வை பெற்றவர்கள் சிலர்தான். கடும் தவம் இருந்தால்தான் ஈசனும், உமையவளும, பெருமாளும் காட்சி தருவார்கள். ஆனால் மகாலஷ்மியோ, குழந்தை மனம் படைத்தவர் என்கிறார்கள் மகரிஷிகள். லஷ்மி கடாக்ஷம் பெற்றவர்கள், பிறகு தங்கள் மனம் போன போக்கில் தீய வழிகளில் சென்றால், அவர்களின் மீது இருந்த கருணை பார்வையை அகற்றி விடுவாள். லஷ்மிதேவிக்கு அலைமகள் என்கிற பெயரும் உண்டு. காரணம் கடலில் இருந்து தோன்றியவள் என்பதால் மட்டுமல்ல. அலையை போன்று ஒரு இடத்தில் நிலையாக லஷ்மி கடாக்ஷம் இருக்காது. அப்படி இருக்க வேண்டும் என்றால், ஸ்ரீமகாலஷ்மி வழிப்பாட்டில் நாம் எப்போதும் சரியாக-கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள் முனிவர்களும் மகரிஷிகளும். லஷ்மி தேவி உருவான கதை ஸ்ரீமகாலஷ்மி எப்படி உருவானார்.? அவருக்கு எத்தனை பெயர்கள்.? அத்தனை பெயருக்கும் ஒரு காரணம் இருக்கிறது. அவை என்ன? போன்ற விஷயங்களை நாரதர், ஸ்ரீமந் நாராயணனிடம் கேட்டு தெரிந்து கொண்டார் என்கிறது “தேவிபாகவதம்.” ஸ்ரீமந் நாராயணன் சொல்கிறார்… “பாற்கடலில் தோன்றியவளே ஸ்ரீமகாலஷ்மி. லஷ்மி என்றால் கருணையோடு பார்ப்பவர் என்று அர்த்தம். இதனால் அவள் “லஷ்மி” என்ற நாமத்தில் வைகுண்டத்தில் இருந்து தன்னை வணங்கும் பக்தர்களுக்கு அருள் தந்து கொண்டு இருக்கிறாள். ராஜ்யங்களில் ராஜ்ய லஷ்மியாகவும், நாம் வசிக்கும் வீடுகளையும் “கிருகம்” என்று அழைக்கப்படுவதால், இல்லறவாசிகளுக்கு அருள் தந்திட கிருக லஷ்மியாகவும், எல்லாப் பிராணிகளிடத்தில் சோப லஷ்மியாகவும், புண்ணியவான்களிடத்தில் ப்ரீதி லஷ்மியாகவும், சத்திரியர்களிடத்தில் கீர்த்தி லஷ்மியாகவும், வைசியர்களிடத்தில் வர்த்தக லஷ்மியாகவும், பாவிகளிடத்தில் கல லஷ்மியாகவும், வேதாந்திகளிடத்தில் தயா லஷ்மியாகவும் இருக்கிறாள் ஸ்ரீமகாலஷ்மி. இப்படி எல்லா ஜீவராசிகளிடத்திலும் லஷ்மி வாசம் செய்கிறாள். லஷ்மி பாற்கடலில் தோன்றினாள். இவளை நான் சித்திரை, தை, புரட்டாசி மாதத்திலும், செவ்வாய் கிழமைகளிலும் வணங்கி லஷ்மியின் அன்பை பெற்றேன். அதற்கு முன் குபேரனிடம் கடன் பெற, சிவபெருமானிடமும் பிரம்மனிடமும் கடன் பத்திரத்தில் சாட்சி கையெழுத்து வாங்கி குபேரனிடம் கடன் பெறும் நிலையில் இருந்தேன். பிரம்மன், புரட்டாசி மாத சுக்கிலாஷ்டமியிலும், தைமாத சங்கராந்தியிலும், மாசி மாதம் சங்கராத்திலும் பூஜித்து நலங்களை பெற்றார். இப்படி தெய்வங்களும், முனிவர்களும், மகரிஷிகளும் ஸ்ரீமகாலஷ்மியை பூஜித்து பயன் பெற்றோம்.” என்று நாரத முனிவரிடம் ஸ்ரீமந் நாராயணனன் கூறினார். ஸ்ரீமகாஷ்மியை அவமதித்தவன் பட்ட அவதி சங்கீத வித்தகியான “வித்தியாரத” என்ற பெண், வைகுண்டத்தில் லஷ்மிக்கும் நாராயணனுக்கும் யாழ் வாசித்தாள். அந்த இசையில் மகிழ்ந்த லஷ்மிதேவி, அந்த பெண்ணுக்கு தாம் அணிந்திருந்த மலர் மாலையை பரிசாக கொடுத்தார். லஷ்மிதேவி தனக்கு கௌரவம் தந்ததற்கு இந்த யாழ்தான் காரணம் என்று உணர்ந்து, அந்த யாழ்க்கு லஷ்மிதேவி தந்த மலர்மாலையை போட்டு அலங்கரித்து, அதை பலரும் பார்க்கும் விதமாக பெருமையோடும், மகிழ்ச்சியோடு எடுத்து வந்து கொண்டு இருந்தாள் வித்தியாரத. இந்த தகவல் அறிந்த துர்வாச மகரிஷி, அந்த வித்தியாரத பெண்ணை வணங்கினார். யாருக்கும் வணங்காதவர் தம்மை பார்த்ததும் வணங்குகிறாரே என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியும் அடைந்த வித்தியாரத, ஸ்ரீமகாலஷ்மி கொடுத்த மலர் மாலையை யாழில் இருந்து எடுத்து துர்வாச மகரிஷியிடம் கொடுத்தார். அதை அன்புடன் பெற்றுக்கொண்டு வந்துக்கொண்டிருந்தார் துர்வாச முனிவர். அப்போது அவர் எதிரில் இந்திரன் தன் யானையான ஐராவதத்தில் ஏறி வந்துக் கொண்டு இருந்தார். இந்திரனை கண்ட துர்வாச மகரிஷி, தன் கையில் இருந்த மலர்மாலையை, “இது ஸ்ரீமகாலஷ்மி அணிந்திருந்தது” என்பதை சொல்லி, இந்திரனிடம் தந்தார். ஸ்ரீமகாலஷ்மி அணிந்திருந்த மலர் மாலை என்ற தெரிந்தும், அதனை அலட்சியமாக யானையின் தலை மீது போட்டான் இந்திரன். இந்திரனின் செயலை கண்ட முனிவர் கோபத்தோடு, “உன்னிடம் இருக்கும் லஷ்மிகடாச்சம் போகட்டும்” என்று சபித்து விடுகிறார். இதன் பிறகு இந்திரன், பரதேசியாகும் நிலை ஏற்பட்டது. தன் நிலைமை இப்படி ஆகிவிட்டதே என்று மனம் வருந்தி குருபகவானிடம் தன் நிலையை சொல்லி வருத்தப்பட்டார். “பிரம்மனை நினைத்து தவம் செய்” என்றார் குருபகவான். இந்திரனும் பிரம்மனை நினைத்து தவம் செய்தான். பிரம்மன் இந்திரனின் தவத்தை ஏற்று, “ஸ்ரீலஷ்மிதேவியை நினைத்து தவம் செய். அவள் பார்வை பெற்றால்தான் உன் பாவ நிலை மாறும்.” என்றார். அதன்படி இந்திரனும் கடும் தவம் புரிந்தான். இதன் பயனால் மீண்டும் ஸ்ரீமகாலஷ்மி அருள் பார்வை கிடைத்து, மீண்டும் இந்திர பதவியை பெற்றான். குழந்தை பாக்கியம் தரும் சந்தான லஷ்மி பிருகு முனிவர் விஷ்ணுபகவானை பார்க்க வந்தார். அப்போது விஷ்ணுபகவான் லஷ்மி தேவியிடம் பேசிக்கொண்டு இருந்ததால் பிருகு முனிவர் வந்திருப்பதை கவனிக்கவில்லை. ஏற்கனவே கோபத்தின் உச்சத்தில் இருந்ததால் ஸ்ரீநாராயணன் தம்மை அவமானப்படுத்தியதாக நினைத்துவிட்ட பிருகு முனிவர், நேராக விஷ்ணுபகவான் முன் சென்று அவர் மார்பில் எட்டி உதைத்தார். இதை கண்ட லஷ்மிதேவி பெரும் சினம் கொண்டாள். ஆனால் விஷ்ணுபகவானோ பிருகு முனிவரின் காலைப் பிடித்து கொண்டு, “என்னை எட்டி உதைத்ததால் உங்கள் கால் வலிக்கிறதா?” என்ற பிருகு முனிவரின் கால்களை பிடித்து தடவி கொடுத்தார். இதை சற்றும் எதிர்பார்க்காதே லஷ்மிதேவி, கோபத்தோடு வைகுண்டத்தில் இருந்து வெளியேறினார். இதனால் விஷ்ணுபகவான் மட்டும் கவலையடையவில்லை, பிருகு முனிவரும் வருத்தப்பட்டார். அத்துடன் அவருக்கு இருந்த மனமகிழ்ச்சி போனது போல் ஒரு உணர்வு உண்டானது. இதனால் ஸ்ரீமகாலஷ்மிதேவியை தன் மகளாக வளர்த்தால், விலகி போன தன் மன நிம்மதியும் மகிழ்ச்சியும் திரும்ப கிடைக்கும் என்று உணர்ந்து, சந்தான லஷ்மியை நினைத்து தவமிருந்து ஸ்ரீமகாலஷ்மியை மகளாக பெற்று பாசத்துடன் வளர்த்தார். அதேபோல் சந்தான பாக்கியம் இல்லாமல் வருந்திய நீதிமான் என்ற அரசர், சந்தான லஷ்மியை வணங்கி லஷ்மி தேவியை மகளாக பெற்றார். இப்படி குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் சந்தான லஷ்மியை வணங்கினால் நிச்சயம் அவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். தைரிய லஷ்மி இருந்தாலே அஷ்டலஷ்மிகள் வாசம் செய்யும் மன்னர் போஜ ராஜன், தினமும் ஸ்ரீகஜலஷ்மியை பூஜித்து வந்தார். அவரின் வழிபாடுக்கு மகிழ்ந்த அஷ்டலஷ்மிகளும் காட்சி கொடுத்தார்கள். மன்னர் போஜராஜன் ஸ்ரீகஜலஷ்மியை பார்த்து, “தாயே நீங்கள் என் நாட்டிலேயே எப்போதும் நிலைத்திருக்க வேண்டும்.” எனக் கேட்டுக் கொண்டார். “அது இயலாது. நான் ஒர் இடதில் மற்ற லஷ்மிகளை விட்டு தனியாக நிலைத்து இருக்கமாட்டேன்.” என்றாள் கஜலஷ்மி. சற்று யோசித்தார் அரசர். தன் புத்திசாலிதனத்தை கொண்டு, ஒவ்வொரு லஷ்மிக்கும் வெற்றிலை-பாக்கு, மஞ்சள் குங்குமத்தை கொடுத்து கொண்டே வந்தார். அதனை பெற்று கொண்ட ஒவ்வொரு லஷ்மிகளும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறிக் கொண்டிருந்தார்கள். கடைசியாக மன்னர் போஜ ராஜன் தைரியலஷ்மியின் காலில் விழுந்து, “தாயே உங்கள் பிள்ளை போல அல்லவா நான். எனக்கு நீங்கள் ஒரு வரத்துடன் சத்தியமும் செய்து தர வேண்டும். செய்வீர்களா?“ என்றார். சரி என்ன பெரியதாக கேட்டு விட போகிறான் என்ற தைரியத்தில், “தாராளமாக வரம் கேள். தருகிறேன்.” என்றார் “தாயே நீங்களாவது என்னுடனே நிலைத்திருக்க வேண்டும். இதுதான் நான் கேட்கும் வரம். கொடுத்த வாக்கை காப்பாற்றுங்கள். சத்தியத்தை மறவாதீர்கள்.” என்றார். “அப்படியே ஆகட்டும்.” என்றாள் தைரியலஷ்மி. தாம்பூலம் வாங்கி வரவேண்டிய தைரியலஷ்மி, இன்னும் வராததால் மீண்டும் போஜ ராஜனின் அரண்மனைக்கு திரும்பிய மற்ற லஷ்மிகள், நடந்த விபரத்தை அறிந்து, “என்ன போஜராஜனே உன் புத்திசாலித்தனத்தை எங்களிடமே காட்டிவிட்டாயே.” என்றார்கள். காரணம் தைரிய லஷ்மி எங்கு வாசம் செய்கிறாளோ அங்குதான் மற்ற எல்லா லஷ்மிகளும் வாசம் செய்வார்கள் என்கிற ரகசியத்தை நன்கு தெரிந்து வைத்திருந்தார் மன்னர் போஜராஜன். நவராத்திரி திருநாளில் மட்டுமல்லாமல் எந்த நாளிலும் தைரிய லஷ்மியை வணங்கினால் அஷ்டலஷ்மிகளின் அருளும் ஆசியும் நிச்சயம் பெற்று வளமோடும் நலமோடும் வாழ்வார்கள்.

ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள்-சுப்ரமண்ய புஜங்கம்

ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகள் அபிநல குப்தரின் அபிசார மந்தீரீக ஏவலால் கடும் வயிற்றுவலியால் அவதியுற்று, வட நாட்டிலிருந்து புறப்பட்டு பல திருத்தலங்களில் உள்ள கோயில்களுக்கு சென்று வழிபட்டும் அந்நோய் தீர்ந்தபாடில்லை. திருச்சீரலைவாய் என்று வழங்கப்படும் திருச்செந்தூர் வந்து
திருச்செந்திலாண்டவனை மனமுருக வேண்டி பன்னீர் இலை விபூதியை சாப்பிட்டதும் அதுவரை அவரை வாட்டி வதைத்த வயிற்றுவலி அறவே நீங்கி விட்டது கண்டு மகிழ்ச்சியால் செந்திலாண்டவனை அவர் துதித்த 33 ஸ்லோகமே ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கம் இதை மனமுருக பாராயணம் செய்வோர் தமது தீராத பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பர் திருச்செந்திலாண்டவன் அருளும் ஸ்ரீ ஆதிசங்கராச்சாரிய சுவாமிகளின் ஆசியும் ஒருங்கே பெறுவர்.


1. ஸதா பாலரூபாபி விக்நாத்ரி ஹந்த்ரீ
மஹாதந்தி வக்த்ராபி பஞ்சாஸ்ய மாந்யா
விதீந்த்ராதி ம்ருக்யா கணேஸாபிதா மே
விதத்தாம் ஸ்ரியம் காபி கல்யாண மூர்த்தி :
2. ந ஜாநாமி ஸப்தம் ந ஜாநாமி சார்த்தம்
ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம் த
சிதேகா ஷடாஸ்யா ஹ்ருதி த்யோததே மே
முகாந் நிஸ்ஸரத்தே கிரஸ் சாபி சித்ரம்
3. மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மநோஹாரி தேஹம் மஹச்சித்த கேஹம்
மஹீவே தேவம் மஹாவேத பாலம்
மஹா தேவ பாலம் பஜே லோக பாலம்
4. யதா ஸந்திதாநம் கதா மாநவா மே
பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ
இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராஸக்தி புத்ரம்
5. யதாப்தேஸ் தரங்கா லயம் யாந்தி துங்கா:
ததைவாபத: ஸந்நிதௌ ஸேவதாம் மே
இதீவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்ஸயந்தம்
ஸதா பாவயே ஹ்ருத்ஸரோஜே குஹம் தம்
6. கிரௌ மந்நிவாஸே நரா யே திரூடா:
ததா பர்வதே ராஜதே தே திரூடா:
இதீவ ப்ருவத் கந்த ஸைலா தே திரூடா
ஸ தேவேர முதே மே ஸதா ஷண்முகோ ஸ்து
7. மஹாம்போதி தீரே மஹாபாபசோரே
முநீந்த்ராநுகூலே ஸூகந்தாகயஸைலே
குஹாயாம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜநார்த்திம் ஹரந்தம் ஸரயாமோ குஹம் தம்
8. லஸத் ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸூமஸ்தோம ஸஞ்சந்த மாணிக்ய மஞ்சே
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க்க துல்யப்ராகாஸம்
ஸதா பாவயே கார்த்திகேயம் ஸூரேஸம்
9. ரணத்தம்ஸகே மஞ்ஜூலே த்யந்த ஸோணே
மநோஹாரி லாவண்ய பியூஷபூர்ணே
மந: ஷட்பதோ மே பவக்லேஸ தப்த:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே
10. ஸூவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமாநாம்
க்வணத் கிங்கிணீ மேகலா ஸோபாமாநாம்
லஸத்தேம பட்டேந வித்யோதமாநாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம்
11. புலிந்தேஸகந்யா கநாபோக துங்க
ஸ்தநாலிங்கநாஸக்த காஸ்மீர ராகம்
நமஸயாம்யஹம் தாரகாரே தவோர:
ஸ்வபக்தாவநே ஸர்வதா ஸாநுராகம்
12. விதௌ க்லுப்த தண்டாந் ஸ்வலீலாத்ருதாண்டாந்
நிரஸ்தேஸூண்டாந் த்விஷத்காலதண்டாந்
ஹதேந்த்ராரி ஷண்டாந் ஜகத்தாரண ஸெளண்டாந்
ஸதா தே ப்ரசண்டாந் ஸ்ரயே பாஹூதண்டாந்
13. ஸதா ஸாரதா: ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யு:
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாஸ்சேத் ஸமந்தாத்
ஸதா பூர்ணபிம்பா: கலங்கைஸ்ச ஹீநா:
ஸதா த்வந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்
14. ஸ்புரந்மந்த ஹாஸை: ஸஹம்ஸாநி சஞ்சத்
கடாக்ஷõவலீ ப்ருங்க ஸங்கோஜ்லாநி
ஸூதாஸ்யந்தி பிம்பா தராணீஸஸூநோ
தவாலோகயே ஷண்முகாம்போருஹாணி
15. விஸாலேஷூ கர்ணாந்த தீர்கேஷ்வஜஸ்ரம்
தயாஸயந்திஷூ த்வாதஸஸ் வீக்ஷணேஷூ
மயீஷத் கடாக்ஷ: ஸக்ருத் பாதிதஸ் சேத்
பவேத் தே தயாஸீல கா நாம ஹாநி:
16. ஸூதாங்கோத்பவோ மே ஸி ஜீவேதி ஷட்தா
ஜபத் மந்தரமீஸோ முதா ஜிக்ரதே யாத்
ஜகத்பார ப்ருத்ப்யோ ஜகந்நாத தேப்ய:
கிரீடோஜ்வலேப்யோ நமோ மஸ்தகேப்ய:
17. ஸ்புரத் ரத்ந கேயூர ஹாராபிராம:
சலத்குண்டதல ஸ்ரீலஸத் கண்டபாக:
கடௌ பீதவாஸ: கரே சாருஸக்தி:
புரஸ்தாத் மாமாஸ்தாம் புரோரேஸ் தநூஜ:
18. இஹாயாஹி வத்ஸேதி ஹஸ்தாந் ப்ரஸார்யா
ஹ்வயத்யாதராத் ஸங்கரே மாதுரங்காத்
ஸமுத்பத்ய தாதம் ஸ்ரயந்தம் குமாரம்
ஹராஸ்லிஷ்ட காத்ரம் பஜே பால மூர்த்திம்
19. குமாரேஸ ஸூநோ குஹ ஸ்கந்த ஸேநா
பதே ஸக்திபாணே மயூராதிரூட
புலிந்தாத்மஜா காந்த பக்தார்தி ஹாரித்
ப்ரபோ தாரகாரே ஸதா ரக்ஷ மாம் தவம்
20. ப்ரஸாந்தேந்த்ரியே நஷ்ட ஸம்ஜ்ஞே விசேஷ்டே
கபோத்காரி வக்த்ரே பயோத்கம்பி காத்ரே
ப்ராயாணோந்முகே மய்யநாதே ததாநீம்
த்ருதம் மே தயாளோ பவாக்ரே குஹ த்வம்
21. க்ருதாந்தஸ்ய தூதேஷூ சண்டேஷூ கோபாத்
தஹ ச்சிந்தி பிந்தீதி மாம் தர்ஜயத்ஸூ
மயூரம் ஸமாருஹ்ய மா பைரிதி த்வம்
புர: ஸக்திபாணிர் மமாயாஹி ஸீக்ரம்
22. ப்ரணம்யாக்ருத் பாதயோஸ் தே பதித்வா
ப்ரஸாத்ய ப்ரபோ ப்ரார்த்தயே நேக வாரம்
ந வக்தும் க்ஷமோ ஹம் ததாநீம் க்ருபாப்தே
ந கார்யாந்தகாலே மநாகப்புபேக்ஷõ
23. ஸஹஸ்ராண்ட போக்தா த்வயா ஸூரநாமா
ஹதஸ்தாக: ஸிம்ஹ வக்த்ரஸ்ச தைந்ய:
மமாந்தர் ஹ்ருதிஸ்தம் மந: க்லேஸமேகம்
ந ஹம்ஸி ப்ரபோ கிம் கரோமி க்வ யாம்
24. அஹம் ஸர்வதா துக்க பாராவஸந்நோ
பவாந் தீநபந்து: த்வதந்யம் ந யாசே
பவத் பக்தி ரோதம் ஸதா க்லுப்த பாதம்
மமாதிம் த்ருதம் நாஸயோமாஸூத த்வம்
25. அபஸ்மார குஷ்டக்ஷயார்ச: ப்ரமேஹ
ஜ்வரோந்மாத குல்மாதிரோகா மஹாந்த:
பிஸாசாஸ்ச ஸர்வே பவத்பத்ரபூதிம்
விலோக்ய க்ஷணாத் தாரகாரே த்ரவந்தே
26. த்ருஸி ஸ்கந்த மூர்த்தி: ஸ்ருதௌ ஸ்கந்த கீர்த்தி:
முகே மே பவித்ரம் ஸதா தச்சரித்ரம்
கரே தஸ்ய க்ருத்யம் வபுஸ்தஸ்ய ப்ருதயம்
குஹே ஸந்து லீநா மமாஸேஷ பாவா:
27. முநீநா முதாஹோ ந்ருணாம் பக்திபாஜாம்
அபீஷ்ட ப்ரதாஸ் ஸந்தி ஸர்வத்ர தேவா:
ந்ருணாமந்த்யஜாநா மபி ஸ்வார்த்ததாநோ
குஹாத் தேவமந்யம் ந ஜாதே ந ஜாதே
28. களத்ரம் ஸூதா பந்து வர்க: பஸூர்வா
நரோவாத நாரீ க்ருஹே யே மதீயா:
யஜந்நோ நமந்த: ஸ்துவந்தோ பவந்தம்
ஸ்மரந்தஸ்ச தே ஸந்து ஸர்வே குமாரா
29. ம்ருகா: பக்ஷிணோ தம்ஸகா யே ச துஷ்டா:
ததா வ்யாதயோ பாதகா யே மதங்கே
பவச்சக்தி தீக்ஷ்யாக்ரபிந்தா: ஸூதூரே
விநஸ்யந்து தே சூர்ணித க்ரௌஞ்ச ஸைல
30. ஜநித்ரீ பிதா ச ஸ்வபுத்ராபராதம்
ஸஹேதே ந கிம் தேவஸேநாதி நாத
அஹம் சாதி பாலோ பவாந் லோக தாத:
க்ஷமஸ்வாபராதம் ஸமஸதம் மஹேஸ
31. நம: கேகிநே ஸக்தயே சாபி துப்யம்
நமஸ்சாக துப்யம் நம: குக்குடாய
நம: ஸிந்தவே ஸிந்து தேஸாய துப்யம்
புந: ஸிகந்த மூர்த்தே நமஸ்தே நமோஸ்து தத
32. ஜயாநந்தபூமந் ஜயாபார தாமந்
ஜயாமோக கீர்த்தே ஜயாநந்த மூர்த்தே த
ளஜயாநந்தஸிந்தோ ஜயாஸேக்ஷ பந்தோ
ஜய த்வம் ஸதா முக்தி தாநஸ ஸூநோ தத
33. புஜங்காக்ய வ்ருத்தேந க்லுப்தம் ஸ்தவம் ய:
படேத் பக்தி யுக்தோ குஹம் ஸம்ப்ரணம்ய த
ஸ புத்ரநாத் களத்ரம் தநம் தீர்க்க மாயு
லபேத் ஸ்கந்தஸாயுஜ்ய மந்தே நர: ஸ: தத
ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதவிரசிதம்
ஸ்ரீ சுப்ரமண்ய புஜங்கஸ்தோத்ரம் ஸம்பூரணம்.